
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் நடந்த கலவரத்தை ஒட்டி அங்கு பயிலும் மாணவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் அறிவுரை வழங்கியுள்ளன.
மே 13ஆம் தேதி கிர்கிஸ்தான் - எகிப்து மாணவர்கள் இடையேயான வாக்குவாதம் மோதலாக வெடித்து, அந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனைத் தொடர்ந்து, கிர்கிஸ்தான் மாணவர்கள் வெளிநாட்டு மாணவர்களைத் தேடித்தேடி தாக்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் சர்வதேச மாணவர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனையொட்டி இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள், தங்கள் மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை வெளியிட்டுள்ளன.
சுமார் 15,000 இந்திய மாணவர்கள் கிர்கிஸ்தானில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கிர்கிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”அவர்கள் மாணவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், ’இருப்பினும் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு வெளியே செல்ல வேண்டாம்’ எனக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறி, 0555710041 என்ற, 24 மணிநேரமும் செயல்படும் அவசர எண்ணை அறிவித்துள்ளதாகவும்” தெரிவித்துள்ளனர்.
சில மருத்துவப் பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்கள் தங்கும் விடுதிகள் தாக்கப்பட்டுள்ளன. சில சமூகவலைதள விடியோக்களில் பாகிஸ்தான் மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அதேபோல் பாகிஸ்தான் மாணவிகள் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுபோன்ற எந்த சம்பவமும் நடந்தற்கான தகவல்கள் கிடைக்கவில்லை என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தூதரகம் விடுத்துள்ள செய்தியில், “பிஷ்கேக்கில் எல்லா வெளிநாட்டு மாணவர்களையும் குறிவைத்தே தாக்குதல் நடத்தப்படுகிறது. பாகிஸ்தான் மாணவர்களை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை. இருப்பினும் பாக்., மாணவர்கள் அமைதிநிலைமை திரும்பும்வரை வெளியில் வராமல் பாதுகாப்பாக இருக்கும் இடங்களிலேயே தங்கி இருக்கலாம்” என வலியுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.