19 வயதில் 100 கோடி ரூபாய்க்குச் சொந்தக்காரனான பள்ளி மாணவன்!

என்னுடைய ஆன்லைன் வர்த்தக நிறுவனத்துக்கு நான் துடிப்பான ஆண் பணியாளர்களையோ, ஏஜண்டுகளையோ பணியிலமர்த்தவில்லை. எனது நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் அத்தனை பேருமே குழந்தை பெற்ற நடுத்தர வயதுப் பெண்கள்,
19 வயதில் 100 கோடி ரூபாய்க்குச் சொந்தக்காரனான பள்ளி மாணவன்!

அக்‌ஷய் ருபரேலியா! 19 வயதில் 100 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதி. அத்தனையும் பாட்டனார், முப்பாட்டனார் சம்பாதித்து சேமித்து வைத்து விட்டுச் சென்றதில்லை. மொத்தமும் அக்‌ஷய் மட்டுமே பாடுபட்டு உழைத்துச் சேர்த்த பணம். 19 வயதில் சிறுவர்களாகவும் இல்லாமல் இளைஞர்களாகவும் இல்லாமல் தடுமாற்றமான நிலையில் இருக்கும் பருவத்தில் எல்லா இளைஞர்களுக்குமான பொதுவான கவலை ஒன்றே ஒன்று தான். அது என்னவென்றால்; ஐயோ... பாக்கெட் மணி தீர்ந்து விட்டால் மேற்கொண்டு யாரிடம் தேற்றலாம்! என்பதே! ஆனால் அக்‌ஷய்க்கு அந்தப் பிரச்னையே இல்லை பாருங்கள். சொத்து மதிப்பு 100 கோடியைத் தாண்டிய பின்பும் இந்தப் பையன் ஒரு முக்கியமான விஷயத்துக்காக இன்றைக்கும் காசு சேர்த்துக் கொண்டு தான் இருக்கிறான். அது எதற்கு தெரியுமா? தனக்குப் பிடித்தமான அழகான லக்ஸுரி கார் ஒன்றை வாங்க! பள்ளிப்படிப்பை முடித்திராத மாணவன் ஒருவன் 19 வயதுக்குள் 100 கோடிக்கும் அதிகமாகச் சொத்து சேர்த்திருக்கிறான் என்றால், அது எப்படி? என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோருக்கும் எழுவது இயற்கையே!

வடக்கு லண்டனைச் சேர்ந்த சிறுவன் அக்‌ஷய் ருபரேலியா, சமீபத்தில் எடுக்கப்பட்ட லண்டனின் இளம் கோடீஸ்வரர்கள் லிஸ்டில் இடம்பெற்றிருக்கிறார். கடந்த ஒரே வருடத்தில் அவரது நிறுவனத்தின் டர்ன் ஓவர் 103.33 மில்லியன் ரூபாய்கள். பள்ளியில் படித்துக் கொண்டே அக்‌ஷய் தொடங்கிய ஆன்லைன் பிஸினெஸ் நிறுவனத்தின் பெயர் doorsteps.co.uk. டோர் ஸ்டெப்ஸ் என்ற பெயர் கொண்ட இந்த நிறுவனத்தின் பணி இங்கிலாந்தில் வீடுகளை அதன் உண்மையான மதிப்பிற்கு நஷ்டமின்றி விற்க விரும்புபவர்களுக்கு, பொருத்தமான வாடிக்கையாளர்களைக் கண்டறிந்து அடையாளம் காட்டுவது தான். 16 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த ஆன்லைன் நிறுவனம் குறுகிய காலத்திலேயே, தற்போது லண்டனின் மிகப்பெரிய ஆன்லைன் தொழில் நிறுவனங்களின் பட்டியலில் 18 வது இடத்தைப் பெற்றுள்ளது.

தனது நிறுவனத்தைப் பற்றிப் பேசும் போது, அக்‌ஷய் சொல்வது என்னவென்றால்; ஆன்லைன் நிறுவனம் தொடங்கிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு சஸ்ஸெக்ஸ் எனும் இடத்திலிருந்து ஒருவர் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டார். சஸ்ஸெக்ஸில் அவருக்கு ஒரு வீடும் கொஞ்சம் நிலமும் இருப்பதாகவும், தற்போது அதை நல்ல விலைக்கு விற்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். அப்போது என்னிடம் கார் இல்லை, கார் ஓட்டவும் தெரியாது, எனவே இந்திய மதிப்பில் சுமார் 3,500 ரூபாய் கொடுத்து என் மாமாவின் காரை அவரையே இயக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டு சஸ்ஸெக்ஸுக்குச் சென்றேன். என்னிடமிருந்த கேமராவில் வாடிக்கையாளரின் வீட்டைத் தேவையான விதங்களில் எல்லாம் புகைப்படமெடுத்து அதை எங்களது ஆன்லைன் தளத்தில் பதிவேற்றி... நல்ல விலைக்கு விற்றுக் கொடுத்தேன். அது தான் பிஸினெஸில் என்னுடைய முதல் வெற்றி. பிறகு அந்த வெற்றியை அப்படியே தக்க வைத்துக் கொண்டேன். 

என்னுடைய ஆன்லைன் வர்த்தக நிறுவனத்துக்கு நான் துடிப்பான ஆண் பணியாளர்களையோ, ஏஜண்டுகளையோ பணியிலமர்த்தவில்லை. எனது நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் அத்தனை பேருமே குழந்தை பெற்ற நடுத்தர வயதுப் பெண்கள், பெரும்பாலும்  இல்லத்தரசிகளாக இருந்தவர்கள் தான். பொதுவாகச் சொல்வதென்றால் எல்லோருமே அம்மாக்க்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!

வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு வரும் வீடுகளைக் காட்டுவது அவர்களது பொறுப்பு. பெண்கள் அதிலும் குறிப்பாக அம்மாக்கள் எப்போதும் உண்மை பேசுவதையே விரும்புபவர்கள் என்பதால் வாடிக்கையாளர்களிடம் விற்பனைக்கு வரும் வீட்டைப் பற்றிய உண்மைத் தகவல்களை மட்டுமே அவர்கள் அளிப்பார்கள் என வாடிக்கையாளர்கள் பெரிதும் நம்புகிறார்கள். ஏனெனில், வீட்டை விற்பதென்பது, ஒரு மனிதர்... தன் வாழ்நாளில் நிகழ்த்தக்கூடிய மிகப்பெரிய விற்பனையாக கருதக்கூடிய நிகழ்வு. இதில் நம்பிக்கையே முதல் மூலதனம். அந்த நம்பிக்கையை எனது நிறுவனம் சம்பாதித்துக் கொண்டது... அந்த நம்பிக்கை தான் என் நிறுவனத்தின் வெற்றிக்கான முக்கியமான காரணம் எனும் அக்‌ஷயின் நிறுவனத்தில் இப்போது 12 இல்லத்தரசிகள் ஏஜெண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார்கள்.

மிகக் குறைந்த வயதில், மிகக் குறுகிய காலத்திலேயே இத்தனை பெரிய வெற்றியைச் சாதித்த அக்‌ஷயின் பெற்றோர் இருவரும் காது கேட்கும் திறன் குறைபாடு கொண்டவர்கள். அப்பா சேவைப்பணியிலும், அம்மா பள்ளி ஆசிரியையாகவும் பணி புரிந்து வருகிறார்கள். சொந்தத் தொழிலின் மீது தனக்கிருந்த ஈடுபாட்டால் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரமும், கணிதமும் பயிலத் தனக்குக் கிடைத்த வாய்ப்பைக் கூட அக்‌ஷய் மறுத்து விட்டதாகத் தெரிவித்திருக்கிறார். படித்துக் கொண்டே தொழிலதிபராக நீடிப்பதை விட நேரடியாக தொழிலில் கவனம் செலுத்தினால் மேலும் லாபம் சம்பாதிக்கலாம் என்று கருதியதால் தற்போது முழுநேர பிஸினஸ் மேன் ஆகியிருக்கிறார் அக்‌ஷய் ருபரேலியா! அவரெடுத்த முடிவில் தவறில்லை, எல்லோரும் படிப்பது எதற்காக? பொருளீட்டுவதற்காகத் தானே?! அது தான் அக்‌ஷயிடன் நிறையவே சேர்ந்து விட்டதே!

நன்றி: ucweb.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com