இந்த 12 வயதுச் சிறுவனுக்கு இருக்கும் அக்கறையில் கொஞ்சமாவது நமக்கிருக்கிறதா?!

அரசுப் பள்ளி மாணவனான ரவியின் இச்செயல் அந்தப் பகுதி மக்களின் கவனத்தைக் கவரவே, இப்போது ரவி அந்தப் பகுதியில் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆகி விட்டான்.
இந்த 12 வயதுச் சிறுவனுக்கு இருக்கும் அக்கறையில் கொஞ்சமாவது நமக்கிருக்கிறதா?!

இதோ, அதோ என்று போக்குக் காட்டிக் கொண்டிருந்த மழைக்காலம் ஒரு வழியாக வந்தே விட்டது. இனி தினமும் மழை பெய்யலாம்...அல்லது ஒன்றிரண்டாகப் பெய்தும் கெடுக்கலாம் அதுவல்ல விசயம். வெறும் அரைமணி நேர மழைக்கே அசந்து போய் தங்களது உருவிழந்து, பொலிவிழந்து பல் இளிக்கும் நமது நகரங்களின் சாலைகள் தான் இப்போதையை முக்கியமான பேசுபொருள்.

யோசித்துப் பாருங்கள்... ஒரு மழை ஓய்ந்த மறுநாள் காலையின் சாலைத் தோற்றத்தை. எங்கே பார்த்தாலும் குண்டும், குழியுமாக சென்னைச் சாலைகளின் பிச்சைப் பாத்திர தோற்றத்தை நினைத்தால் வாகன ஓட்டிகளுக்கு இனிமேல் மழைக்காலம் முடியும் மட்டும் அனுதினமும் அடிவயிற்றுக் கலக்கம் தான். இதில் புதிதாகத் தோண்டப்பட்டு அவசர கதியில் காங்கிரீட் போட்டு மூடப்படும் யானைப் பள்ளங்களின் கதியை நினைத்துப் பாருங்கள். நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் வாகனப் பெருக்கத்தை யோசித்தால் புதிதாகப் போடப்பட்ட சாலைகளின் தரம் குறித்து அச்சமாகத் தான் இருக்கிறது.

தினமும் அலுவலகம் வரும் போது கவனித்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கிய மழை நீர் வடிகால் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகளுக்காக தோண்டப்பட்டு... செப்பனிடல் முடிந்ததும் காங்கிரீட் போட்டு மூடப்பட்டுக் கொண்டிருக்கும் நகரத்தின் பள்ளங்களின் மேலுள்ள சாக்கடை மூடிகளில் சில வாகன ஓட்டிகளால் ஏற்கனவே பழுது பட்டு ஆங்காங்கே சிதிலமாகத் தொடங்கி விட்டன. சில இடங்களில் உடைந்து, கம்பிகள் வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும் பாதாளச் சாக்கடை மூடிகளின் தரிசனம் கிடைக்கிறது.

இன்னும் சில இடங்களில், குறிப்பாக அபார்ட்மெண்டுகள் கட்டும் இடங்களை ஒட்டி திறக்கப் பட்டுள்ள கழிவு நீர் பள்ளங்களுக்கு மூடிகளே கிடையாது. அவை திறந்த நிலையில் அப்படியே விடப்பட்டுள்ளன. இரண்டு, மூன்று நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால் இந்தப் பள்ளங்களில் நிரம்பும் மழை நீரால் அவை இருக்கும் இடமே நமக்குத் தெரியப் போவதில்லை. அறிமுகமில்லாத சாலைகளில் பயணிக்கும் எத்தனை வாகன ஓட்டிகளை இத்தகைய பள்ளங்கள் எப்படியெல்லாம் விழத்தட்டுமோ என்று யோசிக்கும் போது பீதியாகத் தான் இருக்கிறது. 

2015 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரக் கணக்கீட்டின் படி 10,727 மரணங்கள் இம்மாதிரியான திறந்திருந்த பாதாளச் சாக்கடைகள், வேகத்தடைகள் மற்றூம் ஒழுங்கற்ற சாலைகள் உள்ளிட்ட காரணங்களால் நிகழ்ந்திருக்கின்றன. இன்னும் துல்லியமாகக் கூற வேண்டுமானால் 3, 416 மரணங்களுக்கான காரணம் திறந்திருக்கும் பாதாளச் சாக்கடை மூடிகளால் நிகழ்ந்திருக்கின்றன. இதுவே மரண எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில் 3,039 ஆக இருந்திருக்கிறது. ஆண்டு தோறும் எண்ணிக்கைகள் கூடிக் கொண்டிருக்கின்றனவே தவிர குறையக் காணோம்.

இதற்கெல்லாம் என்ன தான் தீர்வு?!

இதோ இந்தப் 12 வயதுச் சிறுவன் நமக்கொரு தீர்வைச் சொல்கிறான். இதில் நாம் செய்வதற்கு உரித்தான ஒன்று அவனைப் பின்பற்றுவது ஒன்று மட்டுமே!

தற்போது 6 ஆம் வகுப்பு மாணவனான ரவி என்ற அந்தச் சிறுவன் ஹைதராபாத்தின் ஹப்சிகுடா பகுதியில் இப்படி திறந்திருந்த பாதாளச் சாக்கடை காரணமாக நேர்ந்த ஒரு விபத்தை நேரில் கண்டதிலிருந்து எங்கே அப்படியான மோசமான திறப்புகளைக் கண்டாலும்... அரசாங்கத்தையோ, அதிகாரிகளையோ நம்பாமல் தானே முன் வந்து அவற்றைச் சரி செய்ய முயல்கிறான்.

கட்டுமானப் பணியாளரான சூர்யநாராயண மற்றும் இல்லத்தரசி நாகமணி இருவரின் மகனான இந்த ரவி இந்த வேலையைச் செய்வதற்காக யாருடைய உதவியையும் எதிர்பார்ப்பதில்லை. முதலில் தன் கண்ணில் பட்ட சாலைப் பள்ளங்களை மட்டுமே மூடிக் கொண்டிருந்த ரவி இப்போது தான் வசிக்கும் இடத்தைச் சுற்றியுள்ள இப்படியான திறப்புகளை எல்லாம் மூடுவதில் முனைந்திருக்கிறான். இந்த வேலையைச் செய்யச் சொல்லி அவனை யாரும் நிர்பந்திக்கவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திர கிராமமொன்றில் ஆழ்துளைக் குழாய்க்குள் சிக்கி உயிரிழந்த 6 மாதக் குழந்தையை தொலைக்காட்சிகளில் கண்ட பிறகு ரவியின் பொறுப்புணர்வும், கவலையும் மேலும் கூடிவிட்டது. தற்போது சாலைப் பள்ளங்கள், பாதாளச் சாக்கடைகள் மற்றும் கை விடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் என மனிதர்களுக்கும், அறியாச் சிறுவர்களுக்கும் ஊறு விளைவிக்கக் கூடிய அனைத்து விதமான பள்ளங்களையும் அடைத்து விடும் மனநிலையில் தொடர்ந்து வார இறுதிகளில் ரவி வேலை செய்து கொண்டிருக்கிறான்.

அரசுப் பள்ளி மாணவனான ரவியின் இச்செயல் அந்தப் பகுதி மக்களின் கவனத்தைக் கவரவே, இப்போது ரவி அந்தப் பகுதியில் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆகி விட்டான். பள்ளங்களை அடைக்கத் தேவையான சிமெண்ட், கற்கள், ஜல்லிகள், பலகைகள் முதலானவற்றைச் சேகரிப்பது, கூடவே தனது வீட்டுப் பாடங்களையும் முடிப்பது என தனது சேவைப் பணிக்காக ரவி மிகக் கடுமையாகவே உழைக்கிறான்.

யாரைப் பார்த்து நீ இதையெல்லாம் செய்யக் கற்றுக் கொண்டாய் என்ற கேள்விக்கு மட்டும் எப்போதும் தவறாமல் ஒரே பதிலையே கூறிக் கொண்டிருக்கிறான். அந்தப் பதில்;

“நான் யாரைப் பார்த்தும் இதைச் செய்யவில்லை, நானாகத்தான் கற்றுக் கொண்டு செய்கிறேன்... தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன்” என்கிறான்.

நாமும் ரவியைப் பின்பற்றி நம் கண்ணில் படும் பள்ளங்களையும், பாதாளச் சாக்கடைகளையும் செப்பனிட வேண்டியது தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com