20 வருடங்களாக வீட்டுக்குள் சிறை வைக்கப் பட்ட பெண் மீட்பு!

அவர்களது முதல் தேவை உணவோ, தண்ணீரோ அல்ல... அதை விட முக்கியமான மனநல சிகிச்சை! அது குடும்பத்தாரால் உணரப் பட்டால் மட்டுமே இப்படியானவர்களுக்கு நிரந்தர விடுதலை கிடைக்க முடியும்.
20 வருடங்களாக வீட்டுக்குள் சிறை வைக்கப் பட்ட பெண் மீட்பு!

கோவாவில் 20 வருடங்களாக வெளி உலகத் தொடர்பே இல்லாமல் வீட்டுக்குள் சிறை வைக்கப் பட்டிருந்த பெண்மணி ஒருவர் இன்று காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளார். தனியார் பெண்கள் பாதுகாப்பு மற்றும் உரிமைக்கான சேவை அமைப்பு ஒன்றின் முயற்சியால் மட்டுமே இது சாத்தியமாகி இருக்கிறது. கோவா பீச் ரிசார்ட்டுக்கு வெகு அருகிலிருக்கும் கிராமப் பகுதியான கண்டோலிமில் தான் இப்படி ஒரு சம்பவம் 20 ஆண்டுகளாக நிகழ்ந்து கொண்டிருந்திருக்கிறது. ஆனால் இது குறித்த புகார்கள் எதுவும் இதுவரை தங்களுக்கு வந்ததில்லை என கோவா காவல்துறை தெரிவித்திருக்கிறது. தினம் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் கோவா கடற்கரை கிராமம் ஒன்றில் 20 வருடங்களாக ஒரே அறைக்குள் பெண் ஒருவர் சிறைவைக்கப் பட்ட விதம் கடும் கண்டனத்திற்குரியதாகக் கருதப் பட்டாலும், இதன் பின்னணியை ஆராயும் போது மனிதர்களை மிருகங்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும் விசயங்களில் முக்கியமானதாகக் கருதப் படும் மனிதாபிமானத்தின் மீது தான் சந்தேகம் எழுகிறது. மனிதாபிமானம் என்ற ஒரு விசயமே இன்றைய குடும்ப அமைப்பில் இல்லாமல் போய் விட்டதோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.

மீட்கப் பட்ட அந்தப் பெண்மணி 20 வருடங்களுக்கு முன்பு தமது குடும்பத்தாரால் மும்பையைச் சேர்ந்த  நபர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கப் பட்டவர். அந்தத் திருமண உறவு நிலைக்கவில்லை.  தன் கணவருக்கு தன்னைத் திருமணம் செய்யும் முன்பே ஒரு வாழ்க்கை இருந்திருக்கிறது. அதில் மனைவி என்றொரு நபர் இருந்திருக்கிறார். தான் இரண்டாம் மனைவி அல்லது இரண்டாம் பட்சமான உறவு மட்டுமே எனத் தெரியவந்த நிலையில் அந்தப் பெண்மணி தனது கணவரிடம் கோபித்துக் கொண்டும், உறவை முறித்துக் கொண்டும் மீண்டும் தாய்வீட்டுக்குத் திரும்பி விட்டார். திரும்பியவருக்கு கடும் மன உளைச்சல் காரணமாக அப்நார்மல் பிகேவியர் (நடத்தைக் கோளாறு) இருந்திருக்கிறது. இதன் காரணமாக அவரது மூர்க்கமான, வித்யாசமான நடவடிக்கைகள் கண்டு பயந்த அவரது உடன்பிறந்தவர்கள் அப்பெண்ணை தங்களது பூர்வீக வீட்டின் ஓர் அறைக்குள் போட்டுப் பூட்டி வைத்திருக்கிறார்கள். உணவோ, தண்ணீரோ எல்லாமே ஒரு ஒரு சின்ன ஜன்னல் திறப்பினூடாக மட்டுமே என்று நாட்களைக் கடத்தி இருக்கிறார்கள். இப்படி கடந்த 20 வருடங்களாக அந்தப் பெண்ணுக்கும், வெளி உலகத்துக்குமான தொடர்பென்பது இந்த சிறு ஜன்னல் திறப்பின் வழியாக மட்டுமே என்றிருந்திருக்கிறது. இதை அறிந்த பெண்கள் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று இவ்விசயத்தை காவல்துறையின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல தற்போது அந்தப் பெண் மீட்கப் பட்டு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

இதில் சோகமான விசயம் என்னவெனில்; தமது குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு இப்படியாகி விட்டால், முதலில் அவர்களுக்கு அளிக்கப் பட வேண்டியது மருத்துவ சிகிச்சையும் அதன் பின்னர் குடும்பத்தினரின் அரவணைப்புமே என்பது ஏன் பெரும்பாலானோருக்குத் தெரிவதே இல்லை. காரணம் தான், தன் மனைவி, தன் மக்கள் என்று சுருங்கி விட்ட சுயநல மனப்பான்மை தானே! இந்தப் பெண் விசயத்திலும் அதுவே தான் நடந்திருக்கிறது. உடன் பிறந்தோர் இவர் விசயத்தில் தனிக் கவனம் செலுத்த விரும்பவில்லை விரும்பவில்லை. உடன்பிறந்த குற்றத்திற்கு உணவும், தண்ணீரும் அளித்து ஒரு அறைக்குள் பாதுகாப்பாக சிறை வைத்திருந்தால் போதுமென தீர்மானித்து விட்டார்கள். கணவரைப் பிரிந்து வந்த நிலையில் மீண்டும் அவருக்கென பாதுகாப்பாக ஒரு வாழ்க்கை அமைத்துக் கொடுப்பதற்கான முனைப்போ அல்லது அவரது மனப்பிரச்னைகளைத் தீர்த்து அவரை இயல்பானவராக மாற்றும் ஆறுதலான நோக்கமோ எதுவுமே அவர்களிடத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. கோவாவில் மீட்கப் பட்ட பெண்ணுக்கு மட்டுமே இப்படி நிகழ்ந்ததென்று கூற முடியாது. இந்தியாவெங்கும் கிராமங்கள் தோறும் இப்படியான பெண்கள் நிறைந்திருக்கிறார்கள்.

அவர்களது முதல் தேவை உணவோ, தண்ணீரோ அல்ல... அதை விட முக்கியமான மனநல சிகிச்சை! அது குடும்பத்தாரால் உணரப் பட்டால் மட்டுமே இப்படியானவர்களுக்கு நிரந்தர விடுதலை கிடைக்க முடியும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com