செல்லாது... செல்லாது இந்தக் ஆய்வுக்கட்டுரையில் சொல்லப்பட்ட விஷயம் தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது!

சென்னை அம்பத்தூரில் இருந்து பாரிஸ் கார்னர் வரை செல்ல அரசுப் பேருந்தில் ஏறும் ஒரு பாட்டியோ அல்லது தாத்தாவோ உட்கார இடமின்றி பிதுங்கும் கூட்டத்தில் சிக்கிச் சின்னாபின்னமாகி மூச்சுத் திணறிக் கொண்டு பயணிக்
செல்லாது... செல்லாது இந்தக் ஆய்வுக்கட்டுரையில் சொல்லப்பட்ட விஷயம் தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது!
Published on
Updated on
2 min read

நம்மூரில் அரசுப் பேருந்துகள், மின்சார ரயில்களில் பயணிக்கும் போது நமக்கு உட்கார இருக்கை கிடைத்தாலும் வயதான தாத்தா, பாட்டிகள் வந்தால் அவர்களை நமது இருக்கையில் உட்கார வைத்து விட்டு நாம் நின்று கொண்டு வருவோம். சில நல்ல மனிதர்களின் பழக்கம் இது. இதை பெரியவர்களுக்குச் செய்யும் உபகாரமாக நினைத்து நாம் செய்வதுண்டு. இது நமக்கு மட்டுமே சொந்தமான பண்பாட்டுப் பிரதிபலிப்பு இல்லை. உலகிலுள்ள எல்லா நாடுகளிலுமே பயணத்தின் போது பெரியவர்கள் நின்று கொண்டு வந்தால் சிறியவர்கள் எழுந்து கொண்டு அவர்களை உட்கார வைப்பது ஒரு மரபு. ஆனால் இந்த மரபைத் தான் தவறு! என்று இப்போது சில விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். பெரியவர்கள் வந்தால் உட்கார இடம் தரத் தேவையில்லை... அது அவர்களுக்குச் செய்யும் உபகாரம் ஆகாது. பெரியவர்கள் நின்று கொண்டே பயணிப்பது தான் அவர்களுக்கு மிகச் சிறந்த உடற்பயிற்சி என்று சர் மியூர் கிரே எனும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானி ஒருவர் கண்டறிந்து ஆய்வுக் கட்டுரை ஒன்றை சமீபத்தில் சமர்பித்திருக்கிறார். இதற்காக அவர் தொடர் ஆய்வில் ஈடுபட்டு பல முதியவர்களிடம் சோதனை நடத்திய பின்பே இப்படி ஒரு முடிவை அறிவித்திருக்கிறார். அவரது ஆய்வில் முன்வைக்கப்பட்டுள்ள மேலும் சில தகவல்கள், 

முதியவர்கள் பொது இடங்களில் எலிவேட்டர், எஸ்கலேட்டர் போன்றவற்றைக் கூடப் பயன்படுத்தத் தேவையில்லை எனவும் அவர்கள் மாடிப்படிகளில் ஏறி, இறங்குவது, நடப்பது, நிற்பது மாதிரியான 10 நிமிட உடற்பயிற்சிகளையாவது செய்தால் தான் அவர்களால் சோர்வின்றி இயங்க முடியும் எனவும் அந்த ஆய்வுக்கட்டுரை கூறுகின்றது.

அது மட்டுமல்ல, முதியவர்களின் கால்கள் நாளொன்றுக்கு குறைந்தபட்சமாவது இயங்கிக் கொண்டிருந்தால் மட்டுமே அவர்களால் அந்த நாளை எந்த வித சுமைகளும் இன்றி எளிதாகக் கடக்க முடியும் என்றும்; ஒரே இடத்தில் அமர்ந்து ஓய்விலேயே இருப்பதென்றால் கால்கள் மரத்துப் போய் பிறகு தானாக இயங்குவது கூட அவர்களுக்கு கடினமானதாகி விடும் என்றும் அக்கட்டுரை கூறுகிறது.

ஆக, முதியவர்கள் ஆரோக்யமாக இருப்பார்களெனில் அவர்கள் தொடர்ந்து தங்களது வேலைகளைத் தாங்களே செய்து கொள்ளும் அளவுக்கு சுறுசுறுப்பானவர்களாக இருக்க வேண்டும் என்கிறது இந்த ஆய்வுக்கட்டுரை.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்? 80 வயதிலும் சுறுசுறுப்பாக வீட்டில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய முயற்சிக்கும் பாட்டிகளையும், தாத்தாக்களையும் எங்கே கீழே விழுந்து வைத்து நம்மை மருத்துவமனைக்கு இழுத்தடிப்பார்களோ என்ற பயத்தில் உங்களால் முடியாது, வயதான காலத்தில் கையைக், காலை வைத்துக் கொண்டு சும்மா இருந்தால் என்ன? என்று கூறிக் கூறியே எந்த வேலைகளையும் செய்ய விடாமல் மூலையில் உட்கார வைத்து விடுகிறோம். அதைத்தான் தவறு என்கிறது இந்த ஆய்வுக்கட்டுரை. அந்த வகையில் தான் இந்தக் கட்டுரை முடிவை இந்தியர்களான நாம் அணுக வேண்டியதாக இருக்கிறது. 

ஏனெனில் இந்தக் கட்டுரை முடிவைப் படித்து விட்டு சென்னை அம்பத்தூரில் இருந்து பாரிஸ் கார்னர் வரை செல்ல அரசுப் பேருந்தில் ஏறும் ஒரு பாட்டியோ அல்லது தாத்தாவோ உட்கார இடமின்றி பிதுங்கும் கூட்டத்தில் சிக்கிச் சின்னாபின்னமாகி மூச்சுத் திணறிக் கொண்டு பயணிக்கையில் அவர்கள் அப்படியே நின்று கொண்டு வரட்டும். அது தான் அவர்களுக்கு மிகச்சிறந்த உடற்பயிற்சி என்று எண்ணி விட்டு விட முடியாது இல்லையா? அப்படியே  விட்டாலும் கூட பிறகு நம்மை முட்டாள்களென்றும், மனிதாபிமானமற்றவர்கள் என்றும் இந்த உலகம் கரித்துக் கொட்டி விடாதோ என்ன?!

வாழ்வியல் தர்க்கங்கள் கண்டத்த்துக்கு கண்டம், நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், ஏன் சொல்லப்போனால் ஊருக்கு ஊர், வீட்டுக்கு வீடு கூட மாறித்தானே இருக்கின்றன!  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com