பாழடைந்த கிணற்றுக்குள் மூட்டை, மூட்டையாக ஒரிஜினல் ஆதார் கார்டுகள்... கிணறு வெட்டக் கிளம்பிய பூதம்!

தண்ணீர் பஞ்சத்தை போக்கும் முயற்சியாக இந்தக் கிணற்றைத் தூர்வாற முயற்சிக்கையில் தான் கோணிப்பைகளில் கட்டுக்கட்டாக ஒரிஜினல் ஆதார் கார்டுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்து இந்தக் குற்றத்தை வெளிக்கொண்டு வந்துள்ளன
பாழடைந்த கிணற்றுக்குள் மூட்டை, மூட்டையாக ஒரிஜினல் ஆதார் கார்டுகள்... கிணறு வெட்டக் கிளம்பிய பூதம்!

மகாராஷ்டிராவின் யவத்மல் பகுதியில் இருந்த ஒரு பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து ஆயிரக்கணக்கான ஒரிஜினல் ஆதார் கார்டுகள் மீட்கப்பட்டன. கிணற்றுக்குள் இருந்து கோணிப்பைகளில் கட்டப்பட்டு வீசப்பட்ட ஆதார் கார்டுகளை மீட்ட உள்ளூர் மக்கள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு இவ்விஷயத்தை எடுத்துச் சென்றதும், இச்சம்பவம் குறித்து மேலதிகத் தகவல்களை விசாரிக்கக் கோரி மாவட்ட நிர்வாகம் உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தப் பகுதியைச் சேர்ந்த தன்னார்வ இளைஞர்களில் சிலர், ஊரில் நிலவும் கடுமையாக தண்ணீர் பஞ்சத்தை போக்கும் முயற்சியாக இந்தக் கிணற்றைத் தூர்வாற முயற்சிக்கையில் தான் கோணிப்பைகளில் கட்டுக்கட்டாக ஒரிஜினல் ஆதார் கார்டுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்து இந்தக் குற்றத்தை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

யத்வல் பகுதியின் சிண்டே நகர், சாய்மந்திரில் இருக்கும் கிணற்றைத் தூர்வார முயன்றபோது கிணற்றுக்குள்ளிருந்த பாறைக்கு அடியில் இந்த ஒரிஜினல் ஆதார் கார்டு மூட்டை சிக்கியிருக்கிறது. மூட்டைக்குள்ளிருந்த ஆதார் கார்டுகள், பல நாட்களாக நீரில் ஊறியிருந்த காரணத்தால் சிதிலமடைந்திருந்த போதிலும், அதிலிருக்கும் தகவல்கள் அழியாமல் வாசிக்க முடியும் அளவுக்கு இருந்ததால் அந்த ஆதார் கார்டுகள் அனைத்தும் புறநகர்ப் பகுதியில் இருக்கும் லோஹர கிராமத்தைச் சேர்ந்தவர்களுடையது என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விஷயம் மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் தேஷ்முக்கின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதும், மீட்கப்பட்டுள்ள அந்த ஒரிஜினல் ஆதார் கார்டுகள் அனைத்தும் வருவாய்த்துறை ஆணையர்கள் கட்டுப்பாட்டில் இருந்தவையா? அல்லது இந்திய தபால் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தவையா? என்பது குறித்து விசாரிக்க ஆணையிட்டுள்ளார். யாராக இருந்தாலும் சரி கடமையை மீறிய குற்றவாளிகள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

கிணற்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள ஆதார் கார்டுகளுக்கு உரிய நபர்கள் யாரெனக் கண்டறிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் கண்டறியப்பட்டதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யவத்மல் தபால்துறை தலைமை அஞ்சல் அதிகாரியான ஆனந்த சர்க்கார் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com