ரீல் வேங்கை மவனைப் பார்த்து யாரென்று கேட்ட ரியல் வேங்கை மகன்!

ரஜினியைக் கேள்வி கேட்ட அந்த இளைஞரின் பெயர் சந்தோஷ் என்பதும், அவர் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளர் என்பதும் தற்போது தெரிய வந்திருக்கிறது.
ரீல் வேங்கை மவனைப் பார்த்து யாரென்று கேட்ட ரியல் வேங்கை மகன்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியான நிலையில் ஏராளமானோர் காயமடைந்தார்கள். காயமடைந்தவர்கள் மற்றும் பலியானவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் நோக்கில் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றிருந்தார். தூத்துக்குடியில் ரஜினி கால் வைத்தது முதலே அங்கே காவல்துறை கெடுபிடி அதிகமாக இருந்தது.

ரஜினியின் தீவிர ரசிகனான இளைஞர் ஒருவர் தங்கள் தலைவர் எதற்காக அங்கே வருகை தந்திருக்கிறார்? என்ற உணர்வு சிறிதும் இன்று தலைவர் சென்ற காரைத் துரத்திச் சென்று அவருடன் ஒரு செல்ஃபீ எடுத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டியதோடு, இனி என் வாழ்க்கையில் இப்போதே மரணம் வந்தாலும் சந்தோஷமாகச் சாவேன் என்று படு சிரத்தையாக தனது ரசிகத் தனத்தை வேறு பறைசாற்றியிருந்தார். இந்த நிகழ்வைச் செய்தியாக்க ஊடகங்கள் மறக்கவில்லை.

ஒரு இளைஞர் இப்படி இருக்க....

அங்கு மருத்துவமனையில் காயமடைந்தவர்களைச் சந்திக்க ரஜினி விரைந்த போது அங்கும் ரஜினியைக் காணவும், வேடிக்கை பார்க்கவும் ஏக களேபரம். சில மருத்துவர்கள் கூட ஓடிவந்து கூட்ட நெரிசலில் ரஜினியை வேடிக்கை பார்த்ததாகத் தகவல். ரஜினி தரிசனம் தேவ தரிசனமாகப் பலருக்குத் தெரிய காயமடைந்த நபர்களில் ஒருவரான இளைஞர் மட்டும், தன்னைப் பார்வையிட வந்த ரஜினியிடம், ‘யார் நீங்க?’ என்று கேட்டிருக்கிறார்? அதற்கு ரஜினி, ‘நான் ரஜினிகாந்த்’ எனப் பதிலளிக்க... அதற்கு அந்த இளைஞர்  ‘நீங்கள் ரஜினிகாந்த் என்பது எனக்குத் தெரிகிறது, எங்கே இருந்து வருகிறீர்கள்?’ என்று மீண்டும் ரஜினியைப் பார்த்துக் கேட்கவே, அதற்கு ரஜினி ‘நான் சென்னையில் இருந்து வருகிறேன்’ என்று பதிலளித்திருக்கிறார். அப்போதும் அசராத அந்த இளைஞர், ‘சென்னையில் இருந்து வருவதற்கு 100 நாட்கள் ஆகுமா?’ என்று அந்த இளைஞர் கேட்க அதைக் கண்டு ரஜினி இறுக்கமான முகத்துடன் அந்த இடத்தை நகர்ந்தார் என்கின்றன செய்தி ஊடகங்கள். 

ரஜினியைக் கேள்வி கேட்ட அந்த இளைஞரின் பெயர் சந்தோஷ் என்பதும், அவர் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளர் என்பதும் தற்போது தெரிய வந்திருக்கிறது. காவல்துறை தாக்குதலால் பலத்த காயங்களுடன் தலையில் பத்து தையல்கள் இடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அந்த இளைஞர். ரஜினி மீதான அவரது கோபத்துக்கு காரணம்; ‘100 நாட்களாக நாங்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடுமையாகப் போராடி வருகிறோம், அப்போதெல்லாம் எங்களைச் சந்திக்கவோ, எங்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவோ முன் வராத ரஜினி இப்போது எதற்காக இங்கு வருகிறார்? இந்தப் போராட்டம் நடந்து இன்றோடு 8 நாட்களாகிறது. அதில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள், பலபேர் கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறோம். இந்த 8 நாட்களிலும் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி வாய் திறக்காத ரஜினி இன்று எதற்காக வருகிறார்? அதுவும் ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்ட பிறகு அவர் வந்திருக்கிறார். ஸ்டெர்லைட் ஆலையை மூடியிருக்காவிட்டால் ஒருவேளை அவர் வந்திருக்க மாட்டார். தற்போது அவர் வந்ததின் பின்னணியில் மிகப்பெரிய காரணம் இருக்கிறது. இன்னும் சில தினங்களில் காலா படம் வெளியாகவிருக்கிறது. இப்போதும் மக்களைப் போய் சந்திக்காவிட்டால் அவருடைய படம் ஓடாது என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால் தான் தூத்துக்குடிக்கு வந்து எங்களை சந்தித்து நிதியுதவி வழங்குகிறேன் என்று அவர் சொல்லியிருக்கிறார். எனவே தான் எனக்கு கோபம் வந்து அவரை அப்படிக் கேட்டேன். எப்படி எங்களுக்குப் போராடி வெல்லத் தெரியுமோ, அப்படியே எங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் தெரியும்’ என்றும் அந்த இளைஞர் இணைய ஊடகங்களுக்கு விளக்கமளித்திருக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com