டிக் டாக் விபரீதங்கள்: பல்ட்டி அடிக்க முயன்று உயிரை விட்ட டான்ஸர் இளைஞன்!
By RKV | Published On : 24th June 2019 11:56 AM | Last Updated : 24th June 2019 11:56 AM | அ+அ அ- |

கர்நாடகாவைச் சேர்ந்த டான்ஸர் இளைஞர் ஒருவர் தனது விபரீதமான டிக் டாக் முயற்சியால் நேற்று மரணத்தைத் தழுவி இருப்பது மிகுந்த வருத்தத்திற்குரிய செய்தி. 22 வயது குமார் ஆர்கெஸ்ட்ரா ஒன்றில் டான்ஸராகவும் இசைக் கலைஞராகவும் பணியாற்றி வந்திருக்கிறார். தனது வித்யாசமான விடியோக்கள் மூலம் டிக் டாக்கில் பிரபலமான குமார் கடந்த 15 ஆம் தேதி தனது நண்பருடன் இணைந்து மேலுமொரு வித்யாசமான டிக் டாக் விடியோ முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கழுத்து முறிந்து தண்டுவடத்தில் பலத்த அடியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நடந்தது என்னவென்றால், தனது நண்பர் ஒருவரது உதவியுடன் பின்னோக்கி பல்ட்டி அடித்து அதை டிக் டாக் விடியோ பதிவாக்கும் முயற்சியில் குமார் ஈடுப்படும் போது பல்ட்டியில் தவறு ஏற்பட்டு தலை தரையில் மோதி கழுத்து முறிவு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட போதும் தண்டுவடத்தில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டதில் பக்கவாத நிலையில் நேற்று வரை விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று பிற்பகலில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் குமார் மரணமடைந்ததாகத் தகவல்.
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் சிக்கநாயக்கன ஹள்ளி தாலுகாவைச் சேர்ந்த குமாரின் பெற்றோர் நரசிம்ம மூர்த்தி மற்றும் ராமக்கா இருவரும் விவசாயக்கூலித் தொழிலாளிகள். தற்போது மகனை இழந்து வாடும் அந்த ஏழைப் பெற்றோருக்கு குமாரின் மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்துள்ளது.
விபத்துக்குப் பின் மருத்துவமனையில் இருந்த நாட்களில் பத்திரிகையாளர்களிடம் பேசிய குமார், தனது விபரீத டிக் டாக் முயற்சி குறித்து மிகவும் மன வேதனைப்பட்டிருக்கிறார். சமூக ஊடகச் செயலியான டிக் டாக்கில் மேலும் மேலும் பிரபலமாகும் ஆசையில் தன்னைப் போன்ற இளைஞர்கள் இப்படிப் பட்ட ஆபத்தான முயற்சிகளில் ஈடுபடக் கூடாது என்பதற்கு தனக்கு நேர்ந்த விபத்து ஒரு பெரும் எச்சரிக்கையாக இருக்கட்டும் என்று அவர் கூறியதாகத் தகவல்.
குமாரின் மரணம், டிக் டாக் ஆசையால் நேர்ந்தது. சமூக ஊடகச் செயலிகளில் லைக்குகளுக்காகவும் ஃபேன் ஃபாலோயிங்கை அதிகரிப்பதற்காகவும் இளைஞர்களும், பெண்களும் இது போன்ற ஆபத்தான முயற்சிகளில் ஈடுபடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்படியான விளைவுகள் ஏற்படும் என்று அறிந்து தான் முன்பே இந்தச் செயலிக்கு தடை விதிக்கக் கோரி பொது நல வழக்கு போடப்பட்டது. ஆயினும் டிக் டாக் ஆதரவாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அதற்கான தடை நீங்கி தற்போது மீண்டும் டிக் டாக் தன் வேலையைக் காட்டி வருகிறது.
டிக் டாக்கால் விபத்து மரணங்கள் மட்டுமா நேர்கின்றன. கொலை, குடும்பத் தகராறு, விவாகரத்துகளும் பெருகி வருகின்றன.
ஒரு சாரர், தங்களது தனித்திறமைகளை வளர்த்தெடுக்கவும், அவற்றை பொதுவெளியில் வைத்து பிறர் பாராட்டுகளைப் பெறவும், சின்னத்திரை, பெரியதிரை வாய்ப்புகளைப் பெறவும் டிக் டாக் உதவுகிறது என்று டிக்டாக்கிற்கு ஆதரவாக வாதிடுகிறார்கள். இன்னும் சிலரோ, அதிலென்ன அவ்வளவு பெரிய ஆபத்தா இருக்கிறது. அது வெறும் செயலி, அதைப் பொழுது போக்கிற்காகவும், மன அழுத்தத்தைப் போக்கவும் மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறோம். இதிலென்ன தவறு இருக்கிறது? அதைப் போய்த் தடுப்பானேன் என்கிறார்கள். இன்னும் சிலரோ, இது மிகக் கொடுமையான கலாச்சாரச் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும். இதனால் சமுதாயத்திற்கு என்ன நலன் விளைந்து விடப் போகிறது. இதை உடனடியாக ஒழித்துக் கட்டியே ஆக வேண்டும் என்கிறார்கள்.
இரண்டு தரப்பில் எது வெல்கிறதோ இல்லையோ, டிக் டாக்கால் இன்று ஒரு உயிர் பறி போயிருக்கிறது மட்டும் எவராலும் மறுக்க முடியாத நிஜம்.
Video Courtesy: TOI