2019 மக்களவைத் தேர்தல் 10 முக்கியமான வெற்றியாளர்கள் VS தோல்வியாளர்கள்!
By RKV | Published On : 25th May 2019 12:14 PM | Last Updated : 25th May 2019 12:14 PM | அ+அ அ- |

2019 மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்திருக்கிறது. மீண்டும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் இத்தேர்தலில் வெற்றியடைவார்கள் என்று கருதப்பட்ட பல விஐபி வேட்பாளர்கள் தோல்வியடைந்திருக்கிறார்கள். தோற்றுப் போவார்கள் என்று கருதிய சிலர் வெற்றி வாகை சூடியிருக்கிறார்கள்.
காங்கிரஸ் கோட்டை என்று கருதப்பட்ட அமேதியில் பாஜக வேட்பாளரான நடிகை ஸ்மிரிதி இரானி இம்முறை வெற்றி வாகை சூடியிருக்கிறார். தனது சொந்தத் தொகுதியில் தோற்றாலும் எதிர்பாராத விதமாக கேரள மாநிலம் வயநாட்டில் வெற்றி வாகை சூடியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவரான ராகுல் காந்தி.
தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவில் இம்முறை இலக்கியவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ள நால்வர் பாராளுமன்ற உறுப்பினர்களாக வெற்றி வாகை சூடியுள்ளனர். அவர்கள் முறையே திமுகவைச் சேர்ந்த கனிமொழி, தமிழச்சி தங்க பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த ரவிக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி வேட்பாளராக வென்றிருக்கும் எழுத்தாளர் சு. வெங்கடேசன் போன்றோர்.
பெங்களூரு மத்தியப் பகுதி வேட்பாளரான நடிகர் பிரகாஷ் ராஜ் தோல்வியைத் தழுவி இருக்கிறார்.
ஒருவேளை எந்தக் கட்சியும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறாவிட்டால் கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில் பிரதமர் பதவியை அடைவதற்கு வாய்ப்பிருக்கிறது என அரசியல் விமர்சகர்களால் கருதப்பட்ட தலைவர்களான மாயாவதி மற்றும் மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சிகள் இம்முறை பெருமளவில் தோல்வியைத் தழுவியுள்ளன.
கேரளாவில் சபரிமலை விவகாரத்தின் பின்னணிக் காரணங்களால் கம்யூனிஸ்டுகளுக்குத் தோல்வியே கிட்டியுள்ளது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் பெரும்பான்மையாக ஜெயித்திருக்கின்றன. இடைத்தேர்தல்களில் திமுக இம்முறை மிகச்சிறந்த வாக்கு வங்கியை மீட்டெடுத்த போதும் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த முடியாமல் போனது துரதிர்ஷ்டமே! அதிமுக, பாஜக தலைமையிலான கூட்டணியின் வெற்றி விகிதம் தமிழகத்தில் குறைவு.
ஆக, இந்த தேர்தலைப் பொருத்தவரை பலரது வெற்றி, தோல்விகள் முன்னமே மக்களால் தீர்மானிக்கப்பட்டவையாக இருந்த போதும் சில அரசியல் பிரபலங்களது வெற்றி திகைக்கச் செய்வதாக இருந்தது. சிலரது தோல்வி எதிர்பாராததாக இருந்ததும் உண்மை. அப்படி திகைக்கச் செய்த முக்கியமான 10 வெற்றியாளர்கள் மற்றும் தோல்வியாளர்கள் குறித்த பட்டியலை தெரிந்து கொள்வோம்.
பெயர் | கட்சி | தொகுதி |
---|---|---|
அமித்ஷா | பாஜக | காந்திநகர் |
ஸ்ம்ருதி இரானி | பாஜக | அமேதி |
ஃபரூக் அப்துல்லா | தேசிய மாநாட்டுக் கட்சி | ஸ்ரீநகர் |
ரவி ஷங்கர் பிரசாத் | பாஜக | பாட்னா சாஹிப் |
மனீஷ் திவாரி | காங்கிரஸ் | அனந்தபூர் சாஹிப் |
சுப்ரியா சுலே | தேசியவாத காங்கிரஸ் கட்சி | பாரமதி |
ராஜ்நாத் சிங் | பாஜக | லக்னெள |
நிதின் கட்கரி | பாஜக | நாக்பூர் |
மேனகா காந்தி | பாஜக | சுல்தான்பூர் |
சாத்வி ப்ரக்யா சிங் தாக்குர் | பாஜக | போபால் |
பெயர் | கட்சி | தொகுதி |
---|---|---|
மல்லிகார்ஜுனா கார்கே | காங்கிரஸ் | குல்பர்கா |
கன்னையா குமார் | கம்யூனிஸ்ட் கட்சி | பெகுசராய் |
புபிந்தர் சிங் ஹூடா | காங்கிரஸ் | சோனிபட் |
ஜ்யோதிர் ஆதித்ய சிந்தியா | காங்கிரஸ் | குனா |
மூன் மூன் சென் | திரிணாமூல் | அசன்சல் |
ஜெயப்ரதா | பாஜக | ராம்பூர் |
மிலிந்த் தியோரா | காங்கிரஸ் | தெற்கு மும்பை |
பைஜயந்த் பாண்டா | பாஜக | கேந்திர பத்ரா |
எம் வீரப்ப மொய்லி | காங்கிரஸ் | சிக்கபலபூர் |
சம்பித் பத்ரா | பாஜக | பூரி |
Image Courtesy: Zee news