
நீடாமங்கலம்: கஜா புயலில் சாய்ந்த மின்கம்பங்களைச் சீரமைக்கும் பணியின்போது மின்சாரம் பாய்ந்ததில் முடமான இளைஞர் தனது மனைவி, 2 பெண் குழந்தைகளுடன் வாழ்வாதாரத்துக்காகப் பரிதவித்து வருகிறார்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட ஒளிமதி ஊராட்சி வையகளத்தூரைச் சேர்ந்த பரமசிவம் மகன் கதிரவன் (28) தந்தையுடன் எலக்ட்ரீஷியன் வேலை பார்த்து வந்தார். இவருக்கு அனுப்பிரியா (7), சந்தனபிரியா (5) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
வலங்கைமான் அருகேயுள்ள மாணிக்கமங்கலம் ஊராட்சியில் கஜா புயலில் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்க ஊராட்சி எழுத்தர் அழைத்ததன்பேரில் கதிரவன், கடந்த 19.12.2018 அன்று அங்குள்ள மின்மாற்றியில் பீஸ் போடுவதற்காக ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து மின்கம்பத்தில் தொங்கினார். இதைப் பார்த்த, மாணிக்கமங்கலம் கிராமத்தினர் கதிரவனை மீட்டு நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளது என கூறி மருத்துவர்கள் தீவிர சிகிச்சைக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு உள்நோயாளியாக 4 மாதங்கள் சிகிச்சை பெற்று, வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அப்போதிலிருந்து படுத்த படுக்கையாகவே கதிரவன் இருந்து வருகிறார்.
காவல்துறை, வருவாய்த் துறை, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு உதவி கேட்டு மனு கொடுத்தும் எந்தப் பலனும் இல்லை.
இடுப்புக்குக் கீழ் எந்த உணர்வும் இல்லாமல் படுக்கையிலேயே உள்ளார். மேலும் முதுகு, இடுப்பு, வலதுகால் முட்டி பகுதிகளில் பலத்த காயங்களுடன் அவதிப்பட்டு வருகிறார்.
100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வரும் இவரது மனைவி, கணவரையும், குழந்தைகளையும் பராமரிக்க வழியில்லாமல் சிரமப்பட்டு வருகிறார்.
இதுகுறித்து கதிரவன் கூறியது: எனது மனைவி மற்றும் குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி எனது மனைவிக்கு தகுதிகேற்ற வேலைவாய்ப்பை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று இவர் விடுக்கும் கோரிக்கைகள் இதுவரை அரசின் செவியில் விழவில்லை.
""பத்திரிகையில் போடுங்கள், அப்போதாவது எங்களுக்கு ஏதாவது வழிபிறக்கும்'' என்று இவரது மனைவி கண்ணீருடன் சொன்னது நெஞ்சை உலுக்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.