எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சிலிண்டர், பெட்ரோல் தட்டுப்பாடு தொடர்ந்தால்...! என்னென்ன பாதிப்புகள்?

சிலிண்டர், பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் பாதிப்புகள் பற்றி...

News image
சிலிண்டர், பெட்ரோல் தட்டுப்பாடு தொடர்ந்தால்...- Photo: ANI, HP
Updated On :10 மார்ச் 2026, 7:39 am

எஸ். ரவிவர்மா

மத்திய கிழக்கு போரால் சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை தொடர்ந்தால், உணவகங்கள், பள்ளிகள், அலுவலகங்கள் போன்றவை மூடப்படும் அபாயம் நேரிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஏவுகணைத் தாக்குதலில் அந்நாட்டின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனியைக் கொன்றனர்.

ஈரானும் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மீதும், ஐக்கிய அரபு அமீரகம், செளதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகம், ராணுவத் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது.

YouTube video thumbnail

இதனிடையே, பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாகவும், தடையை மீறிச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் தாக்கி அழிக்கப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் பயணிகள் கப்பல்கள், எண்ணெய் கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு அளிக்கும் என்று டிரம்ப் உறுதி அளித்தாலும், தனியார் சரக்கு கப்பல் நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதால் ஹோர்முஸ் வழிக் கப்பல் பெருமளவில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

இதனால், வளைகுடா நாடுகளில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கச்சா எண்ணெய்யை எடுத்துச் செல்லும் நூற்றுக்கணக்கான கப்பல்கள் நடுக்கடலில் நிற்கின்றன.

ஹோர்முஸ் நீரிணை வழியாக நாளொன்றுக்கு 2 முதல் 2.3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருள்கள் கொண்டு செல்லப்படும் நிலையில், கிட்டத்தட்ட 10 நாள்களாக தேங்கி நிற்கின்றன. இது உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் 20 முதல் 29 சதவீதம் ஆகும்.

கச்சா எண்ணெய் போக்குவரத்து முடங்கியுள்ளதால், வளைகுடா நாடுகள் எண்ணெய் உற்பத்தியை வெகுவாகக் குறைத்துள்ளன அல்லது நிறுத்தியுள்ளன. நிலைமை சீரானதும் வழக்கம்போல் கச்சா எண்ணெய் உற்பத்தி மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளன. எனினும், மீண்டும் பணி தொடங்குவதற்குக் குறிப்பிட்ட காலம் தேவைப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆசிய நாடுகளின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு பிரதான வழித்தடமாக இருக்கும் ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியா மட்டும் நாளொன்றுக்கு 27 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகின்றது.

உள்நாட்டுக்குத் தேவைக்கான 88 சதவீத கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வரும் சூழலில், அதில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கொண்டுவருகின்றது.

இராக், செளதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் நாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யையும் ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு வருகின்றது.

தற்போது ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்துக்கு மாற்றாக வேறு வழித்தடத்தில் எண்ணெய்யைக் கொண்டுவரும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

நாட்டில் அடுத்த இரு வாரங்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இருப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்திருந்தாலும், எரிவாயு இருப்பு குறைவாகவே இருப்பதாகத் தகவல்கள் தெரிக்கின்றன.

பெட்ரோல், சிலிண்டர் விலை உயருமா?

நாடு முழுவதும் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர்களின் விநியோகம் அனேகமாக நிறுத்தப்பட்டு விட்டதெனலாம்.

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ஏற்கெனவே ரூ. 60 அளவுக்கு உயா்த்தப்பட்டுள்ளது. தற்போது சிலிண்டர் முன்பதிவுக்கான காலத்தை 21 நாள்களில் இருந்து 25 நாள்களாக மத்திய அரசு அதிகரித்தியுள்ளது.

இதனிடையே, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 130 டாலருக்கு மேல் அதிகரிக்காத வரையிலும் விலையை உயர்த்த வேண்டாம்; தற்போதைய தற்காலிக இழப்பை தாங்கிக்கொள்ள வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது (ஆனால், இந்தப் பிரச்சினைக்கு முந்தைய நிலவரப்படியேகூட, சர்வதேச சந்தை விலையைவிட அதிக விலையில்தான் இந்தியாவில் எரிபொருள்கள் விற்கப்பட்டுவந்தன).

கச்சா எண்ணெய்யின் விலை மார்ச் 9 ஆம் தேதி பீப்பாய் 115 டாலர் வரை உயர்ந்த நிலையில், இன்று (மார்ச் 10) காலை 90 டாலருக்கு குறைந்துள்ளதால், தற்போதைக்கு பெட்ரோல், டீசல் விலை உயராது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்னவெல்லாம் முடங்கும்?

மத்திய கிழக்கில் போர் தொடரும் பட்சத்தில் பெட்ரோல், எரிவாயு இறக்குமதி தடைப்பட்டு நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்படும்.

ஏற்கெனவே, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் விநியோகம் படிப்படியாக நிறுத்தப்பட்டு வருகின்றன. கையிருப்பில் இருக்கும் வணிக சிலிண்டர்களை மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களின் விடுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனால் 5 நட்சத்திர விடுதிகள் முதல் சாலையோர டீக்கடை, தட்டுக்கடைகள் வரை அனைத்துக்கும் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்றே பல்வேறு நகரங்களில் உணவகங்களை மூடத் தொடங்கிவிட்டனர். அதிக அளவில் தனியர்கள் வசிக்கும் பெங்களூரில் ஏற்கெனவே ஹோட்டல்கள் மூடப்பட்டுவிட்டன.

சென்னையில் பிரபல ஹோட்டல் ஒன்றில் துரித வகை உணவுகள் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளன. வேலை நிமித்தமாக நகரங்களில் தனியாக தங்கியிருக்கும் இளைஞர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

இந்த நிலைமை இன்னும் ஓரிரு நாள்கள் தொடரும் பட்சத்தில் தேர்வுக் காலத்தில் பள்ளி, கல்லூரிகளின் விடுதிகள் படிப்படியாக மூடப்படும். பெரும்பாலான அலுவலகங்களில் இயங்கும் உணவகங்களும் மூடப்படும் ஆபத்திருக்கிறது.

பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டைக் குறைக்க அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டு, வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்த நேரிடும்.

இறுதிக் கட்டமாக நாடு முழுவதும் கடைகள், உணவகங்கள் மூடப்பட்டு, பொதுப் போக்குவரத்துகள் நிறுத்தப்படும். மருத்துவமனைகளுக்கு சிலிண்டர், ஆம்புலன்ஸுகளுக்கு பெட்ரோல், டீசல் கிடைக்காது. கரோனா பொது முடக்கம் போன்ற சூழல் ஏற்படும் என அஞ்சப்படுகிறது (இவையெல்லாமும் ஏற்கெனவே பாகிஸ்தானில் தொடங்கிவிட்டன!).

இதனிடையே, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துகொள்ள இந்தியாவுக்கு இடைக்கால அனுமதி அளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

தற்போது ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், சிலிண்டர்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை பதுக்கி வைப்பதை தடுக்கும் வகையில் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தை (எஸ்மா) மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு போர் நமது சமையலறை வரை வந்துவிட்டது. நிலைமையை சீராக வைத்துக்கொள்ள எத்தனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அமெரிக்கா போரை நிறுத்தினால் மட்டுமே இயல்பு நிலைமை மீளும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.