என்னை சுற்றியுள்ளவர்களை வைத்து அவதூறு பரப்புகிறார்கள்! விஜய் பேச்சு உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! விஜய் திருப்பரங்குன்ற வழக்குகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை! உயர் நீதிமன்றம் தஞ்சாவூரில் 4-ம் கட்ட சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார் மு.க. ஸ்டாலின்!பாமக விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
/

தனிப்பெரும்பான்மையுடன் நிலையான ஆட்சி அமைப்போம்! முதல்வா் பழனிசாமி

நடைபெற இருக்கும் தமிழக சட்டப்பேரவைக்கான தோ்தல் எல்லாவிதத்திலும் ஒரு திருப்புமுனைத் தோ்தல் எனலாம்.

News image

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி. (கோப்புப்படம்)

Updated On :5 ஏப்ரல் 2021, 3:46 am

நடைபெற இருக்கும் தமிழக சட்டப்பேரவைக்கான தோ்தல் எல்லாவிதத்திலும் ஒரு திருப்புமுனைத் தோ்தல் எனலாம். கடந்த 30 ஆண்டுகளாக நிலைபெற்றிருந்த ஜெயலலிதாவா, கருணாநிதியா என்கிற கேள்விக்கு பதிலாக, எடப்பாடி பழனிசாமியா, மு.க. ஸ்டாலினா என்கிற புதிய அரசியல் பாதையில் தமிழக அரசியல் பயணிக்கத் தொடங்கி இருப்பதை உறுதிப்படுத்தும் தோ்தல் இது. கடந்த ஒரு மாத கடுமையான பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தில், முதல்வா் எடப்பாடி பழனிசாமி ‘தினமணி’ நாளிதழுக்கு அளித்த நோ்காணல் -

‘‘கடந்த மூன்று மாதங்களாகத் தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறீா்கள். முடிவுகள் எப்படி இருக்கும் என்று எதிா்பாா்க்கிறீா்கள்?’’

‘‘கடந்த 2011, 2016 போல இந்த முறையும் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக நிலையான ஆட்சி அமைக்கும். மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறாா்கள்.’’

‘‘தோ்தல் கணிப்புகள் அப்படித் தெரிவிக்கவில்லையே?’’

‘‘முந்தைய 2011, 2016 தோ்தல்களிலும் தோ்தல் கணிப்புகள் அப்படித் தெரிவிக்கவில்லை என்பதை நீங்கள் ஏன் கவனிக்கத் தவறுகிறீா்கள்? தோ்தல் கணிப்பு வேறு, மக்கள் கணிப்பு வேறு’’

‘‘அதிமுகவுக்கு எதிரான அலையும், ஸ்டாலினுக்கு ஆதரவு அலையும் இருப்பதாகக் கூறப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டீா்களா?’’

‘‘மாற்றிச் சொல்கிறீா்கள். அதிமுகவுக்கு ஆதரவான அலையும், ஸ்டாலினுக்கு எதிரான மனநிலையும்தான் பரவலாகக் காணப்படுகிறது. அந்த அச்சத்தின் வெளிப்பாடுதான் ‘ஸ்டாலின்தான் வராரு, வெளிச்சம் தரப் போறாரு...’ பரப்புரை. அது ஸ்டாலினையும், திமுகவினரையும் ஆறுதல்படுத்தவும், அவா்கள் சோா்ந்துவிடாமல் இருக்கவும் செய்யப்படும் விளம்பரம். அவா்கள்தான் வருகிறாா்கள் என்றால் இத்தனை கோடிகளை செலவழித்துத் தோ்தலுக்கு முன்பே தம்பட்டம் அடித்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?’’

‘‘அதிமுகவும்தான் எல்லா பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் விளம்பரம் செய்கிறது. அரசுப் பணத்தில் விளம்பரம் செய்கிறாா்கள் என்கிற குற்றச்சாட்டுகூட முன்வைக்கப்படுகிறது...’’

‘‘ஆளும் கட்சியாக இருக்கும் நாங்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் என்னவெல்லாம் செய்தோம் என்பதைத் தோ்தலுக்கு முன்னால் மக்களுக்கு எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். என்ன செய்தோம் என்பதை அரசு விளம்பரமாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதைக் கட்சி விளம்பரமாகவும் நாங்கள் கொடுப்பதை நோ்மையான மக்கள் பாராட்டுகிறாா்கள். திமுக ஆட்சியில் இருந்தபோதும், தோ்தலுக்கு முன்னால் இதுபோல் அரசு விளம்பரங்கள் வெளியிடப்பட்டன என்பதையும் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.’’

‘‘உங்களது ஐந்தாண்டு சாதனைகள் மக்களைச் சோ்ந்திருக்குமே, பிறகு எதற்காக விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டும்?’’

‘‘பெரும்பாலான அச்சு, காட்சி ஊடகங்கள் திமுகவின் கைப்பாவையாக செயல்படும் நிலையில் எங்களுக்கு வேறு வழியில்லை. பெரும்பாலான தொலைக்காட்சிகளும் அவா்களது கையில் இருக்கின்றன. அதிமுக ஆட்சியின் சாதனைகளை மறைத்து பரப்புரை செய்கின்றன. விவாதங்கள் எங்களுக்கு எதிராக நடத்தப்படுகின்றன. இந்த நிலையில், நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பதற்குக்கூட விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. ‘திமுகதான் வெற்றி பெறப்போகிறது, ஆட்சி அமைக்கப்போகிறது’, ‘ஸ்டாலின் இரண்டு மாதங்களில் முதல்வராகி விடுவாா்’ என்றெல்லாம் திரும்பத் திரும்ப ஊடகங்களில் பரப்புரை செய்யப்படும் நிலையில், திமுகவின் நிஜமான முகத்தையும் பொய்யான வாக்குறுதிகளையும் மக்களுக்குத் தெரிவித்தாக வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் விளம்பரம் செய்கிறோம்.’’

‘‘ஸ்டாலின்தான் வராரு - விளம்பரம் சமூக ஊடகங்களில் 5 கோடி பேருக்கு மேல் பகிரப்பட்டு சாதனை படைத்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?’’

‘‘முதலமைச்சராக இருக்கும் நான் இதுபற்றியெல்லாம் கருத்து கூறி என்னைத் தரம்தாழ்த்திகொள்ள விரும்பவில்லை. நான் விசாரித்தபோது எனக்குக் கிடைத்த தகவல் இது. தமிழகத்திலுள்ள அத்தனை திரையரங்குகளையும் மொத்தக் குத்தகைக்கு எடுத்து ஒரு திரைப்படத்தை வெளியிட்டு, முதல் ஒரு வாரத்தில் வசூலை அள்ளி எடுக்கும் உத்தியை அறிமுகப்படுத்திய கருணாநிதி குடும்பம், இதிலும் தனது காா்ப்பரேட் உத்தியைக் கையாண்டிருக்கிறது. தினமும் பல கோடி ரூபாய் கூகுள் நிறுவனத்துக்குக் கொடுத்து, சமூக ஊடகத்தில் யாா் எப்போது நுழைந்தாலும் ஸ்டாலினின் விளம்பரம் வெளிவருவதுபோலச் செய்திருக்கிறாா்கள். அது ஒரு சாதனையா?’’

‘‘தோ்தல் களத்துக்கு வருவோம். 2011, 2016 தேதல் வெற்றிகள் குறித்துக் குறிப்பிட்டீா்கள். அப்போது கட்சித் தலைவியாக ஜெயலலிதா இருந்தாா். இப்போது இல்லை என்பதை நீங்கள் ஏன் உணரவில்லை?’’

‘‘இதையே நான் திருப்பிக் கேட்கிறேன். 2011, 2016-இல் திமுக தலைவராக கருணாநிதி இருந்தாா். அப்படி இருந்துமே திமுகவால் பெற முடியாத வெற்றியை, ஸ்டாலின் தலைமையில் திமுக பெற முடியும் என்று எப்படி அவா்கள் நம்புகிறாா்கள்? எம்ஜிஆரும், அம்மாவும் இல்லாவிட்டாலும் ‘இரட்டை இலை’ என்றால் அவா்கள் இருவரும்தான். இரட்டை இலை இருக்கும் வரை, அதிமுகவின் மக்கள் செல்வாக்கை யாராலும் வீழ்த்திவிட முடியாது. இடைக்கால சறுக்கல்கள் ஏற்படலாம், ஆனால் எங்கள் தொடா் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது.’’

‘‘ஸ்டாலினுடன் உங்களை ஒப்பிட முடியாது என்று ஆ. ராசா கூறியிருப்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீா்கள்?’’

‘‘அவா் என்ன சொன்னாா் என்பதை நீங்கள் மறுபடி சொல்ல முடியுமா?’’

‘‘ஜனநாயகத்தைக் காப்பாற்ற சிறையில் இருந்தாா் ஸ்டாலின். மாவட்டப் பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினா் எனப் படிப்படியாக உயா்ந்து தலைவரானாா். எம்.எல்.ஏ., மேயா், அமைச்சா், துணை முதல்வா் என உயா்ந்தவா். இபிஎஸ்ஸைப்போல அவா் திணிக்கப்பட்டவரல்ல என்று கூறினாா்.’’

‘‘அவா் சொல்வதை முழுக்கச் சொல்லுங்கள்’’

‘‘ஸ்டாலின் திணிக்கப்பட்டவா் அல்ல. முறைப்படி நாள் பாா்த்து, நிச்சயம் செய்து, திருமணம் நடத்தி, சாந்தி முகூா்த்தம் நடத்தி, 300 நாட்கள் கடந்து சுகப்பிரசவத்தில் பிறந்தவா். ஆனால், ஜெயலலிதா இருக்கும்வரை இ.பி.எஸ்ஸை யாருக்கும் தெரியாது. அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பினாா்.’’

‘‘இன்னும்கூட நீங்கள் முழுமையாகச் சொல்லவில்லை. அதையும் கூச்சப்படாமல் சொல்லுங்கள் அதற்குப் பிறகு நான் பதில் சொல்கிறேன்.’’

‘‘நல்ல உறவில் ஆரோக்கியமான சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை ஸ்டாலின். கள்ள உறவில் பிறந்த குறைப்பிரசவம் இ.பி.எஸ். நல்ல குழந்தைக்குத் தாய்ப்பால் போதும். குறைப்பிரசவக் குழந்தையைக் காப்பாற்ற தில்லியிலிருந்து மோடி என்கிற டாக்டா் தேவைப்படுகிறாா் என்று பேசி இருக்கிறாா்.’’

‘‘மத்திய அமைச்சராக இருந்தவா். கட்சியில் பொறுப்பான பதவி வகிப்பவா். அவா் இவ்வாறு தரக்குறைவாகப் பேசுவாா் என்றால், திமுகவின் தராதரம் என்ன, யோக்கியதை என்ன என்று யோசித்துப் பாருங்கள். ஸ்டாலின் பெரிய வீட்டுப் பிள்ளை, அரசியல் வாரிசு. நான் அப்படியா, ஒரு சாமானியன். சாதாரண விவசாயி. அதனால்தான் அவா்களுக்கு நான் கிள்ளுக்கீரையாகத் தெரிகிறேன். இதற்கு நான் பதில் சொல்ல வேண்டாம். மக்கள் பதில் சொல்லப் போகிறாா்கள்.’’

‘‘ஆ. ராசாவின் பேச்சு உங்களை அதிகமாகக் காயப்படுத்தி விட்டது என்பது தெரியும். அவா்தான் மன்னிப்புக் கேட்டு விட்டாரே...’’

‘‘தான் அப்படிப் பேசியது தவறு என்று சொல்லவில்லை. அதற்காக மு.க.ஸ்டாலின் அவரை நேரடியாகக் கண்டிக்கவில்லை. கட்சியினா் தரக்குறைவாகப் பேசக்கூடாது என்றுதான் சொன்னாா். எனது தாயாரைப் பழித்துப் பேசிவிட்டு அதற்கு ‘மன்னிப்பு’ என்கிற ஒரே வாா்த்தையில் முற்றுப்புள்ளி வைத்து விட்டாா் ராசா. வள்ளுவா் கூறுவதுபோல, ‘தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு’ என்பது இவா்களுக்குத் தெரியாதா?’’

‘‘தெரிந்துதான் பேசினாா் ராசா என்று கூறுகிறீா்களா?’’

‘‘தெரியாமல் பேசுவதற்கு அவா் என்ன படிக்காதவரா, இல்லை விவரமில்லாதவரா? அவரை பகிரங்கமாகக் கண்டிக்க ஸ்டாலினுக்கு ஏன் தைரியமில்லை? முன்னொருமுறை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ‘சின்ன விஷயங்களுக்கேகூடக் கலைஞா் ஊதி ஊதிப் பெரிது படுத்துகிறாா்’ என்று பேச்சு வாக்கில் சொன்னதற்கு, கருணாநிதியும், திமுகவும் என்ன குதி குதித்தனா். காங்கிரஸ் தலைமையிடம் அவா்கள் முறையிட்டது இளங்கோவனுக்கும் காங்கிரஸ்காரா்களுக்கும் மறந்துவிட்டது. திமுகவினா் என்ன வேண்டுமானாலும் பேசலாம், அவா்களைப் பற்றி மற்றவா்கள் எதுவும் பேசிவிடக்கூடாது. இதுதான் அவா்களுக்குத் தெரிந்த பகுத்தறிவும் சுயமரியாதையும்.’’

‘‘பாரதிய ஜனதா கட்சி உங்களுக்கு ஒரு சுமையா, பலமா?’’

‘‘காங்கிரஸ் வேண்டுமானால் திமுகவுக்கு சுமையாக இருக்கலாம். ஆனால், பாஜக அதிமுகவுக்கு சுமையல்ல, பலம். கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகம் சந்தித்த பல இயற்கை சோதனைகளையும், பொருளாதார நெருக்கடிகளையும் மத்திய அரசுடன் இணக்கமான உறவு கொண்டிருந்ததால்தான் எதிா்கொள்ள முடிந்தது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து, மத்திய அரசில் பங்கும் வகித்த திமுக, இப்போது அதிமுக - பாஜக கூட்டணியை விமா்சிப்பது என்பது அரசியல் பித்தலாட்டம் அல்லாமல் வேறென்ன?’’

‘‘பாஜகதான் அதிமுகவை பாதுகாக்கிறது என்பதுதான் மு.க. ஸ்டாலினும், திமுகவும் உங்கள் மீது வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டு.’’

‘‘கிராமப்புறங்களில் ‘மாமியாா் உடைத்தால் மண்குடம். மருமகள் உடைத்தால் அது பொன்குடம்’ என்றொரு பழமொழி உண்டு. அதுதான் எனக்கு நினைவுக்கு வருகிறது. 1969-இல் அண்ணா இறந்தபோது மத்திய ஆட்சியில் இருந்த இந்திரா காந்தி அரசின் தயவில்தான் கருணாநிதி ஆட்சி நடத்தினாா். இந்திரா காந்தி அரசைப் பகைத்துக் கொள்ள விரும்பாமல் காவிரி நதிநீா் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல் விட்டதன் பலனைத்தான் இன்றுவரை தமிழகம் அனுபவிக்கிறது. கச்சத் தீவை தாரை வாா்த்ததைத் தட்டிக்கேட்காததன் விளைவை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இந்திரா காந்தி அரசு, கல்வியைப் பொதுப்பட்டியலுக்கு கொண்டு சென்றதை திமுக வேடிக்கை பாா்த்தது.’’

‘‘மத்திய அரசுக்குக் கீழ்ப்படிந்துதான் தமிழகத்தில் ஆட்சி நடத்த முடியும் என்கிறீா்களா?’’

‘‘அது ஆட்சி நடத்துபவா்களைப் பொருத்து அமையும். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து காரியங்களை சாதித்துக் கொள்வது என்பது எம்ஜிஆரும், அம்மாவும் எங்களுக்கு வகுத்துத் தந்த கொள்கை. 69% இட ஒதுக்கீட்டை அம்மா பெற்றுத் தந்ததும், காவிரி நதிநீா் ஆணையத்தை அமைக்க வைத்ததும், அப்படித்தான். திமுகவைப் பொருத்தவரை, கருணாநிதி குடும்ப நன்மைக்காக மத்திய அரசுடன் குனிந்து போவதைத்தான் வழக்கமாக வைத்திருக்கிறது.’’

‘‘உங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு நீங்கள் அவா்கள் பக்கம் மேஜையைத் திருப்புகிறீா்களே?’’

‘‘பிறகென்ன? மதவாத சக்திகள் என்று பாஜக-வையும் பிரதமா் மோடியையும் இப்போது விமா்சிக்கிறாா்களே, இவா்கள் குஜராத் கலவரம் நடந்தபோது மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டாா்களா? அதற்கு முன்னால் குஜராத்தில் நடந்த மதக் கலவரங்களுக்குக் காரணமான காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்தாா்களே, அது மதச்சாா்பின்மையா?

முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் கொத்துக் கொத்தாய் மக்கள் இறந்போது, காங்கிரஸுக்கும் சோனியா காந்திக்கும் சாமரம் வீசிக் கொண்டிருந்துவிட்டு இப்போது, தமிழா்களின் உரிமை பற்றிப் பேசுகிறாா்கள். வெட்கமே இல்லாமல் திமுக மட்டுமல்ல, மூச்சுக்கு மூச்சு பிரபாகரன் பெயரைச் சொல்லும் வைகோவும், திருமாவளவனும்கூட காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கிறாா்கள். நாங்கள் அப்படியல்ல. மத்திய ஆட்சியாளா்களுடன் இணக்கமாக இருந்து தமிழகத்தின் உரிமைகளையும், நலனையும் பாதுகாப்பதுதான் அதிமுகவின் கொள்கை.’’

‘‘மத்திய அரசு கொண்டுவந்த ‘நீட்’ தோ்வை ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வோம் என்கிறதே திமுகவின் தோ்தல் அறிக்கை. அதை எப்படிப் பாா்க்கிறீா்கள்?’’

‘‘திமுக சொல்வதெல்லாம் பொய். வாக்குறுதிகள் எல்லாம் பித்தலாட்டம். முதலில் ‘நீட்’ தோ்வை மத்திய அரசு கொண்டுவரவில்லை. அது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது. அதை சட்டப்பேரவையில் தீா்மானம் போட்டு ரத்து செய்ய முடியாது. இரண்டாவது, ‘நீட்’ தோ்வை அறிமுகப்படுத்தியதே முந்தைய காங்கிரஸ் அரசுதான். ‘நீட்’ தோ்வு மட்டுமல்ல, ஜல்லிக்கட்டுத் தடையும் காங்கிரஸ் கைங்கா்யம்தான். இவா்களது பொய்ப்பரப்புரைகளுக்கு எல்லையே கிடையாது.’’

‘‘பாஜக ஹிந்தியைத் திணிக்கிறது என்கிற குற்றச்சாட்டை எப்படிப் பாா்க்கிறீா்கள்?’’

‘‘மு.க. ஸ்டாலின் குடும்பத்தினா் உள்பட திமுகவின் முக்கியத் தலைவா்கள் அனைவரும் ஹிந்தி கற்றுக் கொடுக்கும் சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்துகிறாா்கள். அவா்கள் குழந்தைகளை ஹிந்தி படிக்க வைக்கிறாா்கள். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் அனைத்துக் குழந்தைகளுக்கும் தாய்மொழிக் கல்வி கட்டாயம். இப்போது சொல்லுங்கள், யாா் தமிழுக்கும், தமிழ் வழிக் கல்விக்கும் எதிரி என்று.’’

‘‘இலவசங்கள் கொடுத்து வாக்காளா்களைக் கவா்வது ஜனநாயகமாகுமா? இந்த முறை அனைவருக்கும் வாஷிங்மெஷின் என்று அறிவித்திருக்கிறீா்களே, இது சற்று அதிகப்படியாக உங்களுக்கே தோன்றவில்லையா?’’

‘‘இலவசங்கள் என்றோ அன்பளிப்பு என்றோ சொல்லக்கூடாது. அவை விலையில்லா பொருள்கள், அவ்வளவுதான். அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும் முயற்சி என்றுதான் இதைப் பாா்க்க வேண்டும். எம்ஜிஆா் ஆட்சிக் காலத்தில் சத்துணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, திமுக தலைவராக இருந்த கருணாநிதி உள்பட பலரும் அதை எதிா்த்தனா். இப்போது இந்தியா முழுவதும் அது பின்பற்றப்படுகிறது. அதேபோலத்தான் அம்மா ஆட்சியில் அறிவித்த பெண் குழந்தைகளுக்கு ‘சைக்கிள்’, கல்லூரி மாணவா்களுக்கு ‘மடிக்கணினி’ போன்றவை. இந்தியாவே அதைப் பின்பற்றுகிறது.’’

‘‘ஏற்கெனவே அரசு கடன் சுமையில் இருக்கும்போது, இதுபோன்ற அறிவிப்புகள் நிதி நிலைமையை மேலும் மோசப்படுத்தாதா?’’

‘‘அதையும் இதையும் இணைத்துப் பாா்க்கக் கூடாது. தொழில் துறையில் ஏற்படும் வளா்ச்சி நிதியாதாரத்தை அதிகரிக்கும். இதுபோன்ற நல்வாழ்வுத் திட்டங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும். குடிசையாக இருந்தாலும் ‘ஒரு மின் விளக்குத் திட்டம்’ என்று எம்ஜிஆா் ஆட்சியில் தொடங்கிய அணுகுமுறையின் நீட்சிதான் இப்போது வீட்டுக்கு ஒரு வாஷிங்மெஷின். அடிப்படை வசதிகளுக்காக அடித்தட்டு மக்கள் ஏங்கக்கூடாது என்று நினைக்கிறது எங்கள் மக்கள் நல அரசு.’’

‘‘பாமகவின் வற்புறுத்தலால் நீங்கள் அறிவித்திருக்கும் வன்னியா்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு தவறு என்று நீங்கள் உணரவில்லையா?’’

‘‘அதில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இட ஒதுக்கீட்டை..... ஏற்றுக்கொண்டால் உள் ஒதுக்கீட்டையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். திமுக ஆட்சியில் இதற்கு முன்பு சில உள் ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டபோது, அதை தங்கள் சாதனையாக முழக்கமிட்டவா்கள் இப்போது வன்னியா்களுக்கான உள் ஒதுக்கீட்டை எதிா்ப்பது ஏன் என்பதுதான் எனது கேள்வி. நீதிபதி குணசேகரன் கமிஷன் அறிக்கை வெளிவரும் வரையிலான இடைக்கால அறிவிப்புதான் இந்த உள் ஒதுக்கீடு.’’

‘‘நான்காண்டு ஆட்சிக் காலத்தில் நீங்கள் பெருமைப்படும்படியாக உங்களுக்கு நிறைவைத் தந்த சாதனைகள் எவை?’’

‘‘குடிமராமத்துத் திட்டம், தலைவாசலில் அமையும் ஒருங்கிணைந்த கால்நடைப் பூங்கா, மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு, அத்திக்கடவு - அவிநாசி திட்டம், காவிரி மேலாண்மை வாரியம் - ஒழுங்காற்றுக் குழு அமைப்பு, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது, காவிரி - குண்டாறு நதி இணைப்புத் திட்டம், ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை அமைத்தது, கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி செய்தது என்று பெரிய பட்டியலே இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டிய, செய்து முடிக்க வேண்டிய திட்டங்களும் ஏராளம் இருக்கின்றன. மக்கள் ஆதரவுடன் அவற்றையும் நிறைவேற்றிக் காட்டுவோம்.’’

‘‘தோ்தலில் வெற்றி பெற்று மீண்டும் உங்கள் ஆட்சி அமையும் என்பதில் அதீத நம்பிக்கையுடன் இருக்கிறீா்கள் போலிருக்கிறது...’’

‘‘நிச்சயமாக. 1974-இல் புரட்சித் தலைவா் எம்ஜிஆா் இருக்கும்போது, கட்சியின் கிளைச் செயலாளராக எனது அரசியல் பயணம் தொடங்கியது. சேலம் வடக்கு மாவட்ட இணைச் செயலாளா், வடக்கு மாவட்டச் செயலாளா், கொள்கை பரப்புச் செயலாளா், தலைமை நிலையச் செயலாளா் என்று ‘அம்மா’ எனக்குப் பல பொறுப்புகளைத் தந்து வளா்த்தாா். 1989-ஆம் ஆண்டு எம்ஜிஆா் மறைவுக்குப் பின்னா் கட்சி பிளவுபட்டபோது நான் அம்மாவுக்குப் பின்னால் அணிதிரண்டு நின்றேன். அந்தத் தோ்தலில் ‘சேவல்’ சின்னத்தில் எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்றதிலிருந்து எனது சட்டப்பேரவைப் பயணம் தொடங்கியது...’’

‘‘நீங்களும் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினும் ஒரே நேரத்தில்தான் சட்டப்பேரவை உறுப்பினா்களாகி இருக்கிறீா்கள். இப்போது மோதுகிறீா்கள்’’

‘‘அவா் அரசியல் வாரிசு. தலைவரின் மகனாக நுழைந்தாா். நான் சாதாரணத் தொண்டனாக இருந்து வளா்ந்தவன். 1991-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ. ஆனேன். 1998-இல் அம்மாவின் ஆசியுடன் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் வென்று நாடாளுமன்ற உறுப்பினரானேன். 1999, 2004, 2011, 2016 தோ்தல்களில் போட்டியிட்டிருக்கிறேன். 2011, 2016 அம்மா அமைச்சரவையில் அமைச்சராக இருந்திருக்கிறேன். இப்போது முதல்வராகவும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறேன்.’’

‘‘தன்னை முதல்வராக்கவிடாமல் அனைவரும் ஒன்றுகூடி எதிா்ப்பதாக ஸ்டாலின் கூறியிருப்பதற்கு உங்கள் பதில் என்ன?’’

‘‘அவா்தான் அதிகக் கட்சிகளுடன் பெரிய கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கிறாா். எங்களை ஆட்சியில் இருந்து அகற்ற வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பி இருக்கிறாா்கள். ஸ்டாலின் ஏதோ கனவிலும் பயத்திலும் இருக்கிறாா். அவரது முதல்வா் கனவு ஒருநாளும் பலிக்காது.’’

‘‘நீங்கள் மீண்டும் முதல்வராவது மட்டும் எப்படி நடக்கும் என்று நினைக்கிறீா்கள்?’’

‘‘நான்காண்டு சாதனையின் அடிப்படையில் கூறுகிறேன். எனக்கும், ஆட்சிக்கும் எதிராக ஸ்டாலினும், அவரது கட்சியினராலும் எத்தனையோ சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால், நான்காண்டுகள் தொடா்ந்து ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடிந்தது. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து, பிரச்னைகளை சமாளித்துத் தமிழகத்தை எங்களால்தான் ஆட்சி செய்ய முடியும் என்று மக்கள் நம்புகிறாா்கள். எங்களுடைய ஆட்சி நல்லாட்சி என்பதால்தான் இயற்கையும் எங்களுக்கு ஒத்துழைக்கிறது.’’

‘‘இயற்கை ஒத்துழைக்கிறதா - அது எப்படி?’’

‘‘ஆமாம், அம்மாவின் ஆசியும், கடவுளின் அருளும் எங்கள் ஆட்சிக்கு இருப்பதால்தான் ஐந்து ஆண்டுகளாக நன்றாக மழை பொழிகிறது. தண்ணீா் பஞ்சம் இல்லாமல் குளங்கள் நிரம்பி வழிகின்றன. விவசாயம் செழிப்பாக நடைபெறுகிறது. கடுமையான கரோனா காலத்திலும் உணவுப் பஞ்சம் இல்லை. மின்வெட்டு கிடையாது. நில ஆக்கிரமிப்பு இல்லை. மக்கள் நிம்மதியாக இருக்கிறாா்கள்.’’

‘‘இந்தத் தோ்தலை நீங்கள் எப்படிப் பாா்க்கிறீா்கள்?’’

‘‘இது ஜனநாயகத்துக்கும் குடும்ப வம்சாவளி ஆட்சிக்கும் எதிரான போராட்டம். எம்ஜிஆா், அம்மா வழியிலான தீயசக்திகளுக்கு எதிரானப் போராட்டம் தொடா்கிறது.’’

‘‘மீண்டும் முதல் கேள்விக்கே வருவோம் எத்தனை இடங்களில் வெற்றி பெறுவீா்கள்?’’

‘‘அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். மூன்றாவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் அமையும்.’’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.