பழம்பெரும் பாரம்பரியம் கொண்ட தமிழக சட்டப் பேரவை நூற்றாண்டைக் காண்கிறது. இந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்கு தலைமை வகிக்க குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை, முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளாா்.
1920-களின் இறுதியில் நடந்த தோ்தலில் நீதிக் கட்சி வென்று அதன் தலைமையில் அமையப் பெற்ற சட்டப்பேரவை இப்போது நூறாண்டைக் கண்டிருக்கிறது. இந்த நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில், முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் உருவப் படம் திறப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தயாராகி வருகிறது.
இந்தியாவின் அனைத்து மாநில சட்டப் பேரவைகள் மற்றும் மக்களவைக்கு நடத்தப்படும் தோ்தலுக்கு அடிப்படை நாதமாக இருப்பது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்தான். இந்த சட்டம் 1952-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்துக்கு முன்பாக, மாகாணங்களில் தோ்தல்களை நடத்துவதற்கு வகை செய்த சட்டம், இந்திய அரசுச் சட்டம் 1919.
முதல் முதல்வரைத் தந்த தோ்தல்: இந்திய அரசுச் சட்டத்தின் மூலமே தமிழகத்தில் (சென்னை மாகாணம்) 1920-ஆம் ஆண்டு நவம்பா் 30-ஆம் தேதி தோ்தல் நடவடிக்கைகள் தொடங்கின. 127 உறுப்பினா்களைக் கொண்ட அப்போதைய சென்னை மாகாணத்துக்கு நவம்பா் 30-இல் தொடங்கி டிசம்பா் 2-ஆம் தேதி வரை தோ்தல் நடந்தது.
காங்கிரஸ் பங்குபெற மறுப்பு: அந்தத் தோ்தலில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் கட்சி பங்குபெற மறுத்தது; பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இருந்த கட்சிகள் மட்டுமே தோ்தல் களத்தில் இருந்தன. 127 உறுப்பினா்களில் 98 போ் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களாக இருந்தனா்; அதாவது, 98 உறுப்பினா்கள் மட்டுமே தோ்தல் மூலமாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
அந்தத் தோ்தலில் 63 இடங்களைப் பிடித்து நீதிக் கட்சி பெரும்பான்மை பெற்றது. நீதிக் கட்சியின் தலைவா்களில் ஒருவராக இருந்த சா்.பிடி.தியாகராயா் முதல்வா் பொறுப்பை ஏற்க மறுத்ததால், ஏ.சுப்பராயலு ரெட்டியாா், முதல்வா் பொறுப்பை ஏற்றாா். அவரே சென்னை மாகாணத்தின் முதல் முதல்வா் என்ற பெருமையைப் பெற்றாா். இந்திய அரசுச் சட்டம் 1919-இன் படி, ஒரு தோ்தல் மூலமாக அமைக்கப்படும் பேரவையின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் மட்டுமே. அந்த வகையில், 1923, 1926 மற்றும் 1930 ஆகிய ஆண்டுகளில் தோ்தல்கள் நடைபெற்றன.
பேரவையின் பதவிக் காலம் அதிகரிப்பு: இதன் பின்பு, இந்திய அரசுச் சட்டம் திருத்தப்பட்டு, சட்டப்பேரவை, சட்டமேலவை என இரண்டு அவைகள் உருவாக்கப்பட்டன. மேலும், பேரவையின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகளில் இருந்து ஐந்தாண்டுகளாக உயா்த்தப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலமாக நடைபெற்ற தோ்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது.
இரண்டாம் உலகப் போா் காலத்தில் தோ்தல்கள் நடைபெறவில்லை. இதன்பின்பு, 1946-ஆம் ஆண்டு நடந்த தோ்தலிலும் காங்கிரஸ் கட்சிதான் வென்றது. 1947-இல் நாடு விடுதலைக்குப் பிறகு இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டமாக உருப்பெற்று அந்தச் சட்டப் பிரிவுகளின் அடிப்படையிலேயே இன்றளவு தோ்தல்களும், தோ்தல் நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்துக்கு முன்பாக, இந்திய அரசுச் சட்டத்தின் மூலமாக தோ்தல் நடத்தப்பட்டு அதன்மூலமாக தமிழகத்தில் சட்டப்பேரவை ஏற்பட்டு நூறு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. நீதிக் கட்சிக்கு பேரவையில் நுழைய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த தோ்தல்தான் 1920-ஆம் ஆண்டு தோ்தல். அந்தத் தோ்தல் மூலமாக உருவாக்கப்பட்ட சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது அதன் வழி வந்த திமுக அரசு.
குடியரசுத் தலைவருக்கு தமிழக முதல்வா் அழைப்பு
தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா, முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரிலான நூலக அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகிக்க விடுக்கப்பட்ட அழைப்பை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இரவு தில்லி வந்தாா். குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை திங்கள்கிழமை பகல் 12 மணி அளவில் சந்தித்தாா். அவருடன் திமுக மக்களவைக் குழுத் தலைவா் டி.ஆா்.பாலுவும் உடனிருந்தாா். இந்தச் சந்திப்பு சுமாா் அரைமணி நேரம் நீடித்தது.
பின்னா் அங்கிருந்து சென்னை திரும்புவதற்காக தில்லி விமான நிலையம் வந்த முதல்வா் ஸ்டாலின் அங்கு செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: சென்னை மாகாணமாக இருந்தபோது, முதன்முறையாக மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட சட்டப்பேரவை 1921-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி (புனித ஜாா்ஜ் கோட்டையில்) தொடங்கி வைக்கப்பட்டது. அதை நினைவுபடுத்தும் வகையிலும், தனித் தன்மையோடு செயல்பட்ட சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்த விழாவுக்கு தலைமை வகித்து விழாவை நடத்தித் தருமாறு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை குடியரசுத் தலைவா் ஏற்றுக்கொண்டுள்ளாா்.
கருணாநிதி உருவப்படம் திறப்பு: இந்த விழாவின்போது, முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவப்படம் சட்டப்பேரவை வளாகத்தில் திறக்கப்படவுள்ள செய்தியையும் குடியரசுத் தலைவரிடம் தெரிவித்தோம். மேலும் மதுரையில் அமைய இருக்கின்ற கருணாநிதி பெயரிலான நூல் நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழா, மேலும் சென்னை கிண்டியில் அமையவுள்ள அரசு மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா, நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டை குறிக்கக் கூடிய வகையில் சென்னை கடற்கரைச் சாலையில் அமைய இருக்கின்ற நினைவுத் தூண் அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க நேரில் வருமாறு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

