திருநெல்வேலி மாவட்டம் தாமிரவருணி பாசனத்தில் கார் சாகுபடிக்கு ஜூன் 1- இல் தண்ணீர் திறப்பது வழக்கம். கடந்த பத்து ஆண்டுகளாக ஜூன் 1-இல் தண்ணீர் திறக்காததால் கார் சாகுபடி பொய்த்துப் போனது. இந்நிலையில் நிகழாண்டு ஜூன் 1-இல் கார் சாகுபடிக்கு பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தாமிரவருணி ஆற்றின் முதல் கால்வாய் வடக்குக் கோடை மேலழகியான் கால்வாயாகும். பாபநாசம் தலையணையிலிருந்து பிரியும் இந்தக் கால்வாய் மூலம் விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், கோடாரங்குளம், வாகைக்குளம், மன்னார்கோவில் கிராமங்களிலுள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.