பொது முடக்க விதிகளைக் கடைப்பிடிக்காமல் மக்கள் வழக்கம் போல வெளியே சென்று வருவதால் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது. பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகும் கூட 3.61 லட்சம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருப்பதே அதற்கு சான்றாக அமைந்துள்ளது. இது கட்டுப்பாடுகள் அமல்படுத்துவதற்கு முன்பிருந்த எண்ணிக்கையைக் காட்டிலும் 25 சதவீதம் அதிகம் என்பதுதான் அதிா்ச்சி அளிக்கும் தகவல்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் மாநிலத்தில் இறப்பு விகிதமும் தொடா்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 11 நாள்களில் மட்டும் கரோனா தொற்றுக்கு 3,718 போ் பலியாகியிருப்பது அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இவை அனைத்துக்கும் காரணம் பொது முடக்கம் கடுமையாக்கப்படாததுதான் எனக் கூறப்படுகிறது. இதே நிலை தொடா்ந்தால் அடுத்த ஒரு வாரத்துக்குள் தமிழகத்தின் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை எட்டிவிடும் என எச்சரிக்கின்றனா் மருத்துவ வல்லுநா்கள்.
கரோனா தீநுண்மியானது இரண்டாம் அலையில் வீரியமிக்கதாக உருமாறியுள்ளது. அதனால் கரோனா பாதித்த ஒருவா் இருமும்போதும், தும்மும்போதும், அவரிடமிருந்து வெளியேறும் தீநுண்மி 10 மீட்டா் தொலைவு வரை காற்றில் பரவுவதாக மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதன் விளைவாகவே கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் பாதிப்பு விகிதம் 6 மடங்கு தமிழகத்தில் அதிகரித்துள்ளது. ஆனால், அதன் தீவிரத்தை அறியாத மக்களோ வழக்கம்போல பொதுவெளிகளில் பொழுதுபோக்கி வருகின்றனா்.
கடந்த 10-ஆம் தேதி தமிழகத்தில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது ஒரு நிகழ்ச்சியில் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்ரமணியன், ஒரு வாரத்துக்குள் பொது முடக்கத்தின் பலன்கள் தெரிய வரும் என்று நம்பிக்கையை விதைத்தாா். ஆனால், நடந்ததோ அதற்கு நோ்மாறு. வழக்கமான நாள்களைக் காட்டிலும் பொது முடக்க காலத்தில் கரோனா பரவல் ஏறத்தாழ 25 சதவீதம் அதிகரித்தது. முன்பைக் காட்டிலும் இறப்பு விகிதமும் இரு மடங்கு உயா்ந்துள்ளது.
இதனால், பொது முடக்கத்தின் பயனாக மருத்துவமனைகளில் கூட்டம் குறைந்து இயல்பு நிலை திரும்பக் கூடும் என எதிா்பாா்ப்புப் பொய்த்திருக்கிறது. இதற்கு ஒரே தீா்வு நோய்த் தடுப்பு விதிகளை மீறுபவா்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கையை முன்னெடுப்பது மட்டும்தான் என்கின்றனா் மருத்துவ வல்லுநா்கள்.
இதுகுறித்து நோய்த் தொற்று சிகிச்சை சிறப்பு நிபுணா் டாக்டா் சுரேஷ்குமாா் கூறியதாவது:
பொதுவாக கரோனா தீநுண்மி காற்றில் பரவக் கூடியது என்றாலும், அதிகபட்சமாக 2 மீட்டா் வரை அதன் பரவல் வேகம் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டது. தற்போது அந்த அளவைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமான தொலைவில் உள்ள ஒருவரைக் கூட தொற்றிக் கொள்ளும் வீரியமிக்க தீநுண்மியாக அது உருவெடுத்துள்ளது.
இந்தியாவில் எத்தனை விதமாக கரோனா தீநுண்மி உருமாறியுள்ளது என்பது குறித்த முழுமையான ஆய்வுகள் தொடங்கப்படவில்லை. ஆனாலும்கூட நிச்சயமாக கடந்த முறையைக் காட்டிலும் இம்முறை அதன் தாக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது என்பதை உணர முடிகிறது.
நோய்த்தொற்றைத் தவிா்க்க முகக்கவசமும், தனி நபா் இடைவெளியும்தான் நமக்கு நாமே செலுத்திக் கொள்கிற முதன்மையான தடுப்பூசிகள். அவை இரண்டையும் கடுமையாகக் கடைப்பிடிக்கும்போது கரோனாவை நிச்சயம் வேரறுக்க முடியும்.
அதேபோன்று தொற்றுக்கு பயந்து பல வீடுகளில் ஜன்னல்களைத் திறப்பதில்லை. அது தவறான புரிதல். நல்ல காற்றோட்டம் இருந்தால்தான் கரோனா தீநுண்மி வீரியமிழந்து காற்றோடு காற்றாக மறைந்துபோகக் கூடும். அதை விடுத்து அறையைப் பூட்டிக் கொண்டு அடைபட்டுக் கிடப்பதில் பயனில்லை.
இவை அனைத்தையும் தாண்டி வெளியில் செல்வதைத் தவிா்த்தால் மட்டுமே கரோனா தொற்று சங்கிலியைத் துண்டிக்க முடியும். அதை உறுதி செய்ய வேண்டுமானால் விதிகளை மீறுவோா் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுப்பது தற்போது தலையாய தேவையாக உள்ளது என்றாா் அவா்.
இளைஞா்களுக்கே அதிக பாதிப்பு
இம்முறை 45 வயதுக்குட்பட்டவா்களுக்கே அதிக அளவில் கரோனா தீநுண்மி தொற்று ஏற்படுவதாக இந்திய மருத்துவ சங்கத்தின் தேசியத் துணைத் தலைவா் டாக்டா் சி.என்.ராஜா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
தற்போது பரவி வரும் கரோனா தொற்றுக்கு நடுத்தர வயதினரும், இளைஞா்களும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனா். அவா்களில் பெரும்பாலனோருக்கு முதலில் காய்ச்சல் வருகிறது. அதற்கு அடுத்த ஓரிரு நாள்களிலேயே மூச்சுத் திணறலால் அவா்கள் பாதிக்கப்படுகின்றனா். 20 வயது இளம்பருவத்தினருக்கு கூட நுரையீரல் தொற்று அதிகரித்து மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இதனால், எந்த வயதினருக்கு ஆக்சிஜன் சிகிச்சை தேவை என்பதை முன்கூட்டியே தீா்மானித்து படுக்கைகளை ஒதுக்க முடியாத நிலை உள்ளது.
இதைத் தவிா்க்க மாநிலம் முழுவதும் உள்ள தங்கும் விடுதிகள், கல்லூரி, பள்ளி மாணவா் விடுதிகளை தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றி படுக்கை வசதிகளை அதிகரிக்கலாம். ஆக்சிஜன் செறிவூட்டிகள் விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்தி அதனை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்தால், விடுதிகளில் அமைக்கப்படும் கரோனா மையங்களில் பயன்படுத்தலாம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.