சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘மூல நோய்’ வேதனையை வேரறுக்கும் ‘கடுக்காய்’

'கடுக்காய்க்கு அக நஞ்சு' என்பது சித்த மருத்துவ மொழி. இந்த கடுக்காய் பெற்ற தாயை விட சிறந்தது என்று 'கடுக்காய் தாய்க்கதிகம் காண்' என்று அகத்தியர் குணவாகடம் கூறுகின்றது. 
சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘மூல நோய்’ வேதனையை வேரறுக்கும் ‘கடுக்காய்’

காலையில் எழுந்தவுடன் மலம் சிக்கல் இல்லாமல் நீங்கினால் அதுவே ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளம். மாறி போன வாழ்வியல் முறையும், உணவு கலாச்சாரமும் செரிமான உறுப்புகளுக்கு ரெட் சிக்னல் காட்டுவதால், காலையில் கழிக்க வேண்டிய மலம், நேரம் தவறி (சிலருக்கு காலை உணவுக்கு பின்னோ, மாலையிலே, அல்லது இரவிலோ) உடலின் சர்க்கேடியன் ரிதமையே தடம் மாற செய்கின்றது. 

பெருங்குடலில் அடங்கி கிடைக்கும் வாதம் (வாயு) காலையில் காபியை ஊற்றினால் தான் பலருக்கு வேலையை செய்ய ஆரம்பிக்கிறது. அப்போது தான் மலம் கழிக்கும் எண்ணமே பலருக்கு வருவது வாடிக்கையாகி விட்டது. இதுவே பல்வேறு நோய்களுக்கு முதற்காரணமாக அமைவதை பலரும் அறிவதில்லை. 

"டாக்டர் உட்காரவே முடியல, ஆசன வாயில் கடுமையான வலி, வேதனை, எரிச்சல், அத்துடன் கடுமையான மலச்சிக்கல், ,டாய்லெட் கழித்து மூன்று நான்கு நாள்கள் ஆகிறது, டாய்லெட் பக்கம் போகவே ரொம்ப பயமா இருக்கு, சில சமயத்துல மலத்துடன் சேர்த்து ரத்தம் சொட்டு சொட்டாக வடியுது" என்று உட்காரவும் முடியாமல், உட்கார்ந்த பின் எழவும் முடியாமல், அவதிப்படுபவர்களுக்கு எப்போது தான் மலம் சிக்கலின்றி வெளியேறும் என்ற எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க செய்யும் நோய் தான் "மூலம்" (பைல்ஸ்).

எதிரிக்கு கூட இந்த வலியோ, வேதனையோ வரக்கூடாது என்று எண்ணுபவர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டோர். 

என்ன தான் தீர்வு? 
இது ஒருபுறமிருக்க ஆபரேஷன் பண்ணா சரியாகிவிடும் என்று எண்ணி, ஆபரேஷன் செய்து விட்டு உணவுமுறைகளை சரிவர கடைபிடிக்காமல் மீண்டும் அதே குறிகுணங்களுடன் அவதியுற்று வருபவர்கள் மறுபுறம். இந்த வலிக்கும், வேதனைக்கும் என்ன தான் தீர்வு? என அவர்களின் பயத்தினை போக்கும், சர்வ ரோக நிவாரணியாக உள்ள, சித்த மருத்துவ மூலிகை தான் 'கடுக்காய்'. அதனால் தான் என்னமோ இதன் மற்றொரு பெயர் ‘அபயன்’  

'கடுக்காய் தின்றால் மிடுக்காய் வாழலாம்' என்ற பழமையை அறியாதவர் இல்லை. கிழத்தன்மையை தடுக்கும் அதாவது வயோதிகப் பருவத்தில் ஏற்படும் உடல் உள்ளுறுப்புகள் சிதைவை தடுக்ககூடிய அதிக அளவு ஆன்டி- ஆக்ஸிடன்ட் தன்மை உடைய மூலிகை இது. 

தமிழர்கள் வகுத்த அறுசுவைகளுள், உப்பு சுவை நீங்கலாக மற்ற ஐந்து சுவைகளும் உடையது இதன் சிறப்பு. 

சித்த மருத்துவம் கூறும் வாதம், பித்தம், கபம் ஆகிய நோய்க்கு ஆதாரமான மூன்று குற்றங்களையும் அனுபானத்திற்கு ஏற்றார் போல சரி செய்யும் மூலிகை இது. 

திருவள்ளுவரோ ‘காலையில் இஞ்சி. கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்’ என்று நோய்கள் அண்டாமல் இருக்க கூறியுள்ள வழிமுறைகளில் கடுக்காயை மாலை வேளையில் எடுக்கக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பொதுவாகவே கடுக்காய் கபத்தினை போக்கும். பலருக்கும் தெரிந்த பிரசித்திபெற்ற சித்த மருந்தான திரிபலா சூரணத்தில் நெல்லிக்காய், தான்றிக்காய் இவற்றுடன் கடுக்காயும் சேரும். 

'கடுக்காய்க்கு அக நஞ்சு' என்பது சித்த மருத்துவ மொழி. கடுக்காயின் மருத்துவ குணமுள்ள பழத்தினுள் உள்ள விதையை நீக்கி பயன்படுத்த வேண்டும். இந்த கடுக்காய் பெற்ற தாயை விட சிறந்தது என்று 'கடுக்காய் தாய்க்கதிகம் காண்' என்று அகத்தியர் குணவாகடம் கூறுகின்றது. 

திபெத் நாட்டின் பாரம்பர்ய மருத்துவம் கடுக்காயை 'மருந்துகளின் அரசன்' என்று உயர்த்தி சொல்கிறது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த கடுக்காயை தோலில் மலச்சிக்கலை தீர்க்கும் தன்மையுள்ள ஆந்த்ரோகுயினோன் வகையான வேதிப்பொருள் உள்ளது. இதில் கிட்டத்தட்ட 32% டேனின் உள்ளது இதன் சிறப்பு. 

இதில் உள்ள காலிக் அமிலம் வகையான ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையுள்ள பிளவேனாய்டு ‘செபுலின்’ இதன் மற்ற மருத்துவ குணங்களுக்கு காரணமாக உள்ளது.

கபத்தின் ரூபமாக உள்ள சளியை குறைக்கும் தன்மையுடையதால், கரோனா கால பெருமருந்தாகிய கப சுர குடிநீரில் கடுக்காய் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

கபத்தின் ரூபமாக உள்ள கொலஸ்டிரால் அதிகமுள்ளவர்களும் கடுக்காய் பொடியினை இரவு வேளையில் வெந்நீரில் கலந்து எடுக்க நல்ல பலன் தரும்.

இன்சுலின் போட்டும் சர்க்கரை அளவை குறைக்க முடியவில்லை என்று அலுத்துபோகும் டைப்-1 நீரிழிவு நோயாளிகள் இரவில் தினசரி கடுக்காய் சூரணத்தை எடுக்க இன்சுலின் உணர்திறனை (சென்சிடிவிடி) அதிகரிக்க செய்து, இன்சுலின் தடையை (ரெசிஸ்டன்ஸ்) நீக்கி சர்க்கரை அளவை குறைக்க உதவும். இது இன்சுலின் தடையை நீக்குவதால் சர்க்கரை நோய். உடல் பருமன், அதிகமாகும் கொலஸ்டிரால் போன்ற வளர்ச்சிதைமாற்ற நோய்கள் உருவாகாமல் தடுக்க முடியும். 

மேலும் நாட்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் சிறு மற்றும் பெரு ரத்தக்குழாய்களில் ஏற்படும் பாதிப்புக்களையும் இதில் உள்ள செபுளினிக் அமிலம் என்ற வேதிப்பொருள் தடுத்து நிறுத்தும் தன்மை உடையது. 

குடலில் பெரிஸ்டால்சிஸ் அசைவுகளை தூண்டுவதன் மூலமும் மலச்சிக்கலை தீர்க்க ஏதுவாகின்றது. மேலும் இது வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள சளிச்சவ்வு பகுதியில் புண் ஏற்படாமல் தடுக்கும் தன்மையும், அந்த புண்ணினை ஆற்றும் தன்மையும் உடையது. பாக்டீரியா வளர்ச்சியால் வாய் துர்நாற்றத்தால், வாய் திறந்து பேச தயக்கப்படுவோர் கடுக்காய் காய்ச்சிய நீரினை வாய் கொப்பளித்து வர நல்ல பலன் தரும். காரணம் இது, பல்வேறு பாக்டீரியாக்களை கொல்லும் தன்மை உடையது. பல்சொத்தையினால், அவதிப்படுவோருக்கும் நன்மை தரும். ஆனால் இந்த கடுக்காய் செரிமான தன்மை பலவீனமாக உள்ளவர்களுக்கு ஏற்புடையது அல்ல.

மலம் கழிக்கும் போது ரத்த சொட்டுடன், உள்வீக்கத்தால் வலி வேதனையுடன் அவதிப்படும் மூல நோயாளிகள் கடுக்காய் பொடியை சேர்த்து காய்ச்சிய நீரில் உட்கார்ந்து வர (சிட்ஸ் பாத்) நோய் நிலையில் இருந்து விரைவில் குணமடையலாம்.  மலச்சிக்கல், மூலம் உள்ளவர்களும் கடுக்காய் எடுக்க மூலநோயை வேரறுத்து மிடுக்காய் ஆரோக்கியமாக வாழ முடியும்.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் ஐடி- drthillai.mdsiddha@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com