கட்டுமானம் நிறைவடைவதற்கு முன்பே மழைநீரில் மிதக்கும் வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி வீடுகள்

சென்னை திருவொற்றியூர் மேற்கு பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் சுமார் 1,200 அடுக்குமாடி வீடுகளைச் சுற்றிலும் ஏரிபோல் மழைநீர் சூழ்ந்துள்ளது.  
கட்டுமானம் நிறைவடைவதற்கு முன்பே மழைநீரில் மிதக்கும் வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி வீடுகள்



திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் மேற்கு பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் சுமார் 1,200 அடுக்குமாடி வீடுகளைச் சுற்றிலும் ஏரிபோல் மழைநீர் சூழ்ந்துள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் ரூ.150 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூர் மேற்கு பகுதியான கார்கில் நகரில் பக்கிங்காம் கால்வாயை ஒட்டி சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் 1,200 குடியிருப்புகளைக் கொண்ட அடுக்குமாடி வீடுகள் கட்டும் பணி கடந்த 2018}ஆம் ஆண்டு தொடங்கியது. ஒவ்வொரு தொகுப்பிலும் பத்து அடுக்குகளில் சுமார் 300 வீடுகள் என நான்கு தொகுப்புகளாக வீடுகள் கட்டுமானப் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து கட்டடங்கள்: வீடுகளை கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடம் முற்றிலுமாக நீர்நிலைப் பகுதி என்பது வருவாய்த் துறை ஆவணங்களின்படி கழிவெளி புறம்போக்கு எனப்படும் மழைநீர் தேங்கும் நீர்நிலை வகைப்பாட்டிற்கு உட்பட்டது என்றுதான் கூறப்பட்டுள்ளது. இதனால் இத்திட்டத்திற்கு பல்வேறு பொதுநல அமைப்புகள் தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன.

ஏற்கெனவே இதே இடத்தில் சுனாமி மறுவாழ்வுத் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட கூடாரங்கள் மழைநீரில் முற்றிலுமாக மூழ்கியதையடுத்து எர்ணாவூரில் நிரந்தர வீடுகள் கட்டப்பட்டன. எனவே இயற்கைக்கு மாறாக அமைக்கப்பட்டு வரும் இத்திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போதும் கடந்த அரசு இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டியது ஏன் என்பது தெரியவில்லை.

இயற்கை சூழலுக்கு மாறாக கட்டப்பட்டுவரும் கட்டடங்கள்: தொடர் மழை பெய்த நிலையில் திருவொற்றியூர் மேற்கு பகுதி முழுவதும் மழைநீர் வெள்ளமாகத் தேங்கியது. திருவொற்றியூர் மேற்கு பகுதியில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட நகர்ப்புற பகுதிகள் உள்ளன.

இங்கு முறையான வடிகால் வசதிகள் இல்லை. ஏற்கெனவே நகராட்சி நிர்வாகம் அமைத்திருந்த மழைநீர் கால்வாய்களும் முற்றிலுமாக சேதமாகிவிட்டன. திருவொற்றியூர் கிழக்குப் பகுதியில் பெய்யும் மழைநீர் வடிகால் மூலம் நேரடியாகக் கடலுக்குச் சென்றுவிடுவதால் பெருமளவு பாதிப்பு இல்லை. ஆனால் மேற்கு பகுதியில் பெய்யும் மழைநீர் முற்றிலுமாக கார்கில் நகர் நீர்நிலையில்தான் தேங்கி பின்னர் பக்கிங்காம் கால்வாய் மதகு வழியாகவே வெளியேற்றப்பட வேண்டிய நிலை உள்ளது.

கனமழை பெய்யும் போதெல்லாம் சென்னை மாநகரின் மழைநீர் பக்கிங்காம் கால்வாய் வழியாக எண்ணூர் முகத்துவாரம் சென்று கடலில் கலக்கிறது. இதனால் பலத்த மழை பெய்யும்போதெல்லாம் பக்கிங்காம் கால்வாயின் நீர்மட்டம் கார்கில் நகரைவிட உயர்வாக உள்ளதால் மதகுகள் அடைக்கப்பட்டுவிடும். கால்வாயில் நீர்மட்டம் குறைந்தால் மட்டுமே மதகுகளைத் திறக்க முடியும். ராட்சத மோட்டார்கள் மூலமாக மழைநீரை மாநகராட்சி நிர்வாகம் வெளியேற்றினாலும் தொடர் மழை பெய்தால் இதுவும் பலனளிக்காது. தற்போது புழல் ஏரியில் அதிக அளவிலான உபரி நீர் திறக்கப்பட்டால் திருவொற்றியூர் மேற்கு பகுதி நிலைமை படுமோசமாக இருக்கும். இந்நிலையில் 1,200 வீடுகளிலும் மக்கள் குடியமர்த்தப்பட்டால் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை குறிப்பாக உணர்த்துகிறது தற்போதைய நிலை.

இது குறித்து திருவொற்றியூர் மேற்கு பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் எம்.மதியழகன், பி. ராஜூ ஆகியோர் கூறியது,

புயல் பாதிப்புகளால் பலத்தமழை பெய்யும் போதெல்லாம் திருவொற்றியூர் மேற்கு பகுதி முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து இதர பகுதிகளுடன் துண்டிக்கப்படும் நிலை இருந்து வருகிறது. படகுகள் மூலமாகவே மக்கள் பயணிக்க வேண்டிய அவலநிலை இருந்து வருகிறது. இங்கு வீடு கட்டித்தர வேண்டும் என இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் அரசுக்கு ஒரு கோரிக்கை கூட எப்போதும் கூறியதில்லை.

திருவொற்றியூர் பகுதியில் ஏக்கர் கணக்கில் அரசுத் துறை நிலங்கள் காலியாக இருக்கும் நிலையில் அந்த இடங்களில் இதுபோன்ற மக்கள்நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தலாம்.

இதனைவிடுத்து நீதிமன்ற தீர்ப்புகளையும் புறக்கணித்து இவ்வாறு நீர்நிலை பகுதியில் அடுக்குமாடி வீடுகளை கட்டி வருவது வேதனை அளிக்கிறது. இருப்பினும் தற்போது கட்டட பணிகள் முழுமையாக நிறைவடையும் நிலையில் உள்ளன.

இப்பிரச்னை குறித்து விரிவாக ஆய்வு செய்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே இப்பகுதி மக்களுக்கு அரசு அளிக்கும் நிரந்தரமான நிவாரணம் ஆகும். என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com