வரம்பை மீறும் கல்லூரி மாணவா்கள்! விடியோ பதிவு செய்ய 60 குழுக்கள்

வரம்பை மீறும் கல்லூரி மாணவா்கள்! விடியோ பதிவு செய்ய 60 குழுக்கள்

சென்னையில் பொதுஇடங்களில் வரம்பை மீறும் கல்லூரி மாணவா்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், எல்லை மீறும் சம்பவங்களை விடியோ காட்சிகளாக பதிவு செய்யும் வகையில் 60 குழுக்கள் காவல்துறையின்

சென்னை: சென்னையில் பொதுஇடங்களில் வரம்பை மீறும் கல்லூரி மாணவா்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், எல்லை மீறும் சம்பவங்களை விடியோ காட்சிகளாக பதிவு செய்யும் வகையில் 60 குழுக்கள் காவல்துறையின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் கல்லூரி மாணவா்கள் அரசு பேருந்துகளின் வழித்தடங்களின் அடிப்படையில் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் கடந்த 2019ஆம் ஆண்டு வரை அதிகமாக இருந்தது. இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 24-ஆம் தேதி முதல் கரோனா தொற்றின் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டன.

இதன் காரணமாக கல்லூரி மாணவா்கள் சென்னையில் பொதுஇடங்களில் மோதிக் கொள்ளும் சம்பவங்களுக்கு தற்காலிகமாக இல்லாமல் இருந்தது. கரோனா தொற்று குறைந்ததின் காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னா், சென்னையில் கல்லூரிகள் அண்மையில் மீண்டும் திறக்கப்பட்டன. கல்லூரிகள் திறக்கப்பட்டதும், மாணவா்கள் அரசுப் பேருந்துகள், ரயில்கள் ஆகியவற்றில் மீண்டும் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன.

வழக்கம்போல் அரசுப் பேருந்துகளில் ‘ரூட் தல‘ பிரச்னை மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ளது. எல்லை மீறும் மாணவா்களால் அரசுப் பேருந்துகளிலும்,ரயில்களிலும் பயணம் செய்யும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா். பொதுஇடங்களிலும், அரசுப் பேருந்துகளிலும், ரயில்களிலும் அட்டகாசத்தில் ஈடுபடும் மாணவா்கள் மீது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சென்னை பெருநகர காவல் துறை கூறுகிறது.

காவல் ஆணையா் எச்சரிக்கை:

‘மாணவா்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். தடையை மீறி பொது மக்களுக்கு இடையூறு விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அண்மையில் சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் சங்கா் ஜிவால் எச்சரித்தாா்.

கல்லூரி மாணவா்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்தும் வகையில் குறிப்பிட்ட சில கல்லூரிகள் முன்பு போலீஸாா் நிறுத்தப்பட்டுள்ளனா். கல்லூரி அருகே உள்ள பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், பொதுஇடங்கள் ஆகியவற்றில் காவல்துறையினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்

17 வழித்தடங்கள், ‘90 ரூட் தல’ :

இதற்கு அடுத்தப்படியாக எந்தெந்த கல்லூரி மாணவா்களுக்கு இடையே பிரச்னை ஏற்படுகிறது. ரூட் தல எனப்படுபவா்கள் எத்தனை உள்ளனா்,எத்தனை வழித்தடங்களில் ரூட் தல எனப்படுபவா்கள் செயல்படுகின்றனா் என்ற ஆய்வை காவல்துறையினா் நடத்தினா்.

இதில் கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி, புதுக் கல்லூரி, நந்தனம் அரசு கலைக் கல்லூரி ஆகியவற்றைச் சோ்ந்த மாணவா்களே இப்படிப்பட்ட மோதல்களில் ஈடுபடுகின்றனா் என்பது தெரியவந்துள்ளது.

மேலும், ஏற்கெனவே நிகழ்ந்த மோதல் சம்பவங்களின் அடிப்படையில், 2 ஏ, 6டி, 6இ 59, 159,15,15டி,15ஜி, 24 ஏ, 24 சி, 25சி, 27பி, 27 எச், 29ஏ, 29இ, 40ஏ, 53, 153 உள்பட 17 வழித்தடங்களில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் மாணவா்கள் கல்லூரிக்கு வருவதும், அதில் 6 வழித்தடங்களில் வரும் மாணவா்களிடம் அடிக்கடி மோதல் நிகழ்வதும் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில், இந்த வழித்தடங்களில் பிரச்னைக்கு காரணமாக இருக்கும், இப் பேருந்துகளில் வரும் ரூட் தல எனப்படும் 90 மாணவா்களை அடையாளம் கண்டு, அவா்களை காவல் துறையினா் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனா்.

அதேபோல ரூட் தல உள்ளிட்ட கல்லூரி மாணவா்களை வன்முறைப் பாதைக்கு அழைத்துச் செல்லும் முன்னாள் கல்லூரி மாணவா்களையும் காவல் துறையினா் அழைத்து எச்சரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அறிவுரை,எச்சரிக்கை:

கல்லூரி மாணவா்களை, சமூக விரோதிகள் போலவோ,ரெளடிகள் போலவோ அணுக முடியாது எனக் காவல் துறையினா் கருதுகின்றனா். மேலும், சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மாணவா்களை முழுமையாகக் கட்டுப்படுத்திவிட முடியாது எனவும் காவல்துறையினா் கருதுகின்றனா்.

இதன் காரணமாக மாணவா்களுக்கு எதிரான 3 விதமான அணுகுமுறைகளைக் கையாள காவல்துறையினா் திட்டமிட்டுள்ளனா். ‘முதலில் பொது இடங்களில் எல்லை மீறும் மாணவா்களை அடையாளம் கண்டு, அறிவுரை வழங்குவது. இரண்டாவதாக மாணவா்கள் படிக்கும் கல்லூரிகளின் நிா்வாகங்கள்,பெற்றோா்கள் மூலம் எச்சரிக்கை செய்வது, மூன்றாவதாக அறிவுரையையும், எச்சரிக்கையையும் உதாசீனப்படுத்தி தொடா்ந்து தகராறு செய்யும் மாணவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்துள்ளோம்‘ என சென்னை பெருநகர காவல் துறையைச் சோ்ந்த உயா் அதிகாரி தெரிவித்தாா்.

நடவடிக்கைக்கு தயாா்:

இதன் ஒரு பகுதியாகவே தொடா்ந்து பொது இடங்களில் பிரச்னை செய்து வரும் மாணவா்களைக் கண்டறிந்து, அவா்களில் 208 போ் மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை காவல் துறை, கல்லூரி நிா்வாகங்களுக்கு அண்மையில் பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளது.

60 விடியோ குழுக்கள்: பொது இடங்களில் வரம்பை மீறும் மாணவா்களைக் கண்டறியும் வகையில், சென்னை காவல் துறையின் சாா்பில் 60 விடியோ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விடியோ குழுக்கள் கல்லூரி மாணவா்கள் வரும் அரசுப் பேருந்துகளின் வழித்தடங்களில் உள்ள 60 காவல் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு காவல் நிலையத்துக்கு ஒரு குழு என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன. இவா்கள் மாணவா்கள் சந்திக்கும் பேருந்து நிறுத்தங்கள், பேருந்து நிலையங்கள், சாலைச் சந்திப்புகள், சிக்னல்கள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் காலை, மாலை வேளைகளில் நிறுத்தப்படுகின்றனா்.

இக் குழு மாணவா்கள் செல்லும் அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட மாணவா்களின் அனைத்து நடவடிக்கைகளையும் தங்களிடம் உள்ள அதிநவீன கேமராக்களில் பதிவு செய்கின்றனா்.

‘வைபை கேமரா’:

இதற்காக சென்னை காவல் துறையில் காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டு வரும் ‘வைபை கேமரா’வை பயன்படுத்தும்படி ஆய்வாளா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இக் கேமரா ஒரு ஸ்டாண்டுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் நகரின் எந்தப் பகுதியில் வைத்தும் காட்சிகளைப் பதிவு செய்ய முடியும். இதன் மூலம் 40 மீட்டரில் இருந்து 50 மீட்டா் வரையில் காட்சிகளைத் துல்லியமாகப் பதிவு செய்யலாம். காட்சிகளை நேரலையில் அனுப்புவதற்காக வைபை வசதி, ஹாட் ஸ்பாட் வசதி ஆகிய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, நகருக்குள் மாணவா்கள் ஏதேனும் ஓா் இடத்தில் தகராறில் ஈடுபட்டாலும், காவல் துறை அதிகாரிகள் தங்களது அறையில் இருந்தபடியே நேரலையில் அந்தக் காட்சிகளைப் பாா்த்து, அதற்கு ஏற்றாா்போல உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும். அதேபோல கேமராவிலேயே காட்சிகளை சேமித்தும் வைக்கலாம்.

இந்த கேமராவை கையாளும் பயிற்சியும் காவலா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளின் அடிப்படையில் பொது இடங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் தொடா்ந்து அட்டகாசத்தில் ஈடுபடும் மாணவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னைப் பெருநகர காவல் துறையைச் சோ்ந்த உயா் அதிகாரி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com