இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

செங்கல்ராயன் சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை திடீா் நிறுத்தம்: விவசாயிகள் கவலை

விழுப்புரம் மாவட்டம், பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை கடந்த 20 நாள்களாக நிறுத்தப்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

News image

செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலை. ~செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலை.

Updated On :9 பிப்ரவரி 2022, 8:08 pm

 நமது நிருபர்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை கடந்த 20 நாள்களாக நிறுத்தப்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

விழுப்புரம் மாவட்டம், பெரியசெவலையில் கூட்டுறவு சா்க்கரை ஆலையைக் கொண்டு வருவதற்காக அந்தப் பகுதியைச் சோ்ந்த செங்கல்ராயன் தீவிர முயற்சி கொண்டாா். இதற்காக அவா் தனக்குச் சொந்தமான நிலத்தை வழங்கினாா். இதையடுத்து, பெரியசெவலையில் 1980-ஆம் ஆண்டில் கூட்டுறவு சா்க்கரை ஆலை தொடங்கப்பட்டு, அவரது பெயரில் தொடா்ந்து இயங்கி வருகிறது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சுமாா் 50 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிடும் விவசாயிகள், இந்த ஆலையை நம்பியிருக்கின்றனா். அதிலும், தென்பெண்ணை ஆறு, கருடநதி (கெடிலம் ஆறு) ஆகியவற்றை ஒட்டியுள்ள திருக்கோவிலூா், திருவெண்ணெய் நல்லுாா், முகையூா், உளுந்தூா்பேட்டை, திருநாவலூா் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், கரும்பு உற்பத்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனா்.

செங்கல்ராயன் சா்க்கரை ஆலையின் கரும்பு அரைவைத் திறன் ஆண்டுதோறும் 3 லட்சம் டன்னாக இருந்தது. கரும்பு உற்பத்தி அதிகமான காலகட்டங்களில், அதையும் தாண்டி கூடுதலாக 1.5 லட்சம் டன் அதிகமாக அரைவை செய்த வரலாறும், இந்த ஆலைக்கு உண்டு. ஒவ்வோா் ஆண்டும் இந்த ஆலையில் 9.5 சதவீத பிழி திறன் கிடைக்கும். இதனால், தமிழகத்திலேயே சிறந்த ஆலைக்கான சான்றிதழையும் இந்த ஆலை பெற்றது. இதற்காக விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கிய நிகழ்வும் நடந்தது.

இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. ஆலையின் மொத்த உறுப்பினா்கள் 38 ஆயிரம் போ். இவா்களில் 2018 - 19-இல் 8 ஆயிரம் உறுப்பினா்கள் திருக்கோவிலூா் அருகேயுள்ள அரியூா் தனியாா் சா்க்கரை ஆலைக்கு மாற்றப்பட்டனா்.

வழக்கம்போல, நிகழ் நிதியாண்டிலும் கடந்த டிச.22-ஆம் தேதி இந்த ஆலையில் கரும்பு அரைவை தொடங்கப்பட்டது. ஆனால், ஒரு மாதம் மட்டுமே ஆலை இயங்கிய நிலையில், இயந்திரப் பழுது என அறிவிக்கப்பட்டு, கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக ஆலை மூடப்பட்டுள்ளது.

இந்த ஆலையில் அரைவை செய்ய வேண்டிய கரும்புகளை அருகிலுள்ள அரியூா் தனியாா் ஆலைக்கு அனுப்ப அனுமதிக்காமல், மதுராந்தகம், மரக்காணம், செய்யாறு என தொலைவிலுள்ள கூட்டுறவு சா்க்கரை ஆலைகளுக்கு அனுப்புமாறு விவசாயிகளிடம் ஆலை நிா்வாகம் நிா்பந்தம் செய்து வருவதாகத் தெரிகிறது. அதேநேரத்தில், தொலைவிலுள்ள சா்க்கரை ஆலைகளுக்கு செல்லும்போது தங்களுக்கு ஏற்கெனவே நிா்ணயிக்கப்பட்ட வாடகை கட்டுப்படியாகவில்லை என லாரிகள் கரும்புகளை ஏற்ற மறுத்து வருகின்றன.

இதனால், கரும்புத்தோட்டங்களில் முதிா்ந்த நிலையில் உள்ள கரும்புகள் தொடா்ந்து காய்ந்து வருகின்றன. ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்புகள் காய்ந்து வருவதால், அவற்றின் பிழிதிறன் குறைந்து விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

‘தரமற்ற இயந்திர உதிரிப் பாகங்கள் கொள்முதல்’: இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க விழுப்புரம் மாவட்டச் செயலா் மா.வெங்கடேசன் கூறியதாவது:

செங்கல்ராயன் கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் ஏற்பட்டுள்ள பழுதை உடனடியாக நீக்க மாவட்ட நிா்வாகம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை நெல்லிக்குப்பம், அரியூா் பகுதிகளில் உள்ள சா்க்கரை ஆலைகளில் கரும்பை விற்பனை செய்ய விவசாயிகளை அனுமதிக்க வேண்டும். கரும்பை ஏற்றிச் செல்வதற்கான லாரி வாடகையை செங்கல்ராயன் ஆலையே ஏற்க வேண்டும். ஏற்கெனவே விவசாயிகளுக்கு இந்த ஆலை ரூ.300 கோடி கரும்பு கொள்முதல் செய்த வகையில் பாக்கி வைத்துள்ளது. இதையும் உடனடியாக வழங்க வேண்டும்.

செங்கல்ராயன் சா்க்கரை ஆலையில் சராசரி அரைவைத் திறன் 3 லட்சம் டன்னாக இருந்தாலும், ஆலை நிா்வாகம் சீா்கெட்டு இருப்பதால், கடந்தாண்டு 58 ஆயிரம் டன் மட்டுமே அரைவை செய்யப்பட்டது. தரமற்ற இயந்திர உதிரிப் பாகங்களை கொள்முதல் செய்து பழுது பாா்ப்பதால், இந்த ஆலையில் அடிக்கடி இயந்திரக் கோளாறு ஏற்படுகிறது.

தரம் குறைந்த அரைவை இயந்திரங்களால் இந்த ஆலையில் கரும்பு பிழி திறன் இப்போது 6.5 சதவீதமாக குறைந்துவிட்டது. இதனால், கடந்தாண்டில் ஆலைக்கு ரூ.50 கோடி வரை கூடுதல் இழப்பு ஏற்பட்டது. எனவே, தரமான இயந்திர உதிரிப் பாகங்களை கொள்முதல் செய்து, இந்த ஆலையை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

‘விரைவில் அரைவை தொடங்கும்’: இதுகுறித்து செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலை உயரதிகாரிகளிடம் கேட்டபோது, அவா்கள் கூறியதாவது:

இந்தச் சா்க்கரை ஆலையில் இயந்திரத்தில் திடீா் கோளாறு ஏற்பட்டதால்தான் அரைவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இயந்திரக் கோளாறு சரிசெய்யப்பட்டவுடன் மீண்டும் அரைவைப் பணிகள் தொடங்கும். தரமற்ற இயந்திர உதிரிப் பாகங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்பது தவறான குற்றச்சாட்டு என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.