சுகம் தரும் சித்த மருத்துவம்: நரை, திரையை தடுக்க ‘கறிவேப்பிலை’ உதவுமா? எவ்வாறு உதவும்?

சிறு கார்ப்பு சுவையும், நல்ல மணமும் உள்ள கருவேப்பிலையினால் பித்தத்தால் ஏற்பட்ட வயிறு வலி, மாந்தம், கழிச்சல், வாந்தி, நாக்கு ருசி இன்மை, நோய்களை உண்டாக்கும் பித்தமும் நீங்கும்
சுகம் தரும் சித்த மருத்துவம்: நரை, திரையை தடுக்க ‘கறிவேப்பிலை’ உதவுமா? எவ்வாறு உதவும்?

                 
நரை, திரை இரண்டும் முதுமைக்கால வாழ்வில் ஒரு அங்கமாக உள்ளது, நாம் அனைவரும் அறிந்ததே. 

நரை என்பது தலைமுடி நரைத்தலை குறிக்கும். திரை என்பது தோலில் ஏற்படும் முதுமைக்கால சுருக்கங்களை குறிப்பதாக இருந்தாலும் அதற்கு மற்றொரு பொருளும் உண்டு. நாம் அன்றாடம் உலகினை கண்டு ரசிக்க, அதாவது சின்னத்திரை,பெரியத்திரை இவற்றை காண உதவும் நம் கண்ணில் உள்ள விழித்திரையை  குறிப்பதாகவும் உள்ளது. முதுமைக்காலத்தில் கண்ணில் ஏற்படும் விழித்திரை பாதிப்பையும் குறிக்கிறது. 

இதனை தொடர்ந்து ஏற்படும் மூப்பு, பிணி, சாக்காடு இவற்றின் ஆரம்பமே இந்த நரையும், திரையும். சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்ட பல்வேறு காய கற்ப மூலிகைகள் நரை, திரையை தடுத்து பலனளிப்பதாக உள்ளது. 

அதில் ஒன்று தான் நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் சித்த மருத்துவ மூலிகையான ‘கறிவேப்பிலை.’

‘டாக்டர் இவ்வளவு சின்ன வயசிலே எனக்கு நரைமுடி வந்துருச்சு’ என்று வருத்தப்படும் நபர்கள் இன்றைய இளைய தலைமுறையினர் அதிகம். அத்துடன் அதிகம் பயன்படுத்தும் அலைபேசி, கணினி மற்றும் ‘கேட்கட்ஸ் சாதனங்களால் சிறுவயதிலே பார்வைக் குறைபாடும் இன்றைய இளைய தலைமுறையினரிடம் அதிகம். 

‘டாக்டர் இப்பவே என் பையன் கண் பார்வை மங்கலால் அவதிப்படுகிறான்’ என்று மருத்துவரை நாடும், அனைவருமே கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் செய்வது போலத்தான். அதற்கு கறிவேப்பிலை உதவுமா?, எவ்வாறு உதவும்?, சித்த மருத்துவம் என்ன சொல்கிறது?

‘வளர் பித்தம் தீதலாது சத்தி (வாந்தி) அடாது’ என்பது தேரையர் சித்தர் கூறும் நோய்களுக்கான முதல் காரணம். உடலில் அதிகரிக்கும் குடல் பித்தம் வாந்திக்கு மட்டுமல்ல, நரை திரை போன்ற பல்வேறு நோய் நிலைகளுக்கும் காரணம். ‘பித்த நிரை’ என்று நாம் குறிப்பிடும் காரணத்தை ஆராய்ந்தால் அதிகப்படியான பித்தம், தலைமுடி கருப்பாக காரணமான மெலனோசைட்டுகளில், பாதிப்பை உண்டாக்கி அதில் சுரக்கும் மெலனின் நிறமி சத்து குறைபாட்டை ஏற்படுத்துவது தான். 

கருவேப்பிலை சூப்

மேலும் இந்த பித்தமே, தோலில் சுருக்கங்களையும், கண் விழித்திரையில் பாதிப்பையும் ஏற்படுத்துவதாக உள்ளது. இதனை ‘வாயினருசி வயிறுளைச்சல் நீடுசுரம் பாயுகின்ற பித்தமும் என்பண்ணுங் காண்’ என்று கருவேப்பிலை பற்றி அகத்தியர் குணவாகடம் கூறுகின்றது. 

சிறு கார்ப்பு சுவையும், நல்ல மணமும் உள்ள கருவேப்பிலையினால் பித்தத்தால் ஏற்பட்ட வயிறு வலி, மாந்தம், கழிச்சல், வாந்தி, நாக்கு ருசி இன்மை, நோய்களை உண்டாக்கும் பித்தமும் நீங்கும் என சித்த மருத்துவம் சொல்கின்றது.

சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள ‘காயகற்பம்’ வகையிலான மூலிகைகள் நிறைந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை உடையது. பசுமை நிறைந்த மூலிகைகள், இயற்கையிலே அதிகப்படியான ‘பிளவனாய்டு’ எனும் நிறமி சத்தினை தன்னகத்தே கொண்டுள்ளன. 

கறிவேப்பிலையின் மருத்துவ குணங்களுக்கு அதில் உள்ள ‘கார்பசோல் அல்கலாய்டு’ முக்கிய காரணமாக உள்ளது. மேலும் அதில் உள்ள டெர்பினாய்டு, பிளவனாய்டு, பினோலிக் வேதிப்பொருள்கள் அதன் மருத்துவ குணங்களுக்கு பொறுப்பேற்கின்றன. 

இயற்கையாகவே நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் வைட்டமின் ‘சி’ யும், கண் பார்வையை அதிகரிக்க உதவும் கண் மற்றும் தோல் திரையை தடுக்கும் வைட்டமின் ‘ஏ’-வின் ஆதாரமாகிய ‘பீட்டா கரோடீனாய்டுகள்’ அதிகப்படியாக உள்ளது மிகச்சிறப்பு. 

கறிவேப்பிலையில் உள்ள ‘மஹாநிம்பின்’ எனும் வேதிப்பொருள் சர்க்கரை நோயாளிகளுக்கும் நல்ல பலன் தரும். இது சர்க்கரை நோய் வருவதை தடுக்க கூடியதாகவும், சர்க்கரை நோயாளிகளுக்கு நாள்பட்ட நிலையில் ஏற்படும் கல்லீரல், சிறுநீரகம், இருதயம், நரம்பு பாதிப்புகளை ஏற்படாமல் தடுக்கும் தன்மையும் உடையது. 

சித்த மருத்துவத்தில் வழங்கப்படும் ‘மதுமேக சூரணம்’ எனும் சர்க்கரை நோய்க்கான மருந்தில் இது சேருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கறிவேப்பிலைக்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையும், கிருமிகளை கொல்லும் ஆன்டி-மைக்ரோபியல் தன்மையும், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் தன்மையும் உள்ளது. 

கருவேப்பிலை சூப்: நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க கருவேப்பிலை இலை மற்றும் ஈர்க்குடன் இஞ்சி, பூண்டு, மிளகு, மஞ்சள்,உப்பு சேர்த்து ‘சூப்’ செய்து மாலை வேளையில் குடிக்க உடல் ஆரோக்கியம் பெருகும். அதன் மருத்துவ பலன்களும் கிடைக்கும். 

நரைத்த முடி கருப்பாக, கறிவேப்பிலையை உணவில் அதிகம் சேர்ப்பதுடன், கறிவேப்பிலையுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி தலைக்கு தடவி வர நல்ல பலன் தரும். 

கருவேப்பிலை பொடியுடன் மிளகு, சீரகம், சுக்கு உப்பு சேர்த்து இட்லி பொடி போல தயார் செய்து மதிய உணவில் நெய்யுடன் சேர்த்து எடுத்துக்கொண்டால் அசீரணம், வாந்தி, மலச்சிக்கல், கழிச்சல் நீங்கும். 

மேலும், இதில் உள்ள இரும்பு சத்து மற்ற உணவுப் பொருள்களில் இருப்பதை விட உடலில் அதிக அளவில் சென்று சேருவதால் ரத்த சோகை நோய்க்கு நல்ல மருந்தாகவும் உள்ளது.

கறிவேப்பிலையில் இன்னும் என்ன சிறப்பு என்றால் அதில் உள்ள அரோமேட்டிக் வகையான வேதிப்பொருள்கள் மூலிகையை காய வைத்தாலும் அதன் மருத்துவ குணங்களை தக்க வைத்துக் கொள்ளும் என்பது தான். 

ஆகவே கறிவேப்பிலையை பச்சையாகவோ அல்லது, காய வைத்தோ பயன்படுத்தினாலும் அதன் மருத்துவ குணங்கள் அனைத்தும் கிட்டும் என்பது உறுதி.

தென் தமிழகத்தில் சில கிராமங்களில் கருவேப்பிலையை 'கண்ணாத்தாள்' என்று வட்டார வழக்கு மொழியில் கூறுவது கண்ணுக்கு நல்ல பலனளிக்கும் என்பதால் தான் என்று தெரிய வருகிறது. 

இவ்வளவு சிறப்பு வாய்ந்த கருவேப்பிலையை வெறும் மணமூட்டியாக மட்டும் உணவில் பார்க்காமல், மருத்துவ குணமூட்டியாக நாம் அன்றாடம் உண்ணும் உணவில் சேர்த்து, உண்ணும் தட்டில் ஒதுக்கி வைக்காமல், மென்று சாரத்தை விழுங்கினால் அதிகரித்த பித்தம் தணிந்து ஆயுளை கூட்டும்.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் ஐடி - drthillai.mdsiddha@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com