சுகம் தரும் சித்த மருத்துவம்: சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை ஏன் தெரியுமா? - பகுதி -1

சுக்கு, தமிழ் மருத்துவமாகிய சித்த மருத்துவத்திற்கு முதன்மையான மூலிகை மருந்து. ஏனெனில் சித்த வைத்திய மருந்துகளில் சுக்கு சேராத மருந்தே இல்லை
சுகம் தரும் சித்த மருத்துவம்: சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை ஏன் தெரியுமா? - பகுதி -1

“சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்ரமணியர்க்கு மிஞ்சிய தெய்வம் இல்லை” என்பது வழக்கு மொழி. தமிழ் கடவுள் எப்படி தமிழர்களுக்கு முதன்மையான தெய்வமோ, அதே போல் சுக்கு, தமிழ் மருத்துவமாகிய சித்த மருத்துவத்திற்கு முதன்மையான மூலிகை மருந்து. ஏனெனில் சித்த வைத்திய மருந்துகளில் சுக்கு சேராத மருந்தே இல்லை எனலாம். அந்த அளவுக்கு முக்கிய பங்கும், மருத்துவ குணமும் வாய்ந்தது இது.

காலம் காலமாக நம் உணவுப்பொருளில் சேர்க்கப்படும் நறுமண பொருளாக சுக்கு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. சரி ஏன் சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை? என்கிறார்கள்?.

‘சுக்கிற்கு புற நஞ்சு, கடுக்காய்க்கு அக நஞ்சு’ என்பது சித்த மருத்துவ வழக்கு. உலர்ந்த இஞ்சியே ‘சுக்கு’ என்று பயன்படுத்துகிறோம். இந்த சுக்கிற்கு பல பெயர்கள் சித்த மருத்துவ நூல்களில் குறிப்ப்பிட்டாலும், முக்கிய பெயர் ஒன்று உண்டு. அந்த பெயர் ‘விட மூடிய அமிர்தம்’ என்பது.

அதாவது நஞ்சால் ஆன தோலால் மூடிய அமிர்தம் இந்த சுக்கு. ஆகவே தோலினை நீக்கிய சுக்கு அமிர்தத்திற்கு ஒப்பானதாக இது பொருளடக்கம் கொண்டுள்ளது.

சுக்கு

'வாதமலாது மேனி கெடாது' என்று நான் அடிக்கடி குறிப்பிடும் தேரையர் சித்தரின் நோய்களுக்கான முதல் காரணம் மூலம், வாத,பித்த,கபம் ஆகிய மூன்று குற்றங்களில் வாதமே நோய்களுக்கு முதன்மை காரணம் என அறியப்படுகின்றது. அந்த வாதத்தை சரி செய்யும் தன்மை உடையது இந்த சுக்கு. கிட்டத்தட்ட எல்லா உடல்உறுப்பு சார்ந்த நோய்களை தீர்ப்பதிலும், எல்லா உறுப்புகளில் ஏற்படும் நோய்களுக்கு காரணமான வாயுவை (வாதத்தை) போக்கவும் இந்த சுக்கு உதவுகிறது. 

மேலும் சித்த மருத்துவத்தில் ஒரு பகுதியாகிய வர்ம மருத்துவ சிகிச்சையிலும் இந்த சுக்கிற்கு முக்கிய பங்கு உண்டு. முக்கியமாக சொல்லப்படும் 108 வர்மப் புள்ளிகளில் அடிபட்டால் சுக்கினை சவைத்து அதாவது வாயிலிட்டு மென்று வர்ம புள்ளிகளில் ஊதி, அதை இளக்கும் முறை இன்றளவும் தென் தமிழகத்தில் வழக்கமாக உள்ளது.

இதனால் அடிபட்டு ஆழ்ந்த மயக்க நிலையில் கிடப்பவரையும் உடனே எழுப்பிவிட முடியும். அதனால் என்னவோ, சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை என்ற வழக்கு மொழியும் வந்தது போலும்.

சுக்கு எனும் மூலிகை மருந்தினை பல்வேறு நாட்டில் உள்ள பாரம்பர்ய மருத்துவ முறைகளிலும் பல தன்மைப்பட்ட நோய்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

திபெத்திய மருத்துவத்தில் வயிறு சார்ந்த அசீரணம், வாந்தி, கொலைடிஸ் எனும் பெருங்குடல் புண் போன்ற நோய் நிலைகளில் சுக்கினை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். 

நாமும் பாரம்பரியமாக அசீரணம், வாய் குமட்டலுக்கு இன்றளவும் சுக்கு சேர்த்த காப்பியோ, டீயோ, உணவோ பயன்படுத்தி குறிகுணத்தில் இருந்து பலரும் விடுபடுவது இயல்பு. இன்னும் சொல்லப்போனால் 'இஞ்சி மரப்பா' எனும் பாரம்பர்ய மிட்டாயை நாம் பயணங்களில் பயன்படுத்த மறக்கவில்லை. 

பயணங்களில் பலருக்கும் ஏற்படும் வாய் குமட்டல், வாந்தி, பிரசவ காலத்தில் ஏற்படும் மசக்கை வாந்தி இவற்றிற்கு சுக்கு அல்லது இஞ்சி சிறந்த மருந்து. மேலும் சுக்கினை பயன்படுத்த குடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை வளரச்செய்து கொலைட்டிஸ் எனும் குடல் தாபித்தை குறைப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

இதை தெரிந்தோ தெரியாமலோ நம் சித்த மருத்துவத்திலும்  கழிச்சலுக்கு பயன்படுத்தும் ‘தயிர்சுண்டி சூரணம்’ எனும் சித்த மருந்தில் சுக்கினை சேர்த்திருப்பது இன்றைய அறிவியலை மிஞ்சிய மெய்ஞ்ஞானத்திற்கு உதாரணம்.

மூட்டுவலி நோயில் (ஆர்த்ரைட்டிஸ்) மூட்டுகளின் வீக்கத்தை போக்க சுக்கினை உள் மருந்தாக மட்டுமின்றி, மூட்டுகளின் மேல் வெளியே பற்று போட வீக்கத்தை குறைக்கும் வீக்கமுருக்கி செய்கை இதற்குண்டு.

அதோடு பசியின்மையை நீக்கி செரிமானத்தை தூண்ட சுக்கு சேர்த்த கஞ்சியினை நோய்வாய்பட்டவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தரலாம். இதனால் ‘குழந்தைகளின் மாந்தம்’ இந்த நாட்டை விட்டே ஓடும் என்று சித்த மருத்துவம் கூறுகின்றது.

விட மூடிய அமிர்தம்

பசியை தூண்டும் 'பஞ்ச தீபாக்கினி சூரணம்' எனும் சித்த மருந்தில் இது முதன்மையாக சேருவதும் குறிப்பிடத்தக்கது. இதனால் மலச்சிக்கலும் தீரும்.

‘ஷெங்கிஜிஜாங்’ என்று சீன மருத்துவத்தில் சுக்கினை குறிப்பிட்டு பல்வேறு நோய் நிலைகளான சீரண மண்டல கோளாறுகள், சளி, இருமல், வாந்தி, மீன் மற்றும் நண்டு விஷம் போன்றவற்றில் பயன்படுத்துவதும் சுக்கு-வின் மகத்துவத்திற்கு உதாரணம்.

இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த சுக்கினை பற்றி தகவல்கள் அடுத்த கட்டுரையில் பார்ப்போம்...

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் ஐடி - drthillai.mdsiddha@gmail.com

Related Article

சுகம் தரும் சித்த மருத்துவம்:  ‘ஏலக்காய்’ஆறாத குடற்புண்ணை ஆற்றுமா?

சுகம் தரும் சித்த மருத்துவம்: கொலஸ்ட்ரால் கவலையை குறைக்குமா? - ‘கரிசலாங்கண்ணி கீரை’

சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘மூல நோய்’ வேதனையைப் போக்கும் ‘பிரண்டை’.

சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘மூல நோய்’ வேதனையை வேரறுக்கும் ‘கடுக்காய்’

சுகம் தரும் சித்த மருத்துவம் : புற்று நோயை தடுக்குமா 'எள் எண்ணெய்'..?

சுகம் தரும் சித்த மருத்துவம்: இருதய நோய் வராமல் காக்கும் ‘பூண்டு’

சுகம் தரும் சித்த மருத்துவம்: கொழுத்த உடலுக்கு உதவுமா ‘கொள்ளு’?

சுகம் தரும் சித்த மருத்துவம்: முடக்கும் மூட்டு வலியை சரி செய்யுமா 'நொச்சி'?

சுகம் தரும் சித்த மருத்துவம்: குளிர்கால ஒவ்வாமையை ஓட்டும் 'மஞ்சள்'

சுகம் தரும் சித்த மருத்துவம்: ஆஸ்துமாவை அடிபணியச் செய்யுமா ‘துளசி’?

சுகம் தரும் சித்த மருத்துவம்: சர்க்கரை நோய்க்கு குட்பை சொல்லுமா 'பாகற்காய்'?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com