சுகம் தரும் சித்த மருத்துவம்: கொலஸ்ட்ரால் கவலையை குறைக்குமா? - ‘கரிசலாங்கண்ணி கீரை’

மாறிவரும் உணவு பழக்கவழக்கமும், உடல்பயிற்சி  இல்லாத வாழ்வியல் நடைமுறைகளும் பல்வேறு வளர்சிதை மாற்ற நோய்களுக்கு வழிவகுக்கும். 
கரிசலாங்கண்ணி கீரை
கரிசலாங்கண்ணி கீரை

மாறிவரும் உணவு பழக்கவழக்கமும், உடல்பயிற்சி  இல்லாத வாழ்வியல் நடைமுறைகளும் பல்வேறு வளர்சிதை மாற்ற நோய்களுக்கு வழிவகுக்கும். 

சர்க்கரை நோய் , உடல் பருமன், அதிக கொலஸ்ட்ரால் (கொழுப்பு) இவை இன்றைய தலைமுறையினருக்கு பெரும்சவாலாக உள்ளது. “டாக்டர் நான் என்னென்னமோ பண்றேன், கொலஸ்ட்ரால் மட்டும் குறையவே மாட்டேங்குது” என்று வருத்தப்படும் பலருக்கு பதில் சொல்ல பல சித்த மருத்துவ மூலிகைகள் காத்திருக்கின்றது. 

அந்த வகையில் நாம் அதிகம் பயன்படுத்தும் சித்த மருத்துவ மூலிகை 'கரிசலாங்கண்ணி கீரை' வளர்ச்சிதை மாற்ற நோய்களை வரவொட்டாமல் தடுக்ககூடியது.

டாக்டர் காலம்காலமாக இந்த கீரையை நாங்க கல்லீரல் நோய்களுக்கும், காமாலை-க்கும் தான் பயன்படுத்துறோம். அது எப்படி வளர்சிதை மாற்ற நோய்களுக்கு பலன் தரும்? கொலஸ்ட்ராலை குறைக்க உதவுமா? அதை பற்றி சித்த மருத்துவம் சொல்கிறதா? என்று பலருக்கு புரியாத புதிராக தோன்றும். 

கரிசலாங்கண்ணி கீரைக்கு, கையான், கையாந்தகரை போன்ற பல பெயர்கள் உண்டு. ஏற்கனவே கூறியது போல, வாதம் ,பித்தம், கபம் இவை தான் நோய்களுக்கு ஆதாரம். முக்கியமாக வளர்ச்சிதை மாற்ற நோய்கள், கப குற்றத்தின் பாதிப்பால் இன்சுலின் தடை (ரெசிஸ்டன்ஸ்) ஏற்படுவதாக சித்த மருத்துவம் சொல்கின்றது .

'ஐ' என்றால் 'கபம்' என்ற பொருள் படியாக உள்ளது. கையான்தகரையை, கையான்+தகர்+ஐ என பிரிக்கலாம். கையான் கபத்தை(ஐயை) தகர்க்கக் கூடியது என்பது தான். பெயர்க்காரணம் சித்த மருத்துவம் மூலிகைகளின் மருத்துவ குணங்களை மறைபொருளாக நமக்கு உணர்த்துவது ஆச்சர்யம்.

கப நோய்களுக்கு கரிசாலை கீரையை பயன்படுத்த மிகுந்த நன்மை தரும். கபம் என்ற ஒன்று அது பாதிக்கும் உறுப்புகளை பொறுத்து நோய் நிலைகளில் மாறுபடும்.

கபம் அதிகரித்தால் சுவாச மண்டலத்தில் சளியாகவும், ரத்த குழாயில் கொழுப்பாகவும் படியும். இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம். ஆகையால் சளியாக இருந்தாலும் சரி, கொழுப்பாக இருந்தாலும் சரி அதை போக்க கையாந்தகரை கீரை பயன்படும் என்ற பொருளும் காணக் கிடக்கின்றது. இதைத் தான் சித்த மருத்துவம் ‘ஒற்றை மூலிகை பிரயோகமாக’ அதாவது ஒரே மூலிகையை, பல நோய்களுக்கு பயன்படுத்துவது அறிவியலை மிஞ்சும் மெய்ஞ்ஞானம்.

"டாக்டர் நான் ஒல்லியாக தான் இருக்கேன், இருந்தாலும் எனக்கு கல்லீரலில் கொழுப்பு (பேட்டி லிவர்- NAFLD) படிந்துள்ளது, அதற்க்கு பல நாள் மருத்துவம் பார்த்தும் பெரிய முன்னேற்றம் இல்லை, மதுப் பழக்கமும் எனக்கு இல்லை, மது குடிக்கிறவங்க எல்லாம் நல்ல இருங்காங்க, எனக்கு மட்டும் ஏன் இப்படி?" என்று வருத்தப்படும் பலருக்கும் இந்த கரிசலாங்கண்ணி கீரை அருமருந்து. 

ரத்தக் குழாய் மற்றும் கல்லீரலில் படிந்த கொழுப்பாகிய கபத்தை நீக்க பெரிதும் உதவும். இதில், உள்ள ட்ரைடெர்பீன்கள், பிளவனாய்டுகள், தியோபீன்கள், கோமெஸ்டன்கள் இதன் மருத்துவ குணத்திற்கு காரணமாக உள்ளன.  

இதில் உள்ள 'எக்லிப்டால்' என்ற வேதிப்பொருள் இன்சுலின் தடையை நீக்கி சர்க்கரை அளவை குறைக்கவும் உதவும். 

அதோடு உடல் பருமன், அதிக கொலஸ்ட்ரால் போன்ற வளர்ச்சிதை மாற்ற நோய்குறி குணங்களுக்கு நல்ல பலனை தந்து உடலின் ஆயுள்காலத்தை அதிகரிக்கும். இதை அகத்தியர் குணவாகடத்தில் "கையாந்தகரை பொன்னிறமாக்கும் உடலை சுத்த முறகட்கு சுகம் கொடுக்கும்" என்ற பொன்மொழியால் அறியலாம்.

நுரையீரலில் உள்ள கபத்தை எடுக்க கரிசலாங்கண்ணி இலைச்சாறுடன் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சிய மருந்தை உள்ளுக்கு குடிக்க, சளிக்கு காரணமான நுண்ணுயிர்களை கொன்று, மார்பில் கட்டிய சளியை நீக்கும். இந்த கீரைக்கு தலை முடியை வளர செய்யும் தன்மையும் உள்ளதால் இதனால் செய்யப்பட்ட எண்ணையை தலைக்கு பயன்படுத்த தலைமுடி வளரும். நரைமுடியும் கறுப்பாகும். 

'கபமல்லாது காசசுவாசம் காணாது' என்பது தேரையர் சித்தர் கூறும் பிணிகளுக்கு முதற்காரணம். கபமே இருமல் , ஆஸ்துமா போன்ற பல நோய்களுக்கு காரணமாக உள்ளது. ஆஸ்துமா நோயால் அவதிப்படும் பலரும் இதை அடிக்கடி உணவு சேர்த்து வரலாம். கபத்தை போக்க இராமலிங்க அடிகள் ஆகிய வள்ளலாரும் இந்த கரிசாலையை அதிகம் பயன்படுத்தியதாக அவர் நூல்கள் சொல்கின்றது.

சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் பலரும், இந்த கீரையை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். மேலும், சர்க்கரை நோயுடன் சேர்ந்து வரும், அதன் அழையா நண்பனாகிய, மாறுபட்ட கொழுப்பின் அளவுக்கும் (டிஸ்லிபிடிமியா) இந்த கீரை மூலம் நிச்சயம் ‘பை-பை’ சொல்ல முடியும். கபத்தை நீக்கும் எளிய மூலிகை இந்த கரிசலாங்கண்ணி . இதை பயன்படுத்த துவங்கினால் நோய்களுக்கு இடமளிக்காமல் , மரணமில்லா பெருவாழ்வுக்கும் வழிவகுக்கும்.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் ஐடி - drthillai.mdsiddha@gmail.com

Related Article

சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘மூல நோய்’ வேதனையை வேரறுக்கும் ‘கடுக்காய்’

சுகம் தரும் சித்த மருத்துவம் : புற்று நோயை தடுக்குமா 'எள் எண்ணெய்'..?

சுகம் தரும் சித்த மருத்துவம்: இருதய நோய் வராமல் காக்கும் ‘பூண்டு’

சுகம் தரும் சித்த மருத்துவம்: கொழுத்த உடலுக்கு உதவுமா ‘கொள்ளு’?

சுகம் தரும் சித்த மருத்துவம்: முடக்கும் மூட்டு வலியை சரி செய்யுமா 'நொச்சி'?

சுகம் தரும் சித்த மருத்துவம்: குளிர்கால ஒவ்வாமையை ஓட்டும் 'மஞ்சள்'

சுகம் தரும் சித்த மருத்துவம்: ஆஸ்துமாவை அடிபணியச் செய்யுமா ‘துளசி’?

சுகம் தரும் சித்த மருத்துவம்: சர்க்கரை நோய்க்கு குட்பை சொல்லுமா 'பாகற்காய்'?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com