சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘மூல நோய்’ வேதனையைப் போக்கும் ‘பிரண்டை’.

நம் உணவுக்குடலில் சேரும் நாட்பட்ட வாயுவும், சூட்டிற்கு காரணமான பித்தமும் ஒன்று கூடி மலக்குடலை தாக்கி வீக்கத்தை உண்டாக்கி, மூலநோயை உண்டாக்கும்.
பிரண்டை
பிரண்டை


‘மூல நோய்’ வேதனையை வேரறுக்கும் ‘கடுக்காய்’ என்ற தலைப்பில் சென்ற வாரம் வெளியான எனது கட்டுரை சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. எனது மின்னஞ்சல் (இ-மெயில்) பலரின் சந்தேகங்களால், பலரின் மருத்துவ பரிசோதனை ரிப்போர்ட்களால் நிரம்பி வழிவது நல்லதொரு பின்னூட்டத்திற்கு ஆதாரம். இது கட்டுரையாளராகிய எனக்கு நிச்சயம் மகிழ்ச்சி என்று சொல்வதற்க்கு இல்லை. ஏனெனில் மூல நோயின் வலியுடனும், வேதனையுடன், எரிச்சலுடன், உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல், பலர் அன்றாட வாழ்வை நகர்த்திக்கொண்டிருப்பது அதிர்ச்சியுடன் கூடிய வருத்தம் தான்.

‘டாக்டர் நான் பல வருடங்களாக மருத்துவம் மேற்கொள்கிறேன், குறிகுணங்கள் குறைந்தபாடில்லை’ என்று மன வேதனையுடன் பெருமூச்சு விடும் பலருக்கு வழிகாட்டும் படியாக மீண்டும் ஒரு கட்டுரை இது.

'அனில பித்த தொந்தமலாது மூலம் வராது' என்பது சித்த மருத்துவத்தில் தேரையர் சித்தர் கூறியுள்ள பிணிகளுக்கான முதல் காரணம். அனிலம் என்பது வாதம் அல்லது வாயு. 

நம் உணவுக்குடலில் சேரும் நாட்பட்ட வாயுவும், சூட்டிற்கு காரணமான பித்தமும் ஒன்று கூடி மலக்குடலை தாக்கி வீக்கத்தை உண்டாக்கி, மூலநோயை உண்டாக்கும். ஏற்கனவே 'வாதமலாது மேனி கெடாது' என்று முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன். 

உடலில் வரும் அனைத்து பிணிகளுக்கும் குடல் வாயுவே முதன்மைக் காரணம். ஆகவே தான் சித்த மருத்துவத்தில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து (விரேசன சிகிச்சை) கொடுப்பது வழக்கம். இது அதிகரித்த வாதத்தை, வாயுவை தன்னிலைப்படுத்தும். இதனை 'விரேசனத்தால் வாதம் தாழும்' என்று சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அப்படி என்றால் அதிகரித்த பித்தத்தை எப்படி குறைப்பது ? என்று பலருக்கு பல்ப் எரிவது போன்று சட்டென தோன்றும். அதற்க்கு சித்த மருத்துவம் கூறும் எளிய வழிமுறை தான் 'எண்ணெய் குளியல்'. சீரகம் சேர்த்து காய்ச்சிய நல்லெண்ணெய் உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை தேய்த்து வெந்நீரில் குளிக்கும் வழக்கம்.

இன்றைய நவீன கலாச்சார வாசிகளுக்கு தீபாவளி அன்று கூட இருப்பதில்லை என்பது மிகவும் வருத்தம் தான்.  

நவீன உணவு முறையும், மாறிவிட்ட நாகரிகமும் நாம் பாட்டி வைத்தியமாக செய்த பல விஷயங்களை மறக்கடிக்க செய்திருப்பது தான் இன்றைய பல நோய்களுக்கு உறுதியான அஸ்திவாரம். 

ஆகவே, குடலில் வாயுவையும் (வாதம்), சூட்டையையும் (பித்தம்) குறைக்கும் படியான உணவு முறைகளையும்,பாரம்பர்ய பழக்க வழக்க முறைகளையும் மூல நோயாளிகள் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம். இதுவே நோய் நிலையை வரவிடாமல் தடுக்கும், முற்றிலும் ஒழிக்கும் வழிமுறையும் கூட.

மூல நோயால் அவதிப்படுவோர் எடுத்துகொள்ளும்படியான எளிய மற்றுமொரு சித்த மருத்துவ மூலிகை தான் 'பிரண்டை' .'டாக்டர் நாங்க பிரண்டை துவையல் சாப்பிடுறோம், அதுல கால்சியம் அதிகம் இருக்கு, எலும்புக்கு நல்லதுன்னு தான் சொல்வாங்க, அது மூல நோய்க்கு எப்படி உதவும் ? என்று பலருக்கு சந்தேகம் வரும். 

பிரண்டை

'பிரண்டையை நெய்யால் வறுத்து பின்பரைத்து மாதே!' எனத் துவங்கும் அகத்தியர் குணவாகடப்பாடல் 'மூலத் திண்வடங்கும் மூலவி ரத்த மாறும் -ஞாலத்தி னுள்ளே நவில்" என்று பிரண்டையை நெய்யில் வறுத்து உண்டால் மூல ரத்த கசிவும், தினவும், எரிச்சலும் நீங்கும், உலகத்தில் அவதிப்படுபவர்க்கு சொல் என கூறியுள்ளது பலரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும். இது அவரின் சமூக அக்கறையையும் காட்டுகிறது.

பிரண்டை தண்டுப்பகுதியில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும், காயங்களை ஆற்றுவதை தூண்டும் வைட்டமின்- சி யும், கால்சியமும் இயற்கையாகவே அதிகளவு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆகையால் இனி கால்சியம் மாத்திரைகளை உண்டு அலுத்துப் போன பெண்கள் பிரண்டையை சேர்த்துக்கொண்டால் போதும். 
 
மேலும் குர்சிட்டின் வகை பிளவனாய்டுகள், ரெஸ்வெரட்ரோல், இயற்கை ஸ்டெராய்டுகள் உள்ளது. இதில் உள்ள அனபாலிக் ஸ்டெராய்டு எலும்பு முறிவுகளை விரைவில் குணமாக்கும் தன்மை உள்ளது. 

பிரண்டையை மோரில் ஊறவைத்து செய்யப்படும் 'பிரண்டை உப்பு' வயிற்று புண்களை குணமாக்கும். மாதவிடாயின் போது வயிற்றுவலியால் அவதியுறும் பெண்கள் பிரண்டையை அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் தரும். பீட்டா கரோடின் இதில் அதிகம் இருப்பதால் ஆன்டி-ஆக்சிடண்ட் ஆகவும் செயல்படும்.

தாய்லாந்து நாட்டில் பாரம்பர்ய மருத்துவத்திலும் பிரண்டை மூலநோய் சிகிச்சையில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெறும் பிரண்டை மட்டும் வதக்கி உண்பது சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும், கைகளுக்கு நமைச்சலை உண்டாக்கும். 

ஆகவே, பிரண்டையை மோரில் ஊற வைத்து எடுத்து, மேல் தோலினை லேசாக நீக்கி நெய்யிட்டு வதக்கி துவையலாக்கி உண்டால் மூல நோயாளிகளின் வீக்கமுற்ற மலக்குடல் ரத்த குழாய்களின் வீக்கத்தை குறைத்து, ரத்தம் வடிவதை நிறுத்தி, வேதனையை குறைத்து மிகுந்த நன்மை தந்து, நிம்மதி பெருமூச்சு எடுக்க வைக்கும்.

மருத்துவரின் ஆலோசனைக்கு drthillai.mdsiddha@gmail.com என்ற இ-மெயில் ஐடி மூலம் தொடர்புகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com