சுகம் தரும் சித்த மருத்துவம்: ஒற்றை தலைவலியை ஓட்டும் வலி நிவாரணி ‘சுக்கு’ - 2

காலையில் எழுந்து வீட்டு வேலையை முடித்து, பணிக்கு செல்லும் பெண்கள், இரவு வீட்டிற்கு திரும்பும்போது அலுவலக பணிகளோடு, பல்வேறு உடல் உபாதைகளையும் சுமந்து கொண்டு வருகின்றனர். 
ஒற்றை தலைவலி
ஒற்றை தலைவலி

வலியும் வேதனையும் இன்றைய நாகரிக வாழ்வில் நம்முடன் ஒன்றிப்போன குறிகுணங்கள் ஆகிவிட்டன. காலையில் எழுந்து வீட்டு வேலையை முடித்து, பணிக்கு செல்லும் பெண்கள், இரவு வீட்டிற்கு திரும்பும்போது அலுவலக பணிகளோடு, பல்வேறு உடல் உபாதைகளையும் சுமந்து கொண்டு வருகின்றனர். 

அத்தகைய வலிகளில் ‘தலைவலி’ மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அதில் ஒன்றான ‘ஒற்றை தலைவலி’ (மைக்ரேன்) பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படுகிறது. இந்த ஒற்றை தலைவலியானது 75% பெண்களுக்கு மட்டுமே ஏற்படுவதாக ஆய்வு முடிவுகளும் சொல்கின்றன. 

ஒரு பக்க தலைவலியும் சிலருக்கு அதனுடன் வாந்தியும், வாய்க்குமட்டலும் சேர்ந்து தோன்றி அவர்களை பாடாய்படுத்தி உடல் வேதனையோடு, மன வேதனையும் கொடுக்கும்.  

‘டாக்டர் எனக்கு ஒரு பக்க தலைவலி இருக்கு, நானும் நிறைய மருந்துகள் சாப்பிட்டு பாத்துட்டேன், ஸ்கேன் பண்ணியும் பாத்துட்டேன், வேற பிரச்னை எதுவும் இல்லை, ஒத்த தலைவலி என்று சொல்றாங்க. அப்போதைக்கு வலி மாத்திரை போட்ட தான் நல்லா இருக்கு, தொடர்ந்து வலி மாத்திரை போடக்கூடாதுனு சொல்றாங்க, எப்படி தான் எங்க வலியை குறைப்பது?’ என்று வருத்தப்படும் பலருக்கும்  உதவக்கூடிய சித்த மருத்துவ எளிய மூலிகை தான் ‘சுக்கு’. இது,அனைத்து வயதினரும் பயன்படுத்த தகுந்த மூலிகை தான்.

சுக்கு

மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு, எளிய மூலிகையான சுக்கிற்கு பல மருத்துவ குணங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

வீக்கங்களை குறைக்கும் தன்மை, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மை, ரத்தத்தில் கொழுப்பினை குறைக்கும் தன்மை, ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை, வாந்தியை நிறுத்தும் தன்மை, உடல் வலி, வயிற்று வலியை குறைக்கும் தன்மை போன்ற பல செய்கைகள் இதற்கு உண்டு. வயிற்று போக்கினை தடுக்கும் தன்மையும், புற்றுக்கட்டிகளை கரைக்கும் தன்மையும், கிருமிகளை கொல்லும் ஆன்டி-மைக்ரோபியல் தன்மையும், ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையும் கூட இதற்குண்டு என அடிக்கிகொண்டே போகலாம். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சித்த மருந்துகளாகிய நிலவேம்பு குடிநீர், கப சுர குடிநீர்  இரண்டிலும் சுக்கு சேர்வது இன்னும் சிறப்பு.

‘வாதப்பிணி வயிறூதல் செவி வாய்வலி தலை வலி குலைவலி’ ஆகிய நோய்கள் சுக்கினால் தீரும் என்பதை தேரையர் குணவகப்பாடலால் அறியலாம். 

ஒற்றை தலைவலிக்கு சுக்கினை அரைத்து தலைக்கு பற்றிடலாம் அல்லது சுக்கு சேர்ந்த நீர்க்கோவை மாத்திரை என்ற சித்த மருந்தினை பற்று போடவும் நலம் கிடைக்கும். 

சுக்கினை பாலுடன் சேர்ந்து கொதிக்க வைத்து அருந்த ஒற்றை தலைவலிக்கு நல்ல பலன் தரும். அதனால் ஏற்படும் வாந்தியும், வாய்க்குமட்டலும் நிற்கும். 

ஒற்றை தலைவலி என்பது நரம்பு சார்ந்த கோளாறு என்பதோடு அல்லாமல் சிறு ரத்தஓட்ட மண்டல மாறுபாடு என்ற புரிதலும் உள்ளது. இந்த இரண்டையும் சரி செய்யும் தன்மை சுக்கிற்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.  

சுக்கின் இத்தகைய மருத்துவ குணங்களுக்கு 194 வகையான நறுமண எண்ணெய் வகைகளும், 85 வகையான ஜின்ஜெரால் என்ற வேதிப்பொருளும்,28 வகையான டையரில்ஹெப்டனாய்டு போன்ற வேதிக்கூட்டு பொருள்களும் காரணமாக உள்ளன. 

மேலும் 400 க்கும் மேற்பட்ட மூலக்கூறுகள் உள்ளதாக அறியவந்துள்ளது. இதில் உள்ள 'ஜின்ஜெரான்' பல்வேறு மருத்துவ செய்கைகளை கொண்டு முக்கிய பங்காற்றுகிறது. 

இது பசியை இயற்கையாக தூண்டுவதாகவும், பதட்டத்தை தணிப்பதாகவும், ரத்த குழாயில் ரத்தம் உறைவதை தடுப்பதாகவும் உள்ளது. 

அடிக்கடி சளி, இருமல், ஆஸ்துமா இவற்றால் அவதிப்படுபவர்கள் சுக்குடன், துளசி, மஞ்சள், மிளகு சேர்த்து பாலில் காய்ச்சியோ, கஷாயமாக்கியோ குடிக்க நல்ல பலன் தரும். 

ஒற்றை தலை வலி, சைனுசைடிஸ் இவற்றால் அவதிப்படுபவர்கள் ‘சுக்கு தைலம்’ என்ற சித்த மருந்தினை வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க நல்ல பலனை தரும்.

குரற்கம்மல், தொண்டைக்கட்டு இவற்றிற்கு சுக்கு சேர்ந்த ‘தாளிசாதி வடகம்’ என்ற சித்த மருந்தை அவ்வப்போது வாயிலிட்டு சுவைத்து வர பலன் தரும். சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்த ‘திரிகடுகு சூரணம்’ என்ற சித்த மருந்தினை,நோய்கள் வராமல் தடுக்க தினசரி தேனில் கலந்து எடுக்கலாம். 

இது நோய்க்கு காரணமான வாதம்,பித்தம், கபம் ஆகிய மூன்று குற்றங்களையும் சீராக்கும் எளிய மருந்து. புற்று நோயாளிகள்  கீமோ சிகிச்சையின் பின் வாந்தியால் அவதிப்படுபவர்களுக்கும்  சுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். 

மைக்ரேன் தலைவலிக்கு பயன்படுத்தும் நேரடி மருந்துகளாக இருந்தாலும் சரி, வலி நிர்வாணிகளாக இருந்தாலும் சரி, அவற்றை குறிப்பிட்ட வரம்புகளுக்கு மேல் நாட்பட்டு பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. 

தலை வலிக்கு ‘வலி நிவாரணிகளை’ பயன்படுத்தி சளைத்தவர்கள் சுக்குவை பயன்படுத்தலாம். ஆகவே சுக்கு என்ற எளிய சித்த வைத்திய மூலிகையினை 'மூலிகை வலிநிவாரணி'-ஆக, உணவு பொருள்களில் சேர்த்து  பல்வேறு நோய் நிலைகளில் பயன்படுத்த தொடங்கினால் நலம் நம்மை நாடி வரும்.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் ஐடி - drthillai.mdsiddha@gmail.com

Related Article

சுகம் தரும் சித்த மருத்துவம்: சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை ஏன் தெரியுமா? - பகுதி -1

சுகம் தரும் சித்த மருத்துவம்: கல்லீரலை காக்கும் ‘கொத்துமல்லி’

சுகம் தரும் சித்த மருத்துவம்:  ‘ஏலக்காய்’ஆறாத குடற்புண்ணை ஆற்றுமா?

சுகம் தரும் சித்த மருத்துவம்: கொலஸ்ட்ரால் கவலையை குறைக்குமா? - ‘கரிசலாங்கண்ணி கீரை’

சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘மூல நோய்’ வேதனையைப் போக்கும் ‘பிரண்டை’.

சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘மூல நோய்’ வேதனையை வேரறுக்கும் ‘கடுக்காய்’

சுகம் தரும் சித்த மருத்துவம் : புற்று நோயை தடுக்குமா 'எள் எண்ணெய்'..?

சுகம் தரும் சித்த மருத்துவம்: இருதய நோய் வராமல் காக்கும் ‘பூண்டு’

சுகம் தரும் சித்த மருத்துவம்: கொழுத்த உடலுக்கு உதவுமா ‘கொள்ளு’?

சுகம் தரும் சித்த மருத்துவம்: முடக்கும் மூட்டு வலியை சரி செய்யுமா 'நொச்சி'?

சுகம் தரும் சித்த மருத்துவம்: குளிர்கால ஒவ்வாமையை ஓட்டும் 'மஞ்சள்'

சுகம் தரும் சித்த மருத்துவம்: ஆஸ்துமாவை அடிபணியச் செய்யுமா ‘துளசி’?

சுகம் தரும் சித்த மருத்துவம்: சர்க்கரை நோய்க்கு குட்பை சொல்லுமா 'பாகற்காய்'?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com