சுகம் தரும் சித்த மருத்துவம்: தொற்றுக் கிருமிகளை தூர துரத்தும் ‘நிலவேம்பு’

தமிழகத்தில் சிக்குன்குனியா காலம் தொடங்கி பன்றி காய்ச்சல் போன்ற பல்வேறு வைரஸ் மர்மக்காய்ச்சல் பரவும் போதும் ‘கசாயம்’ என்றாலே நினைவுக்கு வருவது நிலவேம்பு கசாயம் தான். 
நிலவேம்பு
நிலவேம்பு

                
நிலவேம்பு என்றதுமே அதன் முழு பலன்களையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இல்லாதவரே இல்லை எனலாம். ஏனெனில் தமிழக மக்களின் மிகவும் விரும்பத்தக்க மூலிகைகளின் டார்லிங் என்றால் அது நிலவேம்பு தான். 

தமிழகத்தில் ‘கசாயம்’ என்றாலே நினைவுக்கு வருவது நிலவேம்பு கசாயம் தான். சிக்குன்குனியா காலம் தொடங்கி டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் போன்ற பல்வேறு வைரஸ் மர்மக்காய்ச்சல் பரவும் போதும் சித்த மருத்துவம் முன் நிறுத்துவது நிலவேம்பு கசாயம் (குடிநீர்) தான்.

“டாக்டர் உங்க கிட்ட வேற மருந்தே இல்லையா? எப்போது பார்த்தாலும் நிலவேம்பு தானா? எங்களுக்கே குடித்து குடித்து சளைத்துவிட்டது” என்பவர்கள் ஒரு பக்கம் இருப்பினும், தொற்று நோய்க்காலங்களில் அதை தேடித்தேடி அருந்தும் பயனாளிகளுக்கே அதன் அருமை விளங்கும். 

பள்ளி மாணவர்கள் முதல் வயோதிகர் வரை நிலவேம்பு கசப்பினை சுவைக்காதோர் இல்லை என்றே கூறலாம். அந்த அளவுக்கு பட்டிதொட்டி வரை பிரபலமான ஒரு சித்த மருத்துவ மூலிகை இந்த ‘நிலவேம்பு’. 

ஏன் நிலவேம்புக்கு இவ்வளவு முக்கியத்துவம்? சித்த மருத்துவம் அதை முன்னிறுத்துவது ஏன்? என்று பலரின் மனக்கேள்விகளுக்கு பதில். 
ஆறுபடை வீடு எவ்வாறு தமிழ் கடவுள் முருகனுக்கு அழகோ, அதைப்போல ஆறுசுவையும் உண்ணும் உணவிற்கு அழகு ‘நிலவேம்பு’.  

இந்த ஆறு சுவைகளும் பஞ்சபூதங்களின் சேர்மானம். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஆறுசுவைகளில் இனிப்பு சுவையை அதிகம் கொண்டாடும் நாம் கசப்பினை ஒதுக்குவது நாடறிந்த உண்மை.

விருந்தாளிகளுக்கு கூட இனிப்பு தான் வைக்கணும், கசப்பு எதுவும் வைக்க கூடாது என்பது இனிப்பு கடைக்காரர்களின் சூழ்ச்சியா? என்பதும் விளங்கவில்லை. 

இதுவே சர்க்கரை நோய்க்கு மட்டுமல்ல, பல்வேறு கிருமி நோய்களுக்கும் அடித்தளம். ஏனெனில் கசப்பு சுவையே கிருமிகளை கொல்லும் சுவை என்று சித்த மருத்துவம் கூறுகின்றது. சுண்டைக்காயும், பாகற்காயும் அதற்கு உதாரணங்கள். அந்த வழியில் கசப்பு சுவையுடைய நிலவேம்பு-க்கும் மாற்று கருத்து இல்லை.

கடும் கசப்பும், நீண்ட நெடியும் உடைய, நிலவேம்பு பற்றி "வாதசுரம் நீரேற்றம் மாற்றும் சுரதோடம் காதமென ஓடக்கடியுங் காண்" என்று அகத்தியர் குணவாகடம் கூறுகின்றது. 

அதாவது சுரம் வருவதற்கு காரணமாக உள்ள தோடங்களை (வழிகளை, கிருமிகளை) நிலவேம்பு நீக்குவதோடு, சுரத்தையும் நீக்கும் என்பது அறிய வருகின்றது. 

சித்த மருத்துவத்தில் சுரத்திற்காக சொல்லப்பட்டுள்ள கசாயம் பெரும்பாலானவற்றில் நிலவேம்பு சேருகிறது. கரோனா கால சித்த மருந்தாகிய ‘கபசுர குடிநீரில்’ கூட நிலவேம்பு சேருவது சிறப்பு. இதன் கைப்பு சுவையே, பல்வேறு வைரஸ், பாக்டீரியாக்களை கொல்லும் தன்மையுடையது.

உலகத்தில் உள்ள அனைத்து பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படும் சிறப்பு வாய்ந்த மூலிகை என்பதால் அதிகப்படியான ஆராய்ச்சிகள் இந்த நிலவேம்புக்கு செய்யப்பட்டுள்ளது.

‘கசப்புகளின் அரசன்’ என்ற புனைப்பெயருடன் வலம்வரும், நிலவேம்பில் டைடெர்பினோய்ட், பிளவனாய்டு, பாலிபீனோல்கள் அதன் மருத்துவ குணங்களுக்கு காரணமாக உள்ளது. 

அதிலும் முக்கியமாக 'ஆன்ரோகிராபோலெய்டு' என்ற அல்கலாய்டு வேதிப்பொருள் மருத்துவ குணத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது. இது நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் தன்மை உடையதாக, நோய்கிருமிகளுக்கு எதிராக செயல்படக் கூடியதாக உள்ளது. 

‘நியோஆன்ரோகிராபோலெய்டு’ என்ற வேதிப்பொருள் கல்லீரல் பாதிப்பை சரிசெய்ய உதவும். ‘ஆன்ரோகிராபனின்’ என்ற வேதிப்பொருள் வீக்கத்தை குறைக்க உதவும். இது வீக்கத்திற்கு காரணமான பல்வேறு காரணிகளை, கட்டிகள் வளர்ச்சியை தடுக்கக் கூடியது. 

நிலவேம்பில் உள்ள வேதிப்பொருள் டெங்கு வைரஸ் வளர்ச்சியை தடுப்பதோடு, சிக்குன்குனியா வைரஸ் உடலில் பல்கி பெருகுவதை தடுக்ககூடியதாக உள்ளதும் முதல் நிலை ஆய்வில் தெரியவருகிறது. இதுவே பன்றி காய்ச்சலை ஏற்படுத்தும் ‘எச்1என்1’ வைரஸ் கிருமியின் நியூராமினிடேஸ் உறையை தடுப்பதாகவும், எச்.ஐ.வி வைரஸ் வளர்ச்சியை தடுப்பதாகவும் உள்ளது. 

ஆய்வுக்கூட பரிசோதனை ஆய்வில் நிலவேம்பின் இதே வேதிப்பொருள் சார்ஸ்-CoV-2 தொற்று விரியன்களின் உற்பத்தியை தடுப்பதாக உள்ளது. இத்தகைய மருத்துவ குணத்தை முகர்ந்த நவீன மருந்து உலகம் இந்த வேதிப்பொருள்களை மட்டும் தனி மருந்தாக்கி பயன்படுத்துவது பாரம்பரிய மருத்துவத்திற்கு கிடைத்திருக்கும் பலரும் அறியாத வெற்றி. 

இத்துடன் நில்லாது நிலவேம்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க கூடியதாகவும், ரத்த குழாய் அடைப்பை தடுக்க கூடியதாகவும் உள்ளது. மேலும் கல்லீரல் பாதிப்பால் உண்டாகும் காமாலையை தீர்க்கும். சிறுநீரக பாதிப்பை சரி செய்யவும் உதவும். ஆன்டி-பைரெடிக் தன்மை உள்ளதால் சுர நோயில் உடல்வெப்பநிலையை  குறைப்பதுடன், நோய்க்கு காரணமான கிருமிகளை கொல்லக்கூடியது. 

டெங்கு வைரஸ் காய்ச்சலில் ‘நிலவேம்பு குடிநீரும், ஆடாதோடை மணப்பாகும்’ குறைந்த ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கையை கூட்ட உதவும்.  இப்போது பலருக்கும் புரியும் ஒரே நிலவேம்பு எவ்வாறு பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிறது என்பது.

'சுவான்-சின்-லியன்' என்று சீன மருத்துவத்தில் பல்வேறு நோய்களை காக்கும் ஆயுதமாக நிலவேம்பினை பயன்படுத்தி வருகின்றனர். முக்கியமாக நாட்பட்ட மேல் சுவாசப்பாதை தொற்றுநோயில் கிருமிக்கொல்லியாக பயன்படுத்தி குறிகுணங்கள் குறைவதை ஆய்வில் உறுதி செய்துள்ளனர்.

நிலவேம்பு குடிநீரில் சேரும் 9 மூலிகை சரக்குகளும் பல்வேறு கிருமிகளால் ஏற்படும் சுரத்தை குறைப்பதாக உள்ளது. இந்த குடிநீரில் நிலவேம்புடன் வெட்டிவேர், விலாமிச்சு வேர், சந்தனம், பேய்புடல், பற்பாடகம், சுக்கு, மிளகு, கோரைக்கிழங்கு ஆகிய மூலிகைகள் கலந்துள்ளதால் இது தொற்றுநோய் கூட்டத்தை பற்றவிடாமல் செய்யும் சிறப்பு வாய்ந்தது. 

குறிப்பிட்ட கிருமி எதிர்ப்பு மருந்துகள் இல்லாத இந்த சூழலில், எதெற்கெடுத்தாலும் நிலவேம்பு கஷாயம் தானா? என்று எண்ணாமல், நிலவேம்பு போன்ற எளிமையான மூலிகையினை பயன்படுத்திட பல தொற்றுநோய்களையும், தொற்றா நோய்களையும் வெற்றி பெற முடியும். இதன் மூலம், நம் பாரம்பரிய சித்த மருத்துவத்தை உலகம் போற்றும் உன்னத காலம், வெகு விரைவில் தோன்றும்.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் ஐடி - drthillai.mdsiddha@gmail.com

Related Article

சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘சீரகம்’ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா?

சுகம் தரும் சித்த மருத்துவம்: அதிக ரத்த அழுத்தத்தை குறைக்கும் தித்திக்கும் ‘கரும்பு’

சுகம் தரும் சித்த மருத்துவம்: 'அடோபி'க்கு அருமருந்தாகுமா ‘தூதுவளை’?

சுகம் தரும் சித்த மருத்துவம்: ஒற்றை தலைவலியை ஓட்டும் வலி நிவாரணி ‘சுக்கு’ - 2

சுகம் தரும் சித்த மருத்துவம்: சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை ஏன் தெரியுமா? - பகுதி -1

சுகம் தரும் சித்த மருத்துவம்: கல்லீரலை காக்கும் ‘கொத்துமல்லி’

சுகம் தரும் சித்த மருத்துவம்:  ‘ஏலக்காய்’ஆறாத குடற்புண்ணை ஆற்றுமா?

சுகம் தரும் சித்த மருத்துவம்: கொலஸ்ட்ரால் கவலையை குறைக்குமா? - ‘கரிசலாங்கண்ணி கீரை’

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com