தமிழுக்கு இடமில்லையா, கோவை அதிவிரைவு ரயிலில்?

கோவை அதிவிரைவு ரயிலில் தமிழில் பெயர்ப் பலகை இல்லாத நிலையால் தமிழ் மட்டுமே தெரிந்த ஒருவரின் அவதி பற்றி...
தமிழுக்கு இடமில்லையா?
தமிழுக்கு இடமில்லையா?

சென்னையிலிருந்து கோவை செல்வதற்காக கோவை அதிவிரைவு ரயிலைப் பிடிக்கக் காலையில் நீங்கள் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்  சென்றால், என்னடா தமிழுக்கு வந்த சோதனை என்றுதான் நினைக்கத் தோன்றும்.

ஏனெனில், இந்த ரயில்தான் கோவைக்குச் செல்கிறது என்று நீங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டுமென்றால் உங்களுக்கு அவசியம் ஆங்கிலம், ஹிந்தி, கன்னட மொழிகளில் ஏதேனும் ஒன்று தெரிந்திருக்க வேண்டும்...

பிரதான நுழைவாயிலின் வழியாக ரயில் நிலையத்திற்குள் நுழைந்தால், கடைசிப் பெட்டியிலிருந்துதான் முன்னேறி நடக்க வேண்டும். கடைசிப் பெட்டி, முன்பதிவில்லா பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகளைத் தொடர்ந்து, டி1, டி2 என்று வரிசை செல்லும்.

நடைமேடை எண் 11 என்பதைத் தெரிந்துகொண்டு உள்ளே நுழையும்போது, கடைசிப் பெட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள கோவை அதிவிரைவு வண்டி என்ற பலகையைக் காணத் தவறி விட்டுவிட்டால் அவ்வளவுதான்... தமிழ் மட்டுமே தெரிந்த எவராலும் இதுதான் கோவை அதிவிரைவு ரயிலா என உறுதிப்படுத்திக் கொள்ள முடியாது.

நடந்துசென்றுகொண்டே இருந்தால், பெட்டிகளில் ஆங்கிலத்தில் பெயர்ப் பலகை வருகிறது, ஹிந்தியில் வருகிறது, கன்னடத்திலும் ஹிந்தியிலும்  சேர்ந்து வருகிறது, மாறிமாறி இவைதான் வருகின்றன. தமிழில் மட்டும் ஒரு பலகையும் இல்லை. நடையாய் நடந்தால் டி 13 எண் பெட்டியில்தான் தமிழில் பெயர்ப் பலகை வைத்திருக்கிறார்கள் (எத்தனை பெட்டிகள் என்பதை  எண்ணிக் கொள்ளுங்கள்!). 

பெங்களூரு - சென்னை -  கோவை; பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ் என்பதாகத்தான் ஒரேமாதிரி அத்தனை பெட்டிகளிலும் குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் பலகையை மாற்றிக் கொண்டிருப்பது கடினம் எனக் கண்டறியப்பட்டதால் ஒரே பலகைதான் இந்தப் பெட்டிகளில் நிரந்தரமாக.

அந்த ரயில் எங்கே செல்கிறது என்பதை அறியத் தவறினால் கோவை எக்ஸ்பிரஸுக்குப் பதிலாக பிருந்தாவன் எக்ஸ்பிரஸிலும்  ஏறி அமர்ந்து கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது. ஏனெனில், அடுத்து சுமார் ஒரு மணி நேரத்தில் பெங்களூரு செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸும் சென்ட்ரலில் இருந்துதான் புறப்படும்.

ஜூன் 8, 2022 காலை, சென்ட்ரல் ரயில்நிலையத்தில்...
ஜூன் 8, 2022 காலை, சென்ட்ரல் ரயில்நிலையத்தில்...

இந்த ரயிலின் பெட்டிகள்தான் சென்னை - கோவை இடையிலும் சென்னை - பெங்களூரு இடையே பிருந்தாவன்  அதிவிரைவு ரயிலாகவும் மாற்றி  மாற்றி இயக்கப்படுகின்றன.  எனவே, கன்னடத்தில் பெயர்ப் பலகைகள் இடம் பெறுவதைத் தவிர்க்க இயலாது.

இன்னொரு தடத்தில் சென்னைக்கும் கோவைக்கும் இடையே  தமிழகத்திற்குள்ளேயே இயக்கப்படுகிற இந்த  ரயிலில், மூன்று பெட்டிகளுக்கு ஒரு முறையாவது தமிழில் பெயர்ப் பலகை இடம் பெற வேண்டாமா? ஏறத்தாழ 23 பெட்டிகள் இருக்கும் ரயிலில் 17, 18 பெட்டிகள் நடந்த பிறகுதான் தமிழ்  மட்டுமே தெரிந்தவர்கள், அந்த ரயில் எங்கே செல்கிறதெனத் தெரிந்துகொள்ள வேண்டுமா?

சென்ட்ரலிலிருந்து ஒவ்வொரு நாளும் காலை 6.10 மணிக்குப் புறப்படும் இந்த ரயிலைப் பிடிப்பதற்காக எங்கெங்கிருந்தோ பயணிகள் வருகிறார்கள். அடித்துப் பிடித்துக் கடைசி நேரத்தில் வரும் தமிழ் மட்டுமே தெரிந்த பயணிகள் படும்பாடு மிகப் பரிதாபம்.

உண்மையிலேயே தமிழ்நாட்டுக்குள் இருக்கிறோமா என்ற அவல உணர்வை ஏற்படுத்துகிறது கோவை அதிவிரைவு ரயில்.

தமிழுக்கு முதலிடம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, மூன்றில் ஒரு பங்கு இடமாவது கொடுக்க வேண்டாமா? - இந்தப் புலம்பலைக் காலையில்  இந்த ரயிலில் பயணிக்கவோ, வழியனுப்பவோ சென்றால் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் நடைமேடை நெடுகிலும் கேட்கலாம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com