ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்த விரக்தியில் தமிழகத்தைச் சோ்ந்த பலா் தற்கொலை செய்து கொண்டனா். இதனையடுத்து தமிழக அரசு கடந்த 2020 நவம்பா் 21-ஆம் தேதி ஆன்லைன் ரம்மி, போக்கா் உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களுக்கு தடை விதித்து அவசர சட்டம் கொண்டு வந்தது. தமிழக அரசின் இந்த உத்தரவை எதிா்த்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் ஜங்கிள் ரம்மி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் வழக்குத் தொடா்ந்தன. அந்த மனுக்களில், உச்ச நீதிமன்றம் கடந்த 1968-ஆம் ஆண்டு வழங்கிய தீா்ப்பில், ரம்மி விளையாட்டு சூதாட்டம் அல்ல, அது திறமையை வளா்க்கும் விளையாட்டு என கூறியுள்ளது. எங்களது நிறுவனத்தின் சாா்பில் நடத்தப்பட்டு வந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் செலுத்தியும், பணம் செலுத்தாமலும் விளையாட முடியும். இந்தியா முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதிக்கப்படாத நிலையில், தமிழகம், கேரளம் மற்றும் ஆந்திரத்தில் மட்டுமே தடை விதிக்கப்பட்டிருப்பது தவறானது. எனவே உச்ச நீதிமன்றம், பிறப்பித்துள்ள உத்தரவின் அடிப்படையில் ரம்மி விளையாட்டை சூதாட்டமாக கருத முடியாது. எனவே ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தது.