உ.பி.யை ராகுல் காந்தி தவிர்ப்பது ஏன்?

நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கைகழுவப்பட்டதும் ராகுல் காந்தி தவிர்க்கும் காரணமும்...
உ.பி.யை ராகுல் காந்தி தவிர்ப்பது ஏன்?

மக்களவைத் தேர்தலை மனதில்வைத்து ஒருபக்கம் நாடு தழுவிய நடைப்பயணம் சென்றுகொண்டிருக்கிறார் கட்சித் தலைவர்களில் ஒருவரும் இன்னமும் பிரதமர் வேட்பாளர்  என்று நம்பப்படுபவருமான ராகுல் காந்தி.

ஆனால், ஒருகாலத்தில் நாட்டையே ஆட்சி செய்த கட்சியான காங்கிரஸ்,  ஒவ்வொரு மாநிலமாக அதிகாரத்தை இழந்து, பல இடங்களில் மாநிலக் கட்சிகளை நம்ப  வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட எத்தனையோ காரணங்கள், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதம். 

ஓஹோவென்றிருந்த உத்தரப் பிரதேசத்தில் இன்றைக்குக் கட்சி  எங்கேயிருக்கிறது என்று தேட வேண்டிய நிலை. இந்தச் சூழ்நிலையில் நாடெங்கும் நடந்துசெல்லும் ராகுல் காந்தியே உத்தரப் பிரதேசத்தில் இரு நாள்கள் மட்டுமே கடந்து செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிக அதிக எண்ணிக்கையிலான மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட  ஒரு மாநிலத்தை காங்கிரஸே கைவிட்டுவிட்டதா? அல்லது ராகுல்  காந்தி  நடந்துசென்றாலும் ஆகப் போவதொன்றுமில்லை  என்று நினைக்கிறார்களா, தெரியவில்லை.

நாடு முழுவதுமே மாநிலங்களில் காங்கிரஸ் வலுவிழந்துபோனதற்குக் காரணமாகப் பெரிதும் பேசப்படுவது கோஷ்டிப் பூசலும் மத்தியிலிருக்கும்  கட்சித் தலைமை தங்கள் விருப்பப்படி மக்கள் செல்வாக்கு  அற்றவர்களையெல்லாம் மாநிலத்தில் தலைவர்களாக நியமித்ததும்தான். 

ஆனால், உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸை ஒழித்துக் கட்டியதில் சோனியா காந்தியின் மகளான பிரியங்கா காந்திக்கே பெரும் பங்கு என்கிறார்கள்.

2009 ஆம் ஆண்டுவாக்கில் 'பிரியங்காவே வருக, நாட்டைக் காப்பாற்றுக',  'நாட்டின் பெரும்புயல், இன்றைய இந்திரா காந்தி' என்றெல்லாம் புகழ்ந்து  பிரியங்காவை வரவேற்றது உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ்.

காங்கிரஸ் செல்வாக்கிழந்துகொண்டிருந்த நிலையில் பிரியங்கா காந்தியின் வருகை மூலம் நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தி செல்வாக்கைப் பெற முடியும், கட்சியை எப்படியும் அவர் மீட்டெடுத்துவிடுவார் என்று கட்சிக்காரர்கள் நம்பினர்.

2019-ல்  உத்தரப் பிரதேசத்துக்கு வந்தார் பிரியங்கா. நிறைய ஆலோசனைக் கூட்டங்கள், சில நேரங்களில் அதிகாலை வரைகூட தொடர்ந்து நடைபெற்றன. கட்சித் தொண்டர்களையெல்லாம் சந்தித்துப் பேசிய அவர், இழந்த  செல்வாக்கை மீட்போம் என்று உறுதியளித்தார். தொண்டர்களும் நம்பினார்கள்.

ஆனால், அடுத்த சில வாரங்களில் அமேதி மக்களவைத் தொகுதியிலேயே காங்கிரஸ் தோற்றபோது, நிலைமை மாறத் தொடங்கியது.

அன்றைய உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்தார். பிரியங்கா காந்தியோ மூத்த  காங்கிரஸ் தலைவர்களை எல்லாம் பார்ப்பதையே தவிர்த்தார். கட்சியின் புதிய மாநிலத் தலைவரானார் அஜய் குமார் லாலு. பிறகு, பிரியங்காவைச் சுற்றியிருந்த, அவருடைய தனிச் செயலர் சந்தீப் சிங் தலைமையிலான குழு, உத்தரப் பிரதேச காங்கிரஸை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றிக் கொண்டது. 

சந்தீப் சிங் மற்றும் அவருடைய ஆதரவாளர்களின்  ஆணவப் போக்கும் ஆதிக்க மனநிலையும் கட்சிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தின.

2019 நவம்பர் 14-ல் ஜவாஹர்லால் நேரு பிறந்த நாளைக் கொண்டாடக்  கூடினார்கள் என்பதற்காகவே காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பத்து பேரைக் கட்சியிலிருந்தே நீக்கினர்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மூவருமே மாநிலத்தின் மூத்த  தலைவர்களைச் சந்திக்க மறுத்துவிட்டது பிரியங்காவைச்  சுற்றியிருந்தவர்களுக்கு மேலும் ஊக்கமளிப்பதாகிவிட்டது. முரட்டுத்தனம், இழித்துப் பேசுதல், ஆணவப் போக்கு என்பதெல்லாம் காங்கிரஸ்  தலைவர்களின் குணங்களாகிவிட்டன.

இளைஞர்களோ, மூத்தவர்களோ, உத்தரப் பிரதேசத்தில் ஒவ்வொரு நாளும் கட்சியிலிருந்து  நீக்கப்படுவோரின் பட்டியல் மட்டும் நீண்டுகொண்டே இருந்தது. 

உத்தரப் பிரதேசத்துக்கு பிரியங்கா வரும்போதும் யாராலும் அவரைச் சந்திக்க முடிவதில்லை. அவரைச் சுற்றி எப்போதுமே துதிபாடும் ஒரு கும்பல்  மட்டுமே இருந்துகொண்டிருந்தது. 

2022 சட்டப்பேரவைத் தேர்தலும் நெருங்க, பெண்களுக்கே சக்தி என்ற கோஷத்தை முன்வைத்து செய்த பிரசாரம், பெரு நஷ்டத்தில்தான் முடிந்தது.  பெண்கள் என்பதற்காக, சம்பந்தமில்லாமல் யார் யாருக்கோ  கட்சியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது.

பணத்தைப் பெற்றுக் கொண்டு கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் கட்சி டிக்கெட் விற்பனைக்குக் கிடைப்பதாகவும் சமூக ஊடகங்களில் எல்லாம் விமர்சனம் செய்யப்பட்ட போதிலும் கட்சித் தலைமையோ இவற்றையெல்லாம் கண்டுகொள்ளவேயில்லை.

மாநிலத்தில் இருக்கிற தலைவர்களும் தொண்டர்களும்கூட கட்சிக்குள்ளேயே பிரியங்கா காங்கிரஸ், ராகுல் காங்கிரஸ் என்று  இரண்டாகப் பிளவுபட்டுச் செயல்படத் தொடங்கிவிட்டனர்.

அனு தாண்டன், ஜிதின் பிரசாத, ஆர்பிஎன் சிங், லலிதேஷ்பதி திரிபாடி  போன்றோர் காங்கிரஸை விட்டு வெளியேறினர், மேலும், தங்களுடைய வெளியேற்றத்துக்கு பிரியங்காவின் செயல்பாடுகளே காரணம் என்றும்  இவர்கள் குற்றம் சாட்டினர்.

2022 சட்டப்பேரவைத் தேர்தலில், மிகப் பெரிய பரிதாபமாக, 403 தொகுதிகளில் வெறும் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று, வெறும் 2.3 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று  அடிமட்டத்துக்குப் போய்விட்டது காங்கிரஸின் செல்வாக்கு.

இந்தத் தேர்தலில் ஏறத்தாழ கட்சியின் 387 வேட்பாளர்கள் பிணைத்  தொகையை இழந்தனர். பத்துத் தொகுதிகளில் நோட்டாவுக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றனர்!

தேர்தலைக் கையாண்ட தலைவர்கள் மீது கடும் அதிருப்தி நிலவியபோதிலும் யாரும் மாற்றப்படவில்லை, யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவும் இல்லை, யாரும் நீக்கப்படவுமில்லை.

தேர்தலில் மரண அடி வாங்கி ஆறு மாதங்களான பிறகும்கூட பிரியங்கா காந்தி லக்னௌ பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை. அவருடைய அரசியல் செயல்பாடு என்பது ட்விட்டர் கணக்கைப் பராமரிப்பதுடன் நின்றுவிட்டது. அவருடைய குழுவினரோ லக்னௌவில் அவர்கள் விருப்பத்திற்கேற்ப  செயல்படுகின்றனர்.

கட்சித் தொண்டர்கள்  என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைக் கேட்கக்கூட பிரியங்கா காந்தி தயாராக இல்லை. தேர்தல் முடிவுகள் வந்த பிறகு லக்னௌ பக்கமே பிரியங்கா திரும்பிப் பார்க்கவில்லை. அவருடைய ஆதரவு கும்பலோ, கேள்வி எழுப்புகிற ஒவ்வொருவரையும் கட்சியைவிட்டு அனுப்பிக் கொண்டிருக்கிறது. விதிகளுக்குப் புறம்பானது என்றபோதிலும் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராக இருப்பவரையே கட்சியைவிட்டுத் தெரிந்தே   நீக்குகின்றனர். இத்தகைய நடவடிக்கையால்தான், அண்மையில் கட்சியிலிருந்து ராஜிநாமா செய்தவரான மூத்த தலைவர்களில் ஒருவரான  ஸீஷன் ஹைதர் என்பவரும் நீக்கப்பட்டார்.

கட்சியைக் காப்பாற்றுவதாகக் கூறிக்கொண்டு நாசப்படுத்திக்  கொண்டிருக்கிறார்கள் இவர்கள். உத்தரப் பிரதேசத்துக்குப் பொறுப்பான பொதுச்செயலராக பிரியங்கா காந்திய நியமிக்கப்பட்ட பிறகு மட்டுமே சுமார் 9 ஆயிரம் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர் அல்லது வெளியேற்றப்பட்டுள்ளனர் என்கிறார் ஸீஷன் ஹைதர்.

சோனியா, ராகுல், பிரியங்கா யாருமே கட்சியிலுள்ள பிரச்சினைகளைக் கேட்கத் தயாரில்லை. கட்சி கிட்டத்தட்ட காலியாகிவிட்டது பற்றி அவர்களுக்குக் கொஞ்சமும் கவலையில்லை. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோ எங்கள் கடிதங்களுக்குப் பதிலளிப்பதும் இல்லை, எங்களைச் சந்திக்க ஒப்புக்கொள்வதுமில்லை என்கிறார் அவர்.

உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட பெருந்தோல்விக்கான காரணங்கள் பற்றி விவாதிக்க வேட்பாளர்களையும் மூத்த தலைவர்களையும் பிரியங்கா அழைத்துப் பேச வேண்டும். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே இருக்கும் நிலையில் மண்ணுக்குள் தலையைப் புதைத்துக் கொண்டிருக்கும் மனப்போக்கு தொடர்ந்தால் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் காங்கிரஸ் விழுவதைத் தவிர்க்க இயலாது என்கிறார் முன்னாள் எம்.பி. ஒருவர்.

இன்னொரு மூத்த தலைவர் கூறுகிறார்: "விளையாட்டுக் குழந்தை பழைய பொம்மையைப் பார்த்துச் சலித்துவிடுவதைப் போல உ.பி. அரசியலில் பிரியங்கா ஆர்வத்தை இழந்துவிட்டாற்போல தோன்றுகிறது. கட்சித் தலைவர்களுடனோ, தொண்டர்களுடனோ விவாதிக்கவே பிரியங்கா தயாரில்லை என்பதுதான் பிரச்சினை. அவரைச் சுற்றியுள்ளவர்கள் தரும் தகவல்களை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கிறார்."

ஒருகாலகட்டத்தில் கருதியதைப் போல அவர் மக்கள் தலைவரில்லை, அவரைச் சுற்றியிருக்கும் சிறுகூட்டத்துக்கு மட்டும்தான் தலைவர். அந்த நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது. மாநிலத்தில் மீண்டும் முதலில் இருந்துதான் கட்சியை எழுப்பத் தொடங்க வேண்டும் என்கிறார் கட்சித் தலைவர் ஒருவர்.

உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சியே இப்போது முடங்கிப் போய்க் கிடக்கிறது. ஏனெனில், கடந்த மார்ச் மாதத்திலேயே கட்சித் தலைமை அறிவுறுத்தியபடி மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அஜய் குமார் லாலு வெளியேறிவிட்டார். இப்போது கட்சியோ தலையுமில்லாமல், செல்லும் திசையுமறியாமல்  திணறிக் கொண்டிருக்கிறது.

543  உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் 80 உறுப்பினர்கள் (15 சதவிகிதம்!), உத்தரப் பிரதேசத்திலிருந்துதான்  தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அந்த உத்தரப் பிரதேசத்தில்தான் காங்கிரஸ் இந்த நிலையில் இருக்கிறது.

இவையெல்லாம் நன்றாகத் தெரிந்ததாலோ என்னவோதான், நாட்டை  ஒன்றிணைக்கும் தன்னுடைய நடைப்பயணத்தில் உத்தரப் பிரதேசத்தை ராகுல் காந்தி பெரும்பாலும் தவிர்த்துவிட்டிருக்கிறார். களத்தில் நிலவரம்,  காங்கிரஸை ஒன்றுசேர்ப்பதேகூட ராகுல் காந்திக்குப் பெரும் சவாலாகத்தான் இருக்கும்போல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.