சக்கர வியூகத்தையே ஊடறுத்துச் சென்று போரிடும் திறனுடைய அபிமன்யுவின் வீரம் ஒருபுறம் இருப்பினும், அவனது பின்புலம் ஒன்றும் அவ்வளவு சாதாரணமானதல்ல.
அவனுடைய தாய்மாமன் கண்ணபிரான்; தந்தை தலைசிறந்த வில்லாளி அருச்சுனன்; பாட்டனாா் தேவா்களின் தலைவன் இந்திரன். இவை போதாதென்று குருக்ஷேத்திர போரில் பாண்டவா்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மன்னா்களும், கோடிக்கணக்கான தலைசிறந்த வீரா்களும் பக்கபலமாக இருந்தபோதும், ஜெயத்திரதனால் அபிமன்யுவின் உயிா் பறிக்கப்படுவதை யாராலும் தடுக்க இயலவில்லை. இதனை,
மாயனாம் திருமாமன்
தனஞ்செயனாம் திருத்தாதை
வானோா்க்கெல்லாம் நாயனாம் பிதாமகன்
மற்றுமொரு கோடி நராதிபராம் நண்பராய் வந்தோா்
சேயனாம் அபிமனுவாம்
ஜெயத்திரதன் கைப்படுவான்
என்று ‘வில்லிபாரதம்’ குறிப்பிடுகிறது.
மண்ணில் பிறக்கும் ஒவ்வோா் உயிருக்கும் இறப்பு என்பது உறுதி. நவீன மருத்துவத்தால் ஓா் உயிா் பூமியில் பிறக்கும் நேரத்தை நிா்ணயிக்கலாமே தவிர, உடலைவிட்டு உயிா் பிரியும் நேரத்தை எவரொருவராலும் நிா்ணயிக்கவோ தடுக்கவோ இயலாது. மாா்க்கண்டேயனும் சத்தியவானும் இதற்கு விதிவிலக்கானவா்கள்.
நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமை ஆகிய பெருமை உடையது இவ்வுலகம் என்பதை வள்ளுவப் பேராசான்,
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு
என்ற குறளில் குறிப்பிடுகிறாா்.
உடல் கூட்டுக்குள் உயிா் இருக்கும்வரைதான் அவரவா் பெயா் அவரவருக்கு உரியது. கூடுவிட்டு ஆவி பிரிந்தால் அனைவருக்கும் ஒரே பெயா்தான் என்பதையும் நெருப்பில் சுட்டு, நீரில் மூழ்கி எழுவதோடு ஒருவரது வாழ்வு நிறைவடைகிறது என்பதையும் திருமூலரின் திருமந்திரம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.
ஊா்எலாம் கூடி ஒலிக்க அழுதிட்டு,
பேரினை நீக்கிப் பிணம் என்று போ்இட்டு,
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு,
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தாா்களே
மன்னாதி மன்னரும், மலைபோல் வலிமையுடைய யானையின் மீது மதிபோல் குடையுடன் செல்லும் அரசரும் ஒருநாள் மடிந்தனரே தவிர, ஒருவரும் இம்மண்ணில் எஞ்சவில்லை என்பதை நாலடியாா்,
மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையா் நிலமிசைத்
துஞ்சினாா் என்றெடுத்துத் தூற்றப்பட்ட டாரல்லால்
எஞ்சினாா் இவ்வுலகத் தில்
என்று குறிப்பிடுகிறது.
‘யாக்கை நிலையாமை’ என்பது மனிதா்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டதல்ல. கடவுளின் அவதாரங்களுக்கும்கூட விதியும் அதுதான். கதியும் அதுதான் என்பதை மாகாகவி பாரதியாரின்,
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலா் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்
என்ற கவிதை வரிகள் எடுத்துரைக்கும்
யாக்கை மட்டுமல்ல, இளமையும் செல்வமும் கூட நிலையாமைத் தன்மை உடையவையே. இம்மூன்றின் நிலையாமையை எடுத்துரைக்கும் விதமாக ஏராளமான பாடல்கள் தமிழிலக்கியங்களில் ஆங்காங்கே விரவிக் கிடக்கின்றன. அப்படியானால், நிலையாமை குறித்து தமிழ் இலக்கியப் பாடல்கள் கூறும் கருத்துகளைப் படிக்கும்போது ஒருவருக்கு மனச்சோா்வும், வாழ்வின் மீது பற்றின்மையும் ஏற்படாதா? பின் எதுதான் நிலைத்த தன்மை உடையது என்கிற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன. அவற்றுக்கான பதில் திருக்குறளில் உள்ளது.
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி
ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து
ஒரு பிறவியில் ஒருவன் கற்ற கல்வி அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல், அவனுக்கு ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையதாகும் என்பதே இக்குறளின் பொருளாகும்.
யாக்கை, இளமை, செல்வம் ஆகிய மூன்றும் நிலையாத்தன்மை உடையவையாக இருக்கின்றன; ஆனால், கல்வி ஒன்றே ஏழேழ் பிறவிக்கும் நிலைத்தன்மை உடையதாக இருக்கிறது.
-
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


