சுகம் தரும் சித்த மருத்துவம்: சிறுநீரக செயல்பாட்டை சீராக்கும் ‘மூக்கிரட்டை கீரை’

மூக்கிரட்டை கீரையால் நமைச்சல், வாதப்பிணி, மலச்சிக்கல் நீங்கி, உடல் அழகு கூடும் என்பதை ‘சீத மகற்று தினவடக்கும் காந்தி தரும் வாத வினையை மடிக்குங்காண்’ என்ற அகத்தியர் குணவாகட பாடல் வரிகளால் அறியலாம்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

“ஊருக்கு ஒரு டயாலிசிஸ் பிரிவு, வீதிக்கு ஒரு டயாலிசிஸ் நோயாளி, உலகம் எங்க தான் போய்கிட்டு இருக்குனே தெரியல டாக்டர், நவீன அறிவியல் வளர்ச்சி அடைந்ததால நோய்கள் அதிகமானதா, நோய்கள் அதிகமானதால அறிவியல் வளர்ந்ததா-ன்னு ஒண்ணுமே புரியல டாக்டர், ஒரே பயமா இருக்கு என்று மருத்துவர்களிடம் புலம்புபவர்கள் ஏராளம்”.

அதோடு “கொஞ்ச ஆண்டுகளுக்கு முன்னாடிலாம், இந்த மாதிரி வியாதிகளையும், மருத்துவ முறைகளையும் பார்த்ததே இல்ல என்று குறிப்பிடும் அவர்கள் ஏன் இந்த நோயெல்லாம் இப்போ அதிகமா வருது ? என்று விடை கிடைக்காத வினாவை மனதிற்குள் பாரமாய் சுமந்து கொண்டு திரிவதால், மனஅழுத்தம் அதிகமாவது தான் மிச்சம்.

வாழை இலையை, பிளாஸ்டிக் வாழை இலையாக மாற்றி பயன்படுத்த தொடங்கிய நாள் எதுவோ, எப்போது உடல் பருமன் எனும் தொற்றா நோய்க்கு விருந்தாக மாறினோமோ, எப்போது இயற்கை வலி நிவாரணிகளை மறந்தோமோ அப்போதே துவங்கி விட்டது சிறுநீரக செயலிழப்பு எனும் நோயின் அத்தியாயம்.

தொற்றா நோய் கூட்டத்தின் அரசனாகிய நீரிழிவு எனும் சர்க்கரை வியாதியால் ஏற்படும் ‘டயாபெடிக் நெப்ரோபதி’ எனும் சிறுநீரக பிரச்னை ஒருபுறமிருக்க, இளம் வயதிலே ஏற்படும் சிறுநீரக செயலிழப்பும் வாழ்வின் விளிம்பிற்கே கொண்டு செல்லும் அவல நிலையை ஏற்படுத்தும்.

“சிறுநீரகத்தின் க்ளோமெரூலர் வடிகட்டும் திறன் குறைந்து போய்டுச்சு, கிரியாட்டினின் அளவு அதிகமா இருக்கு, இன்னும் கூடினால் டயாலிசிஸ் தான் நீங்க பண்ணனும் என்று சொல்லிட்டாங்க” என்றும் வருந்துபவர்களும், கூடின பிறகு டயாலிசிஸ் என்பது சரி ? ஆனால் இன்னும் கூடாமல் தடுக்க முடியாதா? என்று மனம் நொந்து வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் பலரும், நாட வேண்டியது சித்த மருத்துவத்தை தான்.

மூக்கிரட்டை கீரை
மூக்கிரட்டை கீரை

டயாலிசிஸின் தந்தை என்று அறியப்படும் ஸ்காட்லாந்து நாட்டின் வேதியியலாளர் தாமஸ் கிரஹாமிடமிருந்து 19- ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது தான் டயாலிசிஸ் சிகிச்சையின் முதல் அறிவியல் விளக்கம்.

டயாலிசிஸ் எனும் சிகிச்சை கண்டுபிடிப்பதற்கு முன்னர் என்ன தான் பண்ணாங்க? என்று கொஞ்சம் வரலாற்றை புரட்டி பார்த்தால் ரத்தத்தில் அதிகமான யூரியா (யுரேமியா)வுக்கான சிகிச்சையில் சூடான குளியல், நீராவி பிடித்தல், குருதி வாங்கல் மற்றும் பேதிக்கு தரும் எனிமா சிகிச்சை ஆகியவை முக்கிய பங்காற்றியுள்ளன.

இந்த சிகிச்சை முறைகள் அனைத்தும் சித்த மருத்துவ முறைகளில் சொல்லப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சரி. இதெல்லாம் இருக்கட்டும். வரும் முன் காப்போம் என்பது சொல்லடை மட்டுமல்ல மருத்துவ வழக்கு முறையும் தான். இவ்வாறிருக்க சிறுநீரக செயலிழப்பு நோயை வரவிடாமல் தடுக்க முடியுமா? வந்தால் தீர்க்க முடியுமா ? என்ற பலரும் கேட்க விரும்பும் வினாவிற்கு விடையாக இருக்கும் சித்த மருத்துவ மூலிகைகளுள் ஒன்று தான் ‘மூக்கிரட்டை கீரை’.

மூக்கிரட்டை கீரையால் நமைச்சல், வாதப்பிணி, மலச்சிக்கல் நீங்கி, உடல் அழகு கூடும் என்பதை ‘சீத மகற்று தினவடக்கும் காந்தி தரும் வாத வினையை மடிக்குங்காண்’ என்ற அகத்தியர் குணவாகட பாடல் வரிகளால் அறியலாம். இங்கு சிறுநீரக நோயை வாத வினை என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘வாதமலாது மேனி கெடாது’ என்பது தேரன் வாக்கு. ஆக, சிறுநீரக நோயில் பாதிக்கும் வாதத்திற்கு மூக்கிரட்டை வேர் நல்ல மருந்து. மேலும் மூட்டு வாதத்திற்கும், வாதத்தால் ஏற்படும் ஆஸ்துமாவிற்கு கூட வேர் கஷாயம் நல்ல பலனளிக்கும்.

மூக்கிரட்டை கீரையில் மற்றும் வேரில் ரோட்டினாய்டுகள், பிளாவனாய்டுகள், சாந்தோன்கள், பியூரின் நியூக்ளியோசைடு, லிக்னன்கள் மற்றும் ஸ்டீராய்டுகள் போன்ற எண்ணற்ற உயிர் வேதி மூலக்கூறுகள் உள்ளன. அல்கலாய்டுகளில் முக்கியமாக ‘புனர்னவின்’ என்ற செயல் மூலக்கூறு உள்ளது. அத்துடன் மகத்துவம் வாய்ந்த பீனோலிக் மூலக்கூறுகளான குர்சீட்டின், கெம்ப்பெரால் ஆகியவையும் உள்ளது. இதன் வேரில் 14 அமினோ அமிலங்கள் உள்ளது. அதில் 7 அமினோ அமிலங்கள் உடலின் செல்களுக்கு அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் தான்.

மூக்கிரட்டை கீரையானது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மையும், கல்லீரலை பாதுகாக்கும் தன்மையும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும், ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை இருப்பதால் புற்று நோயிலும், மூலிகை வலி நிவாரணி ஆகவும், வீக்கமுருக்கியாகவும், சிறுநீர் பாதை தொற்றுக்களை நீக்கும் தன்மையும், சிறுநீரை பெருக்கும் தன்மையும், மலச்சிக்கலை போக்கும் தன்மையும், ஆண்களுக்கு விந்தணுக்களை அதிகரிக்கும் தன்மையும் உடையது.

மூக்கிரட்டை கீரை
மூக்கிரட்டை கீரை

கரீபிய தீவுகளில் பாரம்பரிய மருத்துவத்தில் இந்த மூலிகையை வலி நிவாரணியாக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். இதில் உள்ள ‘புனர்னவோசைடு’ எனும் மூலக்கூறு அதிகரித்த ரத்த அழுத்தத்தை குறைப்பதாகவும் உள்ளது. கால் வீக்கம், சரிவர சிறுநீர் கழிக்க முடியாத நிலை ஆகிய நோய்களுக்கும் சிறந்த பயன் தரும்.

சிறுநீரக செயலிழப்பை எண்ணி அஞ்சி நிற்கும் நீரிழிவு நோயாளிகளும், ரத்தத்தில் யூரியா, கிரியாட்டின் அளவு அதிகரித்தவர்களும், டயாலிசிஸ் சிகிச்சையில் உள்ளவர்கள் கூட சிறுநீரக செல்களை (நெப்ரான்களை) புதுப்பிக்க இயற்கையான உணவு முறைகளோடு, மூக்கிரட்டை வேரையும் சித்த மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ள நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

பாரம்பரிய உணவு முறையும், மருத்துவ முறையும் என்றும் நமது பக்க பலம். அதை நாடி வாழ்ந்தால், நலம் நம்மை நாடி வரும் என்பது உறுதி.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: drthillai.mdsiddha@gmail.com செல்லிடப்பேசி எண்: +91 8056040768

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com