சுகம் தரும் சித்த மருத்துவம்: உடல் பருமன் கவலையை ‘கருணைக்கிழங்கு’ போக்குமா?

உடல் பருமன் என்ற தொற்றாநோய் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய மருத்துவ அச்சுறுத்தலாக உள்ளதால், நம் நாட்டு எளிய வைத்திய முறைகளை பின்பற்றி, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்.
உடல் பருமன்
உடல் பருமன்


உலகை இன்று ஆட்டி படைத்துக்கொண்டிருக்கும் தொற்றா நோய்களில் ஒன்றான உடல்பருமன் எனும் ஒபீசிட்டி. சமீப காலமாக தொற்றா நோய்களுக்கு உலக அரங்கில் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே.

அதில், உடல் பருமன் எனப்படும் ஒற்றை நோய் நிலையானது நீரிழிவு, அதிக ரத்த அழுத்தம், பக்க வாதம், இருதய நோய்கள், பித்தப்பை கல்லடைப்பு, புற்று நோய் போன்ற பல்வேறு தொற்றா நோய்களுக்கு வழிவகுக்கும் என்பது தான் உண்மை.  

உடல் பருமனை குறைக்க பலரும் மெனக்கெடுவது ஏன்? என்பது இப்போது பலருக்கும் விளங்கும்.

‘டாக்டர் காலையில் வெறும் புருட் சாலட் தான் சாப்பிடுறேன், காலை, மாலை இருவேளை என நடையாய் நடக்கிறேன், அடிக்கடி க்ரீன் டீ குடிக்கிறேன், அப்போ கூட வெயிட் குறையவே மாட்டேங்குது’ என்று வருந்தும் பலரும் வளர்ச்சிதை மாற்ற நோய் நிலையில் சிக்கி கொண்டு தவிக்கின்றனர் என்பது மருத்துவ உலகம் கூறும் உண்மை.

“டாக்டர் எனக்கு தைராய்டு இல்லை, பிசிஓஎஸ் இல்லை என்று மகளிர் ஒரு பக்கமும், டாக்டர் என்னை விட அதிகமா சாப்பிடுறவன் ஒல்லியா இருக்கான், நான் ஒண்ணுமே சாப்பிடுறது இல்ல குண்டாயிட்டே போறேன்” என்று ஆண்களும் மனம் குமுறி உடல் எடையை குறைக்க ஏங்குவது இன்னொரு புறம்.

இவை அனைத்தும் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் எனும் இன்சுலின் ஹார்மோன் தடையினால் வளர்ச்சிதை மாற்ற நோய் நிலையான உடல்பருமனுக்கு வழி வகுத்துள்ளது தான் உண்மை.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவில் எளிமையாக உடல் பருமனை குறைக்க முடியுமா? என்ற கேள்வி பலருக்கும் உண்டு. அந்த வகையில் நாம் பயன்படுத்த மறந்து போன சித்த மருத்துவ மூலிகை உணவுப்பொருள் ‘கருணைக்கிழங்கு’. இது உடல் எடையை குறைக்க விரும்பும் பலருக்கும் உதவ காத்துக் கொண்டிருக்கிறது.

சித்த மருத்துவத்தில் வாதம், பித்தம், கபம் என்ற இந்த மூன்றில் ஏற்படும் மாற்றங்களே நோய் நிலைகள் உண்டாவதற்கான காரணம்.  உடல் பருமனுக்கு காரணமான கொழுப்பு, கபம் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

‘வாதமலாது மேனி கெடாது’ என்பது நான் அடிக்கடி கூறும் ஒன்று. இந்த ‘வாதம் அல்லது வாயு’, மேற்கூறிய உடல்பருமனுக்கு காரணமான கபத்துடன் ஒன்று கூடி கப வாதமாகி உடல்பருமன் எனும் ஒபீசிட்டியை உண்டாக்குவதாக அறியப்படுகின்றது.  

கருணைக் கிழங்கை உணவாக சமைத்து சாப்பிட்டால் மூல நோய், கப நோய், உடல் பருமன் இவை நீங்கும் என்பதை சித்த மருத்துவம் கூறுகின்றது.

இதை “சுத்த குதாங்குரத்தை துட்ட கபம் மேதையதிகத்தை விலக்கும் கறியமைக்கிற்” என்ற அகத்தியர் குணவாகப் பாடல் வரிகளால் அறியலாம்.

தேரையர் பிணியணுகா விதியில் நோய்கள் வராமல் தடுக்கும் வழி வகையில் ‘மண் பரவு கிழங்குகளில் கருணை இன்றி புசியோம்’ என்று கூறியுள்ள வரிகளில் கருணைக்கிழங்கின் சிறப்பு அறியப்படுகின்றது.

மற்ற கிழங்குகளை போல் அல்லாமல் கருணைக்கிழங்கில் ஸ்டார்ச் மட்டுமின்றி நார்ச்சத்தும், பிற வேதிப்பொருள்களும் இருப்பதால் பல்வேறு மருத்துவ குணங்களை உடையதாக இருப்பது இதன் சிறப்பு.

கருணைக்கிழங்கில் மருத்துவ குணமளிக்கும் முக்கிய கூறுகளான ஸ்டீராய்டுகள், பீனால்கள், அல்கலாய்டுகள், பிளேவனாய்டுகள் ஆகியவை உள்ளன. நிறையவே கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள், நார்சத்தும் அதிக அளவு உள்ளன. மேலும். பீட்டா-சிட்டோஸ்டீரால், லூபியோல், குர்சிட்டின், கால்லிக் அமிலம், ஸ்டிக்மாஸ்டீரால் போன்ற பல முக்கிய மருத்துவ செயல் வேதிக்கூறுகள் அடங்கியுள்ளது.

மேலும் இது அதிக அளவு துத்தநாகம், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் பி-6, கால்சியம், வைட்டமின்-ஏ மற்றும் சி, வைட்டமின் ஈ ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

உடல் செல்களுக்கு இன்றியமையாத தாது உப்புக்களான கால்சியம், இரும்பு, மெக்னீசியம், சோடியம், தாமிரம், மாங்கனீசு, செலினியம் போன்ற பலவற்றை கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கருணைக்கிழங்கு

கருணைக்கிழங்கில் உள்ள பல்வேறு வேதிப்பொருள்களால் வீக்கமுருக்கியாகவும், ரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைப்பதாகவும், சர்க்கரை அளவை குறைப்பதாகவும், மூல நோயில் வலி நிவாரணியாகவும், புற்று நோயை தடுப்பதாகவும், மலச்சிக்கலை போக்குவதாகவும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதாகவும், கல்லீரலை பாதுகாப்பதாகவும், ஆம்பிலியோன் எனும் ட்ரைடர்பெனாய்டு உள்ளதால் பல்வேறு கிருமிகளுக்கு எதிராக செயல்படுவதாகவும், புழுக்கொல்லியாகவும் செயல்படக் கூடியது.

சித்த மருத்துவத்தில் உள்ள கருணைக்கிழங்கு லேகியம் மூல வியாதிகளுக்கு மிக சிறப்பாக செயல்படும் தன்மை உடையது.

கருணைக்கிழங்கில் உள்ள குளூக்கோமனன் (Glucomannan) என்ற நீரில் கரையக்கூடிய இயற்கை பாலிசாக்கரைடு, உடல் எடை குறைவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

இது குடலில் அதிக அளவு திரவங்களை உறிஞ்சி, அங்கு சளியாக மாறுகிறது. செரிமானத்தின் போது, இந்த சளி உணவு உருண்டைகளுடன் (போலஸுடன்) ஒன்றிணைந்து, செரிக்க முடியாத மேலுறை ஒன்றை உருவாக்குகிறது.

இந்த மேலுறை நாம் உண்ட உணவு உருண்டைகளில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பு பொருள்களை தக்கவைத்து, அதன் வளர்சிதை மாற்றத்தைக் குறைக்கிறது.

மேலும் இந்த குளுகோமனன்,  வயிறு மற்றும் குடலில் உள்ள, செரிக்கப்பட்ட உடல் கழிவுகளை சேர்த்து, உறைந்து கெட்டியான தன்மையுள்ள பொருளாக மாற்றுகிறது. இந்த பொருள் பெரிஸ்டால்சிஸ் எனும் குடல் அசைவுகளை ஊக்குவித்து, இரைப்பை, குடல் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை தடை செய்து. உடல் எடையை குறைக்க உதவுகின்றது. வயிறு முழுக்க உணவு உண்ட திருப்தி உணர்வை அளிக்கிறது என்பது இன்னும் சிறப்பு.

உடல் பருமனை குறைக்க சவாலை மேற்கொள்ளும் பலரும், கருணைக்கிழங்கை மறவாமல் உணவில் சேர்க்க நல்ல பலன் கிட்டும், ஆரோக்கியம் கூடும். நீரிழிவு நோயாளிகளுக்கும் இந்த கிழங்கு ஏற்புடையது.  

ஆகவே, தினசரி கருணைக்கிழங்கை நாம் உணவில் சேர்த்துக்கொண்டால் நமது உடல் எடை குறைவதற்கான கருணையை நம் மீது கருணைக்கிழங்கு காட்டும். பல தொற்றா நோய்களுக்கும் பிரியா விடை கொடுக்கலாம்.

உடல் பருமன் என்ற தொற்றாநோய் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய மருத்துவ அச்சுறுத்தலாக உள்ளதால், நம் நாட்டு எளிய வைத்திய முறைகளை பின்பற்றி, உடல் பருமனை தவிர்த்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்.

இன்று (மார்ச் 4) உலக உடல் பருமன் விழிப்புணர்வு நாள்.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: drthillai.mdsiddha@gmail.com செல்லிடப்பேசி எண்: +91 8056040768

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com