சுகம் தரும் சித்த மருத்துவம்: பெண்களின் சோகத்தை போக்கும் ‘காகோளி’

திருமணத்திற்கு முன்னர் எவ்வாறு இருந்தாலும், திருமண காலத்திலும் அதற்கு பின்னரும் பெண்கள் அதிகம் யோசிப்பதே மாதவிடாய் பற்றி தான்.
அசோகு
அசோகு

அதென்ன பெண்களின் சோகம்? என்ற ஐயம் இந்த தலைப்பினை படிக்கும்போதே நிச்சயம் பலருக்கும் தோன்றும். பெண்களின் சோகம் என்றாலே, அது மாதவிடாய் பிரச்னைகள் தான்.

திருமணத்திற்கு முன்னர் எவ்வாறு இருந்தாலும், திருமண காலத்திலும் அதற்கு பின்னரும் பெண்கள் அதிகம் யோசிப்பதே மாதவிடாய் பற்றி தான். சரிவர மாதவிடாய் நிகழவில்லை அல்லது மாதவிடாய் சார்ந்த உடல் உபாதைகள் தான் அவர்களின் சோகமே. அதிலும் முக்கியமாக ‘பெரும்பாடு’ என்பது பற்றி சொல்லவே தேவையில்லை. அந்த வார்த்தையிலே அவர்களின் வருத்தம் புரியும்.

டாக்டர் மாத மாதம் பீரியட்ஸ் சரியான தேதிக்கு வருவதில்லை. அப்படி வந்தாலும் வார கணக்கில் அல்லது மாத கணக்கில் பீரியட்ஸ் ஆகிட்டே இருக்கு’ என்று வருத்தப்படும் பெண்களின் சோகம் தான் ‘பெரும்பாடு’ என்பது.

பெண்களுக்கு மாதவிடாயின் போது, அதிக உதிரப்போக்கு அதாவது பெரும்பாடு ஏற்பட பல்வேறு நோய் நிலைகள் காரணங்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பெரும்பாடு கருப்பையை மிகவும் பலவீனப்படுத்தும். இதனால் பின் நாள்களில் கருவுருவாகும் வாய்ப்பும் தள்ளிபோகக்கூடும். மேலும் அதிக உதிர போக்கினால் உடலில் இரத்தம், இரும்புசத்து குறைபாடு ஏற்பட்டு ‘அனீமியா’ எனும் ரத்த சோகையை ஏற்படுத்துவதும் பெண்களுக்கு ஒரு வகை சோகம் தான்.

அத்தகைய சோகத்தை போக்கி, சோகை நோய் வர விடாமல் தடுக்கும் சித்தமருத்துவ மூலிகைகளில் முக்கியமான ஒன்று தான் ‘காகோளி’ எனும் ‘அசோகு’.

‘அசோகு’ என்று சொன்னதும் பல பெண்களுக்கும் அதன் மருத்துவ குணம் பற்றி தெரிந்திருக்ககூடும். அதன் பெயர்க்காரணம் பற்றி கூறினால் தமிழ் மொழியின் சிறப்பு விளங்கும். இதை அ+ சோகு என பிரிக்கலாம். 'சோகு' என்றால் ‘சோகம்’ என்று பொருள். 'அ' என்றால் ‘இல்லை’ என்றும் ‘நீக்குவது’ என்றும் பொருள்படும்படி உள்ளது. மொத்தத்தில் சோகத்தை நீக்குவது, முக்கியமாக பெண்களின் சோகத்தை நீக்குவதால் அசோகு என்று பொருள்படும்படியாக உள்ளது மிகச்சிறப்பு.

அசோக மரம்: இந்திய புராணங்களில் முக்கிய பங்கு பெற்றுள்ளது. இந்தியா மற்றும் இலங்கைக்கு சொந்தமான அசோகு, ராமாயணத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே. சீதையின் சோகம் களைய அசோகவனத்தில் வைக்கப்பட்டதாகவும், அங்கு ‘கண்டேன் சீதையை’ என அனுமன் பார்த்தாகவும் நூல்கள் கூறுகின்றது. 

மேலும் புத்த மதத்தின் அடையாளமாக இருக்கும் கௌதம புத்தர் பிறந்ததும் அசோக மரத்தடியில் தான் என்று வரலாறு கூறுகின்றது. 2000 ஆண்டுகள் பழைய தமிழ் இலக்கியங்களில் அனங்கு (யக்ஷி) எனும் கருவுறுதல் தெய்வம் நின்றுக்கொண்டு காட்சி அளிப்பதும் அசோக மரத்தின் மேல் தான் என்று பல குறிப்புகள் உள்ளன. மொத்தத்தில் பெண்களின் கருப்பை நோய்களை நீக்கி அவர்களின் கருவுறுதலுக்கு பக்க பலமாக இருக்கும் மூலிகை ‘அசோகு’ என்பது இதன் மூலம் அறிய வருகின்றது.

சுவை: பார்ப்பதற்க்கு மிக அழகான, பசுமையான  மஞ்சள்-ஆரஞ்சு மலர்களால் மூடப்பட்டிருக்கும் மரம், அசோக மரம். பூக்களின் கொத்துகள் மிக அழகையும், இனிமையான நறுமணத்தைக் கொண்டுள்ளது என்பது இதன் சிறப்பு. துவர்ப்பு சுவையை முதன்மையாக கொண்ட அசோகப்பட்டை மிகுந்த மருத்துவ குணமுள்ளதாக உள்ளது. 

வேதிப்பொருள்கள்: அதில் கிளைகோசைடுகள், பிளவனாய்டுகள், டானின்கள், சபோனின்கள் மற்றும் ஸ்டீரால்கள் ஆகிய மருத்துவ தன்மையுள்ள வேதிப்பொருட்கள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

மருத்துவ பயன்கள்: பிளவனாய்டுகள் இருப்பதால் புற்றுநோய்களை தடுக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் செய்கையும், முக்கியமாக பெண்களுக்கு அதிகம் ஏற்படும் மார்பக புற்றுநோயை வரவிடாமல் தடுக்கும் திறனுடையதாக முதல் நிலை ஆய்வு தரவுகள் தெரிவிக்கின்றது.  

மேலும் ரத்தப்போக்கை அடக்கும் தன்மையும், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளுக்கு எதிராக செயல்படும் கிருமிக்கொல்லி தன்மையும், வீக்கமுருக்கி செய்கையும், ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் தன்மையும், கொழுப்பை குறைக்கும் தன்மையும் , முக்கியமாக கருப்பை மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளை பலப்படுத்தும் தன்மையும் உடையது இதன் சிறப்பு.

அசோகப்பட்டையானது மாதவிடாய் கோளாறுகள், மற்றும் பிற மகளிர் இனப்பெருக்க உறுப்பு சார்ந்த பிரச்னைகள், கருப்பை இரத்தப்போக்கு, இரத்தக்கசிவு, வெள்ளைப்படுதல், மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி, ரத்த மூலம் மற்றும் நீரிழிவு நோய், வயிற்று வலி போன்ற பல நோய் நிலைகளில் நல்ல பலனை தரும். மேலும் மூட்டு வலிகளை நீக்கும் தன்மையும் உடையது. 

துவரப்பி செய்கை உடையதாலும், பெண்களுக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் உண்டாகும் கருப்பை கட்டி நிலையிலும் கட்டியை சுருங்க செய்து உதிரபோக்கை கட்டுப்படுத்தும். பிசிஓஎஸ் எனும் சினைப்பை நீர்கட்டி நோய் நிலையிலும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜென் சுரப்பை கட்டுப்படுத்தி, மாதவிடாயை சீர்படுத்தும் தன்மையுடையது.  அசோகப்பட்டையை பாலில் இட்டு காய்ச்சி எடுத்துக்கொள்ள அதன் மருத்துவ குணங்கள் கிட்டும். இதன் பூவை பொடித்து நீரிழிவு நோய்க்கான மருத்துவத்தில் பயன்படுத்துவதும் சிறப்பு.

இந்த அளவுக்கு இதிகாசங்களில் இடம் பெற்ற அசோகு, நவீன உலகில் வசிக்கும் அனைத்து சீதைகளுக்கும் கூட அளப்பரிய வரப்பிரசாதம் தான். நமது முன்னோர்கள் நமக்கு தெரிவிக்க வேண்டிய கருத்துக்களையும், ஆரோக்கியத்தையும் எதோ ஒரு வகையில் நம்மை அடையும்படி செய்துள்ளனர். அதற்க்கு அசோகு மிகப்பெரிய உதாரணம். 

ஆக, நம் முன்னோர்கள் வகுத்த பாரம்பரியமான சித்த மருத்துவ வழி நின்று நடந்தால் பெண்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் ஆரோக்கியம் நிச்சயம். வாழ்க்கை வளப்படும்.


மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: drthillai.mdsiddha@gmail.com செல்லிடப்பேசி எண்: +91 8056040768

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com