சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘அசுவகந்தி’ தைராய்டு ஹார்மோன் சுரப்பை சீர் செய்யுமா?

மன அழுத்தத்தையும் குறைத்து, தைராய்டு சுரப்பி எனும் முக்கிய சுரப்பியின் சுரப்புகளை முறைப்படுத்துவதில் நல்ல பலனளிக்கும் வகையில் உள்ளது நம் நாட்டு ஜின்செங் ‘அமுக்கரா’.
அசுவகந்தி
அசுவகந்தி


இன்றைய நவீன வாழ்வியல் நெறிமுறைகளால், பாதிக்கப்படுவது உடல் மட்டுமல்ல மனமும் தான். காலை, மாலை, இரவு ஆகிய பொழுதுகளை தனித்தனியே வகுத்து எந்த எந்த காலங்களில் எதை செய்ய வேண்டும், எந்த பொழுதில் எந்த வகையான உணவை உண்ண வேண்டும்? என பதார்த்த குண சிந்தாமணி என்ற சித்த மருத்துவ நூல் சொல்லும் வழிமுறையும், இவற்றை வகுத்துக்கொடுத்த முன்னோர் மரபும் காணாமல் மறைந்துவிட்டது. எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நவீன மரபே ஆரோக்கியமான வாழ்வியலை கிட்டாக்கனியாக்கி உள்ளது. 

காலையில் சூரிய உதயத்திற்கு முன் தூக்கம் களைதலும், மாலையில் நிலவு உதித்ததும் உறங்க செல்வதும் தான் நல்லதொரு ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளம்.

மன அழுத்தம் மிகுந்த வாழ்வியல் நெறிமுறை தான் இன்றைய நவீன வாழ்வியல் நெறிமுறை. இரவுப்பணி என்பது அதைவிட இயற்கைக்கு மாறான ஹார்மோன் சீர்கேட்டை ஏற்படுத்தும் செயல். இன்றைய நவீன வாழ்வியலில் இரவுப்பணிக்கு செல்பவர்கள் பாடு திண்டாட்டம் தான். தூங்க வேண்டிய நேரம் என்று நம் சர்கேடியன் ரிதம் பழகிய செயலை மாற்றி அமைக்க முயல்வது இயல்பான உடலியங்கியலுக்கு எதிரானது. இதனால் மன அழுத்தத்தால் கார்டிசோல் எனும் ஹார்மோன் சுரப்பு அதிகமாகி இன்னும் பிற ஹார்மோன் சுரப்பையும் மாற்றி அமைக்கும் தன்மையுடையது. அதில் முக்கிய பங்களிப்பது தைராய்டு ஹார்மோன் சுரப்பு. 

நமது கழுத்தில் பட்டாம்பூச்சி வடிவில் குரல்வளையில் முன் இயற்கையாய் அமைந்து நம்மை பட்டாம்பூச்சி போல சிறகடித்து பறக்க செய்யும் பணியை செய்வதும் இந்த தைராய்டு சுரப்பி தான். இந்த தைராய்டு சுரப்பி சரிவர சுரக்காத நிலை ஏற்பட்டால் சிறகொடிந்த பட்டாம்பூச்சி போல சோர்ந்து விடுவோம் என்பது தான் உண்மை. 

ஏன் தைராய்டு எனும் சுரப்பிக்கு எத்தனை முக்கியத்துவம் என்று பார்த்தால், இந்த ஒரு சுரப்பி உடலில் உள்ள அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டிலும் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.

“டாக்டர் மாதம் மாதம் பீரியட்ஸ் சரியான தேதியில் வராமல் தள்ளிப்போகிறது. உடல் எடை கூடல், உடல் அசதி, சோம்பல்,  மலச்சிக்கல், தோல் வறட்சி, தசை வலி, குரல் கரகரப்பு சிலசமயங்களில் கழுத்தில் பின் புறம் வலி” என்ற மென்பொருள் துறையில் வேலை செய்து வருத்தப்படும் மகளிரும், இந்த மாதிரி குறிகுணங்கள் அனைத்தும் இரவுப்பணியில் என்னுடன் பணிபுரியும் தோழிக்கு உள்ளது, எனக்கும் வந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது என்று வருத்தப்படும் பலரும் இதற்கான இயற்கை தீர்வை தேடுகின்றனர். 

இரவுப்பணியில் பணிபுரியும் பெண்களுக்கு மட்டும் தான் இத்தகைய பிரச்சனையா? என்று பார்த்தால் நிச்சயம் இல்லை. ஆண்களுக்கும் தான். அவர்களுக்கும் உடல் அசதி, சோம்பல், உடல் எடை கூடுதல், மலச்சிக்கல் அத்துடன் ஆண் மலட்டு தன்மையும் ஏற்படும் அபாயம் உள்ளது என்பதும் வருத்தத்திற்குரியது. 

தைராய்டு சுரப்பு குறைந்தால் ஆயுள் முழுக்க மாத்திரை எடுத்துக்கொள்ள சொல்வார்கள் என்ற வருத்தமும் பலருக்கு உண்டு. சப் கிளினிக்கல் நிலையில் ஆயுள் முழுக்க மாத்திரை எடுக்காமல் இதற்கான தீர்வை தரும் மருத்துவமே இல்லையா? என்று கேட்கும் பலருக்கும் ஆரோக்கியத்தை அடைய, வரமாக கிடைத்துள்ள சித்த மருத்துவ மூலிகை தான் ‘அசுவகந்தி’ எனும் ‘அமுக்கரா கிழங்கு’. இதற்கு அஸ்வகந்தா, அமுக்குரவி, அமுக்கிரி, அசுவம், ஆசிவகம், இருளிச்செவி, வராககர்ணி இப்படி பல்வேறு பெயர்களும் உண்டு.

அமுக்கரா கிழங்கு கிட்டத்தட்ட ஆறு ஆயிரம் ஆண்டுகளாக பல்வேறு பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆசியா கண்டம் முழுவதிலும் அதிகம் பயன்படுத்தப்படும் மற்றொரு மூலிகை ஜின்செங். அமுக்கராவில் உள்ள ‘வித்தனோசைடு’ என்ற மூலக்கூறு  ஜின்செங்-கில் உள்ள முக்கிய செயல்படும் மூலக்கூறான ‘ஜின்செனோசைடு’  போன்று மருத்துவகுணம் அளிப்பதால் அமுக்கரா ‘இந்தியன் ஜின்செங்’ என்ற பெயர் பெற்றது. உலக அறிவியல் அரங்கில் அதிகப்படியான ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ள மூலிகையும் இது தான்.

அமுக்கரா கிழங்கில் உள்ள அல்கலாய்டுகளும், வித்தனோலைடுகள், விதாஃபெரின் போன்ற ஸ்டீராய்டால் லாக்டோன்களும், சப்போனின்களும் அதன் மருத்துவ செய்கைக்கு காரணமாக உள்ளன. இதில் வித்தாபெரின்-ஏ மற்றும் பி மிக முக்கிய பங்காற்றுகின்றன. அதிலும் வித்தாபெரின்-ஏ என்ற செயலி மூலக்கூறு அமுக்கராவின் இத்தகைய மருத்துவ குணங்களுக்கு பெரும்பங்காற்றுகிறது. 

இதன் காய் தக்காளியை போன்று தோலால் மூடப்பட்டு உள்ளே காய் இருக்கும். சிறுநீரை பெருக்கும் தன்மை இதற்குண்டு. இதன் இலை உடல் வெப்பத்தை தணிக்கும். இருப்பினும் அமுக்கரா மூலிகையின் கிழங்கு மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.  

அமுக்கரா கிழங்கில் உள்ள வேதிப்பொருட்கள் வீக்கமுருக்கியாகவும், இயற்கை வலி நிவாரணியாகவும், மன அமைதிப்படுத்தியாகவும், ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதாகவும், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதாகவும், நுண்ணுயிர்க்கொல்லியாகவும், இருதயம் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கவும், ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையுடையதால் புற்று நோயை தடுப்பது போன்ற பல்வேறு மருத்துவ குணங்களையும்  உடையது.

இரவுப்பணியில் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக சிறுநீரகத்தின் மேலிருக்கும் அட்ரீனல் சுரப்பிகளில் உற்பத்தி செய்யப்படும் கார்டிசோல் என்ற ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிக்கிறது. கார்டிசோல் நம் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து டிஎஸ்எச் (தைராய்டு தூண்டுதல் ஹார்மோன்) சுரப்பதைத் தடுக்கிறது, இது தைராய்டு சுரப்பியால் உற்பத்தி செய்யப்படும் முக்கிய ஹார்மோனான தைராக்ஸின் அளவை பாதிக்கக்கூடியது குறிப்பிடத்தக்கது. 

ஆக மன அழுத்தத்தையும் குறைத்து, தைராய்டு சுரப்பி எனும் முக்கிய சுரப்பியின் சுரப்புகளை முறைப்படுத்துவதில் நல்ல பலனளிக்கும் வகையில் உள்ளது நம் நாட்டு ஜின்செங் ‘அமுக்கரா’.

சித்த மருத்துவமும் அதன் மூலிகைகளின் நன்மைகளும், நவீன அறிவியலுக்கு அப்பாற்பட்டு சித்தர்களின் மெய்ஞ்ஞானத்தால் சொல்லப்பட்ட நமது பாரம்பரிய மருத்துவத்தின் அடையாளம். அதுவே நம் ஆரோக்கியத்திற்கு பக்கபலம். 

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு பாரம்பரியம் எவ்வாறு உள்ளதோ, அதைப்போன்றே பாரம்பரிய மருத்துவமும் உள்ளது. அந்த வகையில் நமது பாரம்பரியத்தை, மருத்துவத்தை பின் பற்றி வாழ்வது, வாழ்விற்கு சுகம் தரும்.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: drthillai.mdsiddha@gmail.com செல்லிடப்பேசி எண்: +91 8056040768

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com