சுகம் தரும் சித்த மருத்துவம்: நீரிழிவு நோயில் பாத எரிச்சலை ‘இலவங்கம்’ குறைக்குமா..?

நீரிழிவு நோயில் ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு தான் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அதன் பின் விளைவுகளில் இருந்து தப்பிப்பது என்பது சற்று கடினம் தான். அதாவது ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.
சுகம் தரும் சித்த மருத்துவம்: நீரிழிவு நோயில் பாத எரிச்சலை ‘இலவங்கம்’ குறைக்குமா..?

நீரிழிவு நோயில் ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு தான் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அதன் பின் விளைவுகளில் இருந்து தப்பிப்பது என்பது சற்று கடினம் தான். அதாவது ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்ற நிலை சற்று வருத்தம் தான். நல்ல உணவை சாப்பிடுவதை விட, அட்டைக்கணக்காய் மருந்துகளை சாப்பிடுவதையே இன்றைய நவீன உலகில் பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். 

அதில் முக்கிய இடம் பிடித்து யாரும் முந்தா நிலையில் முன்னிலையில் வகிப்பது, நீரிழிவு எனும் சர்க்கரை நோய்க்கான மருந்துகள் தான். சமீபத்திய அதிர்ச்சி தரும் தகவல் என்னவெனில், நீரிழிவு நோய்க்கான மருந்துகள் இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு தோராயமாக 125 பில்லியன் அளவுக்கு விற்பனை ஆகிறதாம். அப்படினா எவ்வளவு டாக்டர் என்று கேட்கிறீர்களா? 1 பில்லியன் என்றாலே 100 கோடியாம். அப்படியெனில் நீங்களே கணக்கு போட்டு கொள்ளுங்கள்.

அது சரி. இவ்வளவு மருந்துகள் எடுத்துக்கொண்டும் ஏன் பின்விளைவுகளை தவிர்க்க முடியவில்லை என்ற ஆதங்கம் அனைவருக்கும் உண்டு. இது ஒரு புறமிருக்க, முக்கிய பின் விளைவான ‘டயாபெடிக் நியூரோபதி’ எனும் நரம்பு தேய்மான நோய் நிலை நீரிழிவு நோயில் பலரை வாட்டி வதைப்பதில் முக்கிய இடம் பிடிக்கிறது.  ஏனெனில் ஆய்வுகளின் கூற்றுப்படி உலக அளவில் கிட்டத்தட்ட சர்க்கரை நோய்க்கு ஆளான 10 முதல் 50 சதவீதம் பேருக்கு இந்த நரம்பு பிரச்னை வருவதாக தெரிய வருகிறது. 

நீரிழிவு நோயில் பாத எரிச்சல் என்பது பலரை படாத பாடு படுத்தும். அதே போல கண்ணுக்கு தெரியாமல் உள்ளுக்குள் இருக்கும் முக்கிய உறுப்புகளுக்கான நரம்புகள் சேதம் அடைவதும் பல்வேறு நோய்குறிகளை உண்டாக்கும். அதில் முக்கியமாக நரம்பு தேய்மான நிலை மாரடைப்பு, இதய செயலிழப்பு ஆகிய இருதயம் சார்ந்த நோய்நிலைகளுக்கும் ஆதாரமாக அமைவது பலருக்கும் தெரியாது. எனவே கை கால் குத்தல் மற்றும் எரிச்சல் இவைகளை மட்டும் கருத்தில் கொண்டு மெத்தன போக்குடன் இருப்பது உயிருக்கே ஊறு விளைவிக்கும்.

“டாக்டர் எனக்கு பல மாதமாக கால்களில் எரிச்சல் அதிகமாக உள்ளது. எதோ எரிவது போன்ற உணர்ச்சி, ஆங்காங்கே குண்டூசியில் குத்துவது போன்ற உணர்வும் உள்ளது, இரவில் தூக்கமில்லை. சில சமயம் ஈரத்துணியை எரிச்சலுக்காக கால்களில் போட்டுக் கொள்வதும் உண்டு, இன்னும் சொல்லப்போனால் பல மாதங்கள் பல்வேறு மருந்துகள் எடுத்தும் எந்த பலனும் இல்லை, இதனால் மனதும் சரியில்லை” என்று மாற்றத்திற்காக, மனம் நொந்து, கால் எரிச்சலுடன், வாழ்வினை நகர்த்தும் நம்மவர்கள் பலரும் அணுக வேண்டியது சித்த மருத்துவத்தை தான். 

ஏனெனில் சித்த மருத்துவத்தின் சிறப்பு என்னவெனில் அதில் சொல்லப்பட்டுள்ள மூலிகைகள் சர்க்கரை அளவை மட்டும் குறைக்காமல் சர்க்கரை வியாதியினால் ரத்த குழாய்கள், நரம்புகள், உள்ளுறுப்புகள் பாதிக்கப்படாமல் காக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையும் உடையது என்பது தான். அத்தகைய சிறப்பு வாய்ந்த மருத்துவ குணமுள்ள எளிய மூலிகை கடைசரக்குகளுள் ஒன்று தான் ‘இலவங்கம்’ எனும் ‘கிராம்பு’.

நல்ல மணம் கொண்ட, காலம் காலமாக உணவில் அதிகம் நறுமணமூட்டியாக பயன்படுத்திவரும் எளிய மூலிகை கடைசரக்கு தான் இலவங்கம். வெறும் நறுமணமூட்டியாக பார்த்து பழகிவிட்டதாலோ என்னவோ அதன் மலைப்பான மருத்துவ குணங்கள் நமக்கு தெரியாமலே போய்விட்டது. அன்று முதல் இன்று வரை பல்வலிக்கு கிராம்பையோ, கிராம்பு தைலத்தையோ தான் நாம் பயன்படுத்தி வருகிறோம் என்பது பலரும் அறிந்தது. ஆனால், அதைக் கடந்து பலப்பல மருத்துவ குணங்கள் அடங்கியது கிராம்பு.

கிராம்பு எனும் இலவங்கமானது ஃபிளேவனாய்டுகள், ஹைட்ராக்ஸி பென்சோயிக் அமிலங்கள், ஹைட்ராக்ஸி சின்னமிக் அமிலங்கள் போன்ற பீனாலிக் சேர்மங்களின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக உள்ளது. 'யூஜெனால்' என்பது கிராம்பின் முக்கிய வேதிக்கூறு ஆகும். இதுவே அதன் பெரும்பாலான மருத்துவ குணத்திற்கு காரணமாக உள்ளது. 

கிராம்பில் உள்ள மற்ற பீனாலிக் அமிலங்கள் காஃபிக் அமிலம், ஃபெருலிக் அமிலம், எலாஜிக் அமிலம் மற்றும் சாலிசிலிக் அமிலங்கள் அதன் மருத்துவ குணத்திற்கு கூடுதல் வலிமை. கேம்ப்ஃபெரால், குர்செடின் மற்றும் அதன் வழித்தோன்றல்கள் போன்ற ஃபிளேவனாய்டுகளும் கிராம்பில் குறைந்த அளவில் காணப்படுகின்றன.

கிராம்பு பூ மொட்டுகளில் 18 சதவீதம் அத்தியாவசிய நறுமண எண்ணெய் உள்ளது. தோராயமாக, கிராம்பின் அத்தியாவசிய எண்ணெயில் மருத்துவ குணமிக்க 89 சதவீதம் யூஜெனால் மற்றும் 5 சதவீதம் முதல் 15 சதவீதம் யூஜெனால் அசிடேட் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

கிராம்பிற்கு நரம்பு சார்ந்த வலியை நீக்கும் தன்மை உண்டு என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்கு பாத எரிச்சல் வரக்காரணம் நீரிழிவு நோயால் நரம்புகளுக்கு செல்லும் சிறு சிறு ரத்தக்குழாய்கள் பாதிக்கப்பட்டு அதனால் உண்டாகும் நரம்புமுனைகளின் சேதாரம் தான். கிராம்பின் மகிமை என்னவெனில் மேற்கூறிய இரண்டையுமே போக்கும் தன்மை இதற்குண்டு என்பது சிறப்பு. வீக்கமுருக்கி தன்மையும் இருப்பதால் நரம்புகளின் அழற்சியை போக்கி நரம்புகளை வன்மைப்படுத்தவும் உதவும்.

கிராம்புடன், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய திரிதோடங்களை போக்கும் கடைசரக்குகளுடன், சர்க்கரை அளவை குறைக்கும் தன்மையுடைய லவங்கப்பட்டை சேர்த்து பொடியாக்கி தேநீரில் கலந்து எடுத்துக்கொள்ள பாத எரிச்சல் மற்றும் குத்தலில் பலனை தரும். அல்லது சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்ட கிராம்பு சூரணம் அல்லது லவங்காதி சூரணம் ஆகிய மருந்துகளை பயன்படுத்தினாலும்  நலன் பலன் தரும். 

உலக சுகாதார நிறுவனம் கிராம்பு அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் ஒவ்வாமை போன்ற பக்க விளைவுகள் உண்டாகும் என எச்சரிக்கிறது. ஒரு கிலோகிராம் உடல் எடைக்கு 25 மில்லிகிராம் அளவு எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவுறுத்துகிறது. ஆகவே அந்த அளவுப்படி மருத்துவ ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ள பக்க விளைவுகள் இன்றி நன்மை பயக்கும்.

கிராம்பினை போன்ற இன்னும் எத்தனையோ சித்த மருத்துவ கடைசரக்குகள் பாட்டி வைத்தியமாய் இத்தனை ஆண்டுகாலம் நமக்கு தெரியாமலே நம்மை காத்து வந்துள்ளது என்பது தான் உண்மை. அவற்றை முறையாக மருத்துவ அறிவியலோடு பயன்படுத்தத் தொடங்கினால் தீர்க்க முடியாத பல உடல் உபாதைகளுக்கு எளிய முறையில் வழிவகை கண்டு, நீடித்த ஆரோக்கியத்துடன் வாழமுடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com