சுகம் தரும் சித்த மருத்துவம்: உயிரணுக்கள் உற்பத்தியை அதிகரிக்குமா ‘நிதகம்’..?

கடந்த 13 ஆண்டுகளில் இந்தியர்களின் விந்தணுக்களின் தரமும் கணிசமாக குறைந்துள்ளதாக அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுகம் தரும் சித்த மருத்துவம்: உயிரணுக்கள் உற்பத்தியை அதிகரிக்குமா ‘நிதகம்’..?

இன்றைய நவீன வாழ்வியலில் ஆண்களும் பல்வேறு உடல் உபாதைகளில் சிக்குண்டு தவிக்கின்றனர். அத்தகைய உபாதைகள் ஆண்களுக்கும் மணிக்கணக்கில் மன உளைச்சலை ஏற்படுத்துவது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அதில் முக்கியமாக மாறிவிட்ட உணவு முறைகள், மது, புகை போன்ற பழக்க வழக்கங்கள், இரவுப்பணி, மன அழுத்தம், அதிகம் பயன்படுத்தும் மின்னணு சாதனங்கள், மாறிப்போன வாழ்வியல் நெறிமுறைகள், போன்றவை ஆண்களின் உயிரணுக்கள் உற்பத்தியை பாதிக்கக்கூடியதாக உள்ளன. கடந்த 13 ஆண்டுகளில் இந்தியர்களின் விந்தணுக்களின் தரமும் கணிசமாக குறைந்துள்ளதாக அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணமான முதல் ஆண்டு கருத்தரிப்பு நிகழவில்லையெனில் நம் சமூகம் காலம் காலமாக அதிகம் சாடுவது பெண்ணினத்தைத் தான். ஆனால், உண்மையில் தாமதமாகும் கருத்தரிப்புக்கு அதாவது குழந்தைப்பேறின்மைக்கு காரணம் சரிபங்கு ஆண்களையும் சாரும். உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி ‘இன்பெர்டிலிட்டி’ எனும் மலட்டுத்தன்மைக்கு காரணம் பெண்களுக்கு நிகராக ஆண்களும் உள்ளனர். கிட்டத்தட்ட 40 சதவீதம் ஆண்களும் காரணமாக உள்ளதை பல ஆய்வுகள் ஆணித்தரமாக தெரிவிக்கின்றன.

‘பருவத்தே பயிர் செய்’ என்பது வழக்கு மொழி. இது வெறும் வழக்கு மொழி மட்டுமல்ல, இதில் நமது வாழ்வியல் நெறிமுறையும் அடங்கியுள்ளது. ஏனெனில் வயது மூப்பும் உயிரணுக்கள் உற்பத்தியை குறைப்பதாக உள்ளது. இதனால் அடுத்த சந்ததியை உருவாக்கும் திறனும், தன்மையும் குறைந்து விடுகிறது. நாம் இப்பூவுலகில் பிறந்த படைப்பின் நோக்கம் அடுத்த சந்ததியை உருவாக்குவதற்கே என்கிறது சித்த மருத்துவம். 

அத்தகைய படைப்பு உருவாக்குவதற்கு சரிபங்கு கொண்ட ஆண்களின் உயிரணுக்கள் இன்றைய தலைமுறையினர்க்கு வலுவாக இல்லை என்பது வருத்தம் தரும் ஒன்று. ஏனெனில் அதிகரித்த செயற்கை கருத்தரிப்பு மையங்களும், உயிரணுக்கள் தானமும், ஐயூஐ போன்ற கருத்தரிப்பு முறைகளும் அதிகமானதில் இருந்தே இது அறியக்கிடக்கின்றது. "அந்த காலத்தில் எனது தாத்தாவுக்கு பத்து பசங்களாம்" என்று கூறி ஆச்சர்யப்படும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் ஒரு பிள்ளைக்கே உயிரணுக்கள் சேகரிப்பு செய்து பரிசோதனைக் கூடத்தையும்,கருத்தரிப்பு மையங்களையும் தேடி திரிய வேண்டிய அவலநிலை அதிகரித்துள்ளது என்பது வருத்தம் தான்.

“டாக்டர் எனக்கு உயிரணுக்கள் குறைவாக உள்ளதாம், அதனால உயிரணுக்களை டோனார் கிட்ட வாங்கிக்க சொல்லி இருக்காங்க, என் தலைமுறையை நானே உருவாக்க முடியாதா?” என்று மனம் துயரப்பட்டு உள்ளவர்கள் தீர்வு தேடி அணுக வேண்டியது சித்த மருத்துவத்தை தான்.

பாரம்பரிய உணவுகளும், மருந்துகளும் உயிரணுக்கள் உற்பத்தியை மில்லியன் கணக்கில் அதிகரிக்க செய்யும் இயற்கை மந்திரங்கள். சித்த மருத்துவமானது உயிரணுக்கள் எனும் ஏழாவது தாதுக்களை உற்பத்தி செய்ய பல்வேறு மூலிகைகளை வரிசையாய் வகைப்படுத்தி கூறியுள்ளது  சிறப்பு. அதில் மகத்துவம் மிக்க ஒற்றை மூலிகை தான் ’நிதகம்’ எனும் ‘நீர்முள்ளி’.

நீர்முள்ளி

பரந்த வயல் வெளிகளில் கேட்பாரற்று தானாகவே வளர்ந்து கிடக்கும் முள்செடி போன்ற நீர்முள்ளியின் விதைக்கு உயிரணுக்களை அதிகரிக்கும் தன்மை உண்டு என்கிறது சித்த மருத்துவமும், சில நவீன ஆய்வுகளும். இதனை “விந்துவுமாம் தாதுவுமாம் மேகரோகம் தொலையும்” என்கிற அகத்தியர் குணவாகடப் பாடல் வரிகளால் அறியலாம். 

உயிரணு தாதுக்கள் அதிக வெப்பநிலையில் சிதைந்து விடுவதாக நவீன அறிவியல் கூறுகின்றது. அதற்காக உடலினை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியம். நீர்முள்ளியானது உடல் வெப்பத்தைக் குறைத்து, உடலுக்கு குளிர்ச்சி தந்து விந்தணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும். நிதகம் என்ற பெயர்காரணத்தாலே இதனை அறியலாம். ‘நி’ என்றால் நீக்குவது. ‘தகம்’ என்றால் வெப்பத்தன்மை. அதாவது உடலின் வெப்பத்தன்மை நீக்கி குளிர்ச்சி தரக்கூடியது என்பது பொருள்படும்படி உள்ளது குறிப்பிடத்தக்கது.

நீர்முள்ளியில் பைட்டோஸ்டீரால்கள், கொழுப்பு அமிலங்கள், தாதுக்கள், பாலிபினால்கள், புரோஆந்தோசயனின்கள், அல்கலாய்டுகள், என்சைம்கள், அமினோ அமிலங்கள், கார்போஹைட்ரேட்டுகள், ஃபிளாவனாய்டுகள், டெர்பீனாய்டுகள், வைட்டமின்கள் மற்றும் கிளைகோசைடுகள் போன்ற எண்ணற்ற மருத்துவ குணம் வாய்ந்த வேதி மூலக்கூறுகள் உள்ளன.

லூபியோல், ஸ்டிக்மாஸ்டீரால், பீட்டுலின், பீட்டா ஸ்டிக்மாஸ்டீரால் ஆகியன மிக முக்கிய வேதிப்பொருளாக உள்ளன.  கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், மாங்கனீசு, கோபால்ட் மற்றும் குரோமியம் போன்ற தாதுக்களும் நீர்முள்ளி தாவரத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளன.

மேலும், நீர்முள்ளிக்கு கட்டிகளை கரைக்கும் தன்மையும், வீக்கமுருக்கி தன்மையும், உடல் வெப்பத்தை தணிக்கும் தன்மையும், கல்லீரலை பாதுகாப்பதாகவும், ரத்தசோகையை போக்கும் தன்மையும், சிறுநீர்பெருக்கி தன்மையும்,கிருமிக்கொல்லி தன்மையும், பிளவனாய்டுகள் இருப்பதால் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையும் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த நீர்முள்ளியானது பாரம்பரியமாக சித்த மருத்துவத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. இது வீக்கம் சார்ந்த நோய்கள், சிறுநீர்ப்பை நோய்கள், சிறுநீரகக் கல், சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல் ஆகிய நோய்நிலைகளில் நல்ல பலன் தருவதாக உள்ளது.

சித்த மருத்துவத்தில்  சொல்லப்பட்டுள்ள நீர்முள்ளி குடிநீர் வீக்கங்களை குறைத்து நல்ல பலன் தரும். ஆனால் நீர்முள்ளி விதைக்கே உயிரணுக்களை அதிகரித்து ஆண்மையை பெருக்கும் தன்மையுடையதால், இதனை நெருஞ்சில், நிலப்பனை போன்ற பிற ஆண்மைபெருக்கி மூலிகைகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்ள நல்ல பலன் தரும். உயிரணுக்கள் உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு ஊட்டத்தை தரும். 

நீர்முள்ளி போன்ற பல மூலிகைகள் இன்றைய தலைமுறை இளைஞர்கள் தனது அடுத்த சந்ததியை உருவாக்க எளிய வகையில் பயன்தருவதாக உள்ளன. அதனைப் புரிந்து கொண்டு அவர்கள் செயல்பட்டால் குழந்தைப்பேற்றுக்கு உயிரணுக்கள் தானத்தை நாடி, கருத்தரிப்பு மையங்களின் வாசலைத் தேடி செல்லாமல், சித்த மருத்துவம் கூறும் ஏழு உடல் தாதுக்களையும் அவரவர் வீட்டு வாசலிலே உருவாக்கிட முடியும். அவர்களுக்கு மட்டுமின்றி, சித்த மருத்துவம் ஆரோக்கியமான அடுத்த சந்ததிக்கும் அடித்தளமிடும்.

மருத்துவரின் ஆலோசனை மற்றும் தொடர்புக்கு...+91 8056040768 இ-மெயில்– drthillai.mdsiddha@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com