ஆவாரைப் பூ
ஆவாரைப் பூ

சுகம் தரும் சித்த மருத்துவம்: இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து ஆயுளைக் கூட்டும் ‘மேகாரி’..?

இன்றைய நவீன வாழ்வியல் நெறிமுறைகளால் சர்க்கரை வியாதி என்பதும் பொதுவாகிவிட்டது.

இப்பூவுலகில் பிறந்த அனைத்து உயிர்களும் ஒருநாள் இறப்பு எய்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இறப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது. ஆனால், நவீன அறிவியல் அசுர வளர்ச்சி பெற்றபின் மனிதனின் சராசரி ஆயுள்காலம் என்பது அதிகமாகிவிட்டது. இது ஒருபுறமிருக்க, மாறாக தற்போதைய காலகட்டத்தில் இளம் வயது மரணங்கள் அதிகமாகிவிட்ட அவலநிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்திய ஆய்வுகளின் படி இந்தியாவில் 60 சதவீத இறப்புகள் தொற்றா நோய்நிலையால் உண்டாவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதிலும் முதன்மை இடத்தை பிடிப்பது சர்க்கரை வியாதி எனும் ‘நீரிழிவு நோய்’ தான்.

எப்படி இறப்பு என்பது பொதுவானதோ, அதேபோன்று இன்றைய நவீன வாழ்வியல் நெறிமுறைகளால் சர்க்கரை வியாதி என்பதும் பொதுவாகிவிட்டது. ஜெனிடிக் எனப்படும் தாய் தந்தையர் மூலமாக, உணவு பழக்கவழக்கத்தால், உடல்பயிற்சி இன்மையால் என்று பல்வேறு காரணங்களால் பண்டையகாலத்தில் அன்கொன்றும் இன்கொன்றுமாக இருந்த நீரிழிவு நோய், தற்போது ஆலமரமாய் இருந்த அனைவரின் ஆரோக்கியத்தையும் வேரோடு பிடிங்கி தள்ளிவிட்டது என்று சொன்னால் மிகையாகாது. 

ஏதேனும் ஒரு உடல் உபாதைக்காக மருத்துவரை அணுகினால் முதலில் அவர் எழுப்பும் கேள்வி 'உங்களுக்கு சுகர் (சர்க்கரை வியாதி) இருக்கா?" என்பது தான். ஆமாம் என்று கூறிவிட்டால், அதனால் தான் இந்த உபாதைகள் என்று மருத்துவர் எளிமையாக பதிலை முடித்துக்கொள்வதும் வாடிக்கையாகிவிட்டது. அந்த அளவுக்கு எல்லா நோய்களுக்கும் அடித்தளம் போடும் முதன்மை நோயாக விளங்குவது ‘தொற்றா நோய்களின் அரசன்’ இந்த ‘நீரிழிவு நோய்’ தான்.

மதுமேகம் என்று சித்த மருத்துவத்தால் பல நூறு ஆண்டுகளாக சிகிச்சை அளிக்கப்பட்ட நோய்நிலை இன்று நாம் அஞ்சும் 'டயாபடீஸ்' எனும் நீரிழிவு நோய். சித்த மருத்துவத்தில் வாதம், பித்தம், கபம் இவைகளைப் பொறுத்து இந்நோய் 20 வகைகளாக பிரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த மேக நோயை விரட்டும் தன்மைக் கொண்ட மூலிகைகள் பல சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டு இருப்பினும் சிறப்பு மிக்க மூலிகையாக விளங்குவது இந்த ‘மேகாரி’ தான். 

என்னவெனில், இந்த தாவரத்தின் அனைத்து பகுதிகளுமே நீரிழிவு நோயில் பயன்படும்படி உள்ளது, வேறு எந்த மூலிகையிலும் இல்லாத சிறப்பு. நமக்கு அதிகம் பரிட்சயமான, பயன்படுத்த மறந்த மூலிகை தான் இந்த ‘மேகாரி’ எனும் ‘ஆவாரை’. மேகநோயான சர்க்கரை நோய்க்கு பயன்படும் மூலிகை என்பதால் மேகாரி என்று பொருள்படும்படி பெயரிடப்பட்டுள்ளது.

'ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ' என்ற பழமொழியை அறிந்திருக்கும் பலரும் இதை பயன்படுத்துவதில்லை. எளிமையாக கண்ணைக் கவரும் மஞ்சள் நிறப்பூக்களை கொண்ட மூலிகைத் தாவரம் ஆவாரை. இதன் பூவானது எவ்வாறு தங்கம் போல் காணப்படுகிறதோ, இதனை மருந்தாக்கி உண்பவர்கள் உடலையும் தங்கம் போல் ஜொலிக்கச்செய்யும் தன்மையுடையது. அதனால் இம்மூலிகைக்கு ‘ஏமபுட்பி’ என்ற பெயரும் உண்டு. ஏமம் என்றால் தங்கம், புட்பி-பூ. ‘தங்கப்பூ’ மூலிகை.

ஆவாரை ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் தன்மையும், கொழுப்பின் அளவைக் குறைக்கும் தன்மையும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மையும், வீக்கமுருக்கி தன்மையும், கல்லீரலைப் பாதுகாப்பாகவும், இருதயத்தை பாதுகாப்பதாகவும், சிறுநீரகத்தை பாதுகாப்பதாகவும், ரத்தக்குழாயில் கொழுப்பு அடைப்பை தடுப்பதாகவும், உடல் வெப்பத்தை தணித்து குளிர்ச்சி அளிப்பதாகவும், வயிற்றுப்புண்ணை ஆற்றுவதாகவும், புற்றுநோயை தடுப்பதாகவும் உள்ளது. மேலும் ஆவாரைப்பூவின் மஞ்சள் நிறத்திற்கு காரணமாக பிளவனாய்டு நிறமிகள் இருப்பதால் செல்கள் மற்றும் மரபணுவின் சிதைவைத் தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையும் இதற்குண்டு.  

துவர்ப்பு சுவையைக் கொண்ட ஆவாரைப்பூவில் சப்போனின்கள், டேனின்கள், பீனோலிக் வேதிப்பொருட்கள், ஆந்த்ரோகுயினோன், க்ளைக்கோசைடுகள், இயற்கை நிறமிகள் போன்ற பல வேதிமூலக்கூறுகள் அதன் மருத்துவக்குணத்திற்கு காரணமாக உள்ளது. இவை நம் உடலில் சர்க்கரையின் வளர்ச்சிதை மாற்றத்தில் தொடர்புடைய ஆல்பா-க்ளுகோஸிடஸ் மற்றும் ஆல்பா-அமைலேஸ் ஆகிய நொதிகளின் செயல்பாட்டைத் தடுத்து ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது.

ஆவாரையானது கேம்ப்ஃபெரால் மற்றும் குர்செடின் போன்ற பிளாவனாய்டுகளின் சிறந்த மூலபொருளாக உள்ளது. கேம்ப்ஃபெரோல் என்பது ஆல்பா-குளுக்கோசிடேஸ் எனும் நொதியினை தடுக்கும் ஒரு சக்திவாய்ந்த வேதி மூலக்கூறாக உள்ளது என்று பல ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆவாரை இதன் செயல்பாட்டை தடுத்து நீரிழிவு நோயாளிகளுக்கு நலம் பயக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.

ஆவாரையின் இலை, பூ, பட்டை, காய், வேர் ஆகிய அனைத்து பகுதிகளும் நீரிழிவு நோயில் நல்ல பலன் தரும் விதத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவை ஐந்தும் கலந்த ஒற்றை மருந்தாக உள்ளது தான் ‘ஆவாரை பஞ்சாங்க சூரணம்’ எனும் சித்த மருந்து. அதே போல், ஆவாரை குடிநீர் எனும் சித்த மருந்தும் நீரிழிவு நோயில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சிறந்த பலன் தருவதாக உள்ளது.

ஆவாரை, கொன்றை, நாவல், கடலழிஞ்சில், கோரைக்கிழங்கு, கோஷ்டம், மருதம்பட்டை ஆகிய மூலிகைகளை உள்ளடக்கிய நீரிழிவு நோய்க்கான ‘ஆவாரைக் குடிநீர்’ எனும் சித்த மருந்து பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தேரையர் சித்தரால் தமிழ் பேசும் மக்களுக்கு நலக்கொடையாக வழங்கப்பட்டுள்ளது அறியப்படுகின்றது. 

சர்க்கரை அளவைக் குறைக்க போராடும் பலரும் எளிமையாக ஆவாரைப்பூ, லவங்கப்பட்டை, சீரகம், வெந்தயம் இவற்றைப் பொடித்து தேநீராக்கி பயன்படுத்த சர்க்கரை அளவு குறைவதோடு சர்க்கரை நோயின் பின்விளைவுகள் தடுக்கப்படும் அல்லது ஆவாரைக் குடிநீர் எனும் சித்த மருந்தினை பயன்படுத்தலாம். அதில் சேரும் அனைத்து மூலிகைகளும் சர்க்கரை அளவைக் குறைத்து உடலுக்கு ஆரோக்கியம் தரும். உடல் உள்ளுறுப்புகளைக் காக்கும். ஆயுள்காலத்தைக் கூட்டும்.

எங்கே நாம் பயன்படுத்த மறந்து விடுவோம் என்ற கணிப்பில், மூலிகைகளின் பெயரைக் கூட மருத்துவ பயன் அடிப்படையில் மேகாரி என்று வைத்து தமிழ் சமுதாயத்துக்கான ஆரோக்கிய வேர்களை புதைத்து விட்டு சென்றுள்ளனர் நம் முன்னோர்கள். அத்தகைய மூலிகை புதையல்களை நம் நாட்டினர் பயன்படுத்த தொடங்கினால் போதும், சர்க்கரை வியாதியின் தலைநகரம் என்ற பட்டப்பெயரை தூக்கி எறிந்து, உலகிற்கே ஆரோக்கியத்தை நாம் அள்ளித்தர முடியும். சித்த நமது சித்த மருத்துவம் நிச்சயம் புதையல் தான்.

மருத்துவரின் ஆலோசனை மற்றும் தொடர்புக்கு : +91 8056040768 இ-மெயில்– drthillai.mdsiddha@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com