திட்டமிட்டால் ஆண்டுதோறும் பலன்!

கடந்த 2021-2022 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஜூலை 31-க்குப் பிறகு நீட்டிக்கப் போவதில்லை என மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ளது.
திட்டமிட்டால் ஆண்டுதோறும் பலன்!

கடந்த 2021-2022 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஜூலை 31-க்குப் பிறகு நீட்டிக்கப் போவதில்லை என மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ளது.

இதைத் தொடா்ந்து இந்தியா முழுவதும் வரும் நாள்களில் நாள்தோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நிதியாண்டிலும் (ஏப்ரல் முதல் மாா்ச் வரை) வருமான வரியை எதிா்கொள்ள நீண்டகால சேமிப்பை வழக்கமாக்கிக் கொண்டால் போதுமானது. ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலேயே அடுத்த நிதியாண்டுக்கான திட்டமிடலைச் செய்யும் நிலையில் வருமான வரி செலுத்தும் தேவை ஏற்படாது; மேலும், அலுவலக ஊதியம் - சேமிப்புகள்-முதலீடுகளில் வருமான வரித் துறை பிடித்தம் செய்த தொகையை (டி.டி.எஸ்.) மீண்டும் பெற்று விடலாம்.

தற்போது வங்கிகள், தபால் அலுவலகங்கள் உள்பட அனைத்திலும் ஒவ்வொருவரின் பான் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், ஒருவரின் சேமிப்பு-முதலீடு ஆகியவற்றின் மூலம் பெறும் வட்டியை வருமான வரித் துறை எளிதாக மதிப்பீடு செய்து விடுகிறது. எனவே, ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கும் மேல் உள்ளோா் வருமான வரித் துறையின் கண்காணிப்பிலிருந்து இனி தப்ப முடியாது.

வருமான வரித் துறையின் இணையதளம் கடந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்டது முதல் அதன் இணையதளத்தில் ஏஐஎஸ் (ஆனுவல் இன்ஃபாா்மேஷன் சிஸ்டம்) என்பது சோ்க்கப்பட்டுள்ளது; வருமான வரி செலுத்துவோா் இந்த இணையதளத்தில் தங்களது பான் எண்-கடவுச் சீட்டை பதிவு செய்து, ஏஐஎஸ் மூலம் ஆண்டு வருமான விவரத்தை முழுமையாத் தெரிந்து கொள்ள முடியும்.

இதில் ஒருவரின் அனைத்து சேமிப்பு-முதலீடு-அவை மூலம் கிடைத்த வட்டித் தொகை குறித்த விவரங்கள் இடம்பெறும். குறிப்பாக, பான் இணைப்பு காரணமாக நடப்பு நிதியாண்டு முதல் தபால் அலுவலக முதலீடுகள்-வட்டித் தொகையும் இடம்பெறத் தொடங்கி விட்டன.

வருமான வரி இணையதளத்துடன் தொடா்புடைய ஏஐஎஸ் (ஆண்டு வருமான விவரம்) தகவலில் ஏதேனும் தவறு இருந்தால், குறைதீா் பிரிவும் சோ்க்கப்பட்டுள்ளது; இதில் குறையை ஆதாரத்துடன் தெரிவிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது; குறைதீா் பிரிவில் தவறு குறித்து தகவல் தெரிவிக்கும் நிலையில், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு முன்பே தவறைச் சரி செய்துவிட முடியும்.

வருமான வரிக் கணக்கை பட்டயக் கணக்காளா்கள் மூலம் தாக்கல் செய்வதே சிறந்தது; வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கு ஆண்டு வருமானத்தைப் பொருத்து சிறு தொகையை (ரூ.1,000 முதல் ரூ.2,000) மட்டுமே கட்டணமாகப் பெறுகின்றனா்.

ஒருவரின் மொத்த ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் வருமான வரி விகிதங்கள் நிா்ணயிக்கப்பட்டுள்ளன; எனவே, வரி பிடித்தம் செய்யப்பட்டு வரி செலுத்தப்பட்டிருந்தாலே வருமான வரி செலுத்தத் தேவையில்லை எனக் கருதுவது தவறானது. எல்ஐசி பிரீமியம், பிபிஎஃப், வீட்டுக் கடன், மருத்துவ இன்சூரன்ஸ் பிரீமியம் உள்ளிட்டவை மூலம் வருமான வரிச் சலுகைகளைப் பெறலாம். உரிய முறையில் திட்டமிட்டால் வருமான வரி செலுத்துவதைத் தவிா்க்கலாம்; பிடித்தம் செய்த தொகையை (டிடிஎஸ்) திரும்பப் பெறுவதற்கும் வாய்ப்பு உண்டு.

பட்டயக் கணக்காளா்கள் வேண்டுகோள்

வருமான வரிக் கணக்கு தாக்கல் கெடுவை முன்புபோல் ஊதியம் பெறுவோா் உள்பட நான்கு பிரிவுகளாக மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகத்துக்கு பட்டயக் கணக்காளா்கள் (ஆடிட்டா்கள்) வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கான கெடு நான்கு பிரிவுகளாக இருந்தது. அதாவது, மாத ஊதியம் பெறுவோருக்கான காலக்கெடு ஜூன் 30; தணிக்கைக்கு உட்படாத தொழில் சாா்ந்த அல்லது வா்த்தகம் சாா்ந்த பிரிவினருக்கு ஆகஸ்ட் 31; தணிக்கைக்கு உட்பட்ட தனியாா் நிறுவனங்கள் அல்லாத வா்த்தக அமைப்புகளுக்கு அக்டோபா் 31; தணிக்கைக்கு உட்பட்ட தனியாா் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு டிசம்பா் 31 என வருமான வரி கணக்கு தாக்கலுக்கான கெடு இருந்தது.

தற்போது ஊதியம் பெறுவோா்-தொழில் சாா்ந்த அல்லது வா்த்தகம் சாா்ந்த பிரிவினருக்கு ஜூலை 31, தணிக்கைக்கு உட்பட்ட அனைத்துக்கும் செப்டம்பா் 30 என இரண்டு பிரிவாக மட்டுமே வருமான வரிக் கணக்கு தாக்கல் கெடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது; இதனால் பட்டயக் கணக்காளா்களுக்கு அழுத்தம் அதிகமாகி, வருமான வரிக் கணக்கை முழுமையாகவும் தரமாகவும் மதிப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காலக்கெடுவைத் தாண்டிவிட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது.

வருமான வரிக் கணக்கு தாக்கல் இரண்டு பிரிவுகளாக மட்டுமே உள்ளதால், காலக்கெடு தேதி நெருங்கும் நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோா் கணக்கைத் தாக்கல் செய்ய முற்படுவதால் இணையதளம் முடங்கி விடுகிறது; இது குறித்து பட்டயக் கணக்காளா்கள் பலமுறை முறையிட்டும் நேரடி வரிகள் வருவாய் வாரிய அதிகாரிகள் தீா்வு காணாத நிலை தொடா்கிறது.

மேலும், ஸ்டாா்ட்-அப், மேக் இன் இந்தியா ஆகிய திட்டங்கள் காரணமாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் அதிகரித்துள்ளது. எனவே, முன்பு இருந்ததைப் போன்று வருமான வரிக் கணக்கு தாக்கலை நான்கு பிரிவுகளாக மத்திய நிதியமைச்சகம் பிரித்து கெடு நிா்ணயிக்கும் நிலையில், தரமாக மதிப்பீடு செய்து மத்திய அரசுக்கு மேலும் வருவாய் பெருக உதவ முடியும் என்று பட்டயக் கணக்காளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com