சரத் பவார் போட்டியில்லை; மோதப் போவது யார் யார்? குடியரசுத் தேர்தல் களத்தில்...

சரத் பவார் போட்டியிடப் போவதில்லை  என்று அறிவித்த நிலையில் போட்டியிடப் போவது யார், யார்?
சரத் பவார் போட்டியில்லை; மோதப் போவது யார் யார்? குடியரசுத் தேர்தல் களத்தில்...
சரத் பவார் போட்டியில்லை; மோதப் போவது யார் யார்? குடியரசுத் தேர்தல் களத்தில்...

நான் போட்டியில் இல்லை, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள்  அணியின் சார்பில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவித்துவிட்டார்.

தொடக்க நிலையிலேயே பவார் மறுத்துவிட்ட நிலையில், எதிரணியின்  சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர் யார் என்பது  பற்றி உறுதியாக எதுவும் தெரியவில்லை.

'குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதை பவார் விரும்ப மாட்டார். மக்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்புபவர் அவர், குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் முடக்கப்படுவதை ஒருபோதும் விரும்ப மாட்டார்' என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே, தேர்தல் அறிவிப்பு வெளிவந்தவுடனேயே கடந்த வாரம் சரத் பவாரை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சந்தித்துப் பேசினார். சரத் பவாரை நிறுத்துவது தொடர்பாக திரிணமுல் காங்கிரஸுடனும் பேசியிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

பவார் போட்டியிட ஆதரவாக மகாராஷ்டிர மாநில காங்கிரஸும் கருத்துத் தெரிவித்திருந்தது. இதனிடையே, ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் சிங்கும் சரத் பவாரைச் சந்தித்துப் பேசினார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடனும் நல்ல உறவு இருக்கும்  நிலையில் சரத் பவார் போட்டியிடும் வாய்ப்பு பற்றிப் பேசப்பட்ட நிலையில், தொடக்க நிலையிலேயே தாம் போட்டியிடப் போவதில்லை எனத் தங்கள் கட்சிக் கூட்டத்தில் அறிவித்திருக்கிறார் பவார்.

இதனிடையே, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், ஆசாத்தை வேட்பாளராக நிறுத்துவதை காங்கிரஸ்  ஒப்புக்கொள்ளுமா என்பது பற்றித் தெரியவில்லை.  ஏனெனில், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசு வழங்கிய பத்மபூஷண் விருதினைப் பெற்றுக்கொண்டவர் இவர். இதைப் பெரும்பாலான காங்கிரஸார் ரசிக்கவில்லை.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அல்லது பிஜு ஜனதாதளம் ஆதரித்தாலே தேசிய ஜனநாயகக் கூட்டணி எளிதில் வெற்றி பெற்றுவிடும் வாய்ப்பு இருக்கிறது.  இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து வேட்பாளரை நிறுத்துவார்களா என்பதே இன்னமும் உறுதியாகத் தெரியவில்லை.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒருபக்கமும் திரிணமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியும் ஒருபக்கமும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்குத் தனித்தனியே அழைப்பு விடுத்துள்ளனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்பது பற்றியும் எதுவும் தெரியவில்லை.

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மீண்டும்  நிறுத்தப்படுவாரா? வெங்கைய நாயுடுவுக்கு வாய்ப்பு இருக்கிறதா? அல்லது திரௌபதி முர்மு வரிசையில் வேறு யாரேனும் இடம் பெறுவார்களா? அல்லது யாரும் எதிர்பாராத வகையில் முற்றிலும் புதிதாக ஒருவரை அறிவிப்பார்களா?

இந்தத் தேர்தலில் தில்லி முதல்வர் அரவிந்த கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி யாருடன் நிற்கும் என்பதும் நிச்சயமில்லை.  ஏற்கெனவே, 2019 தேர்தலின்போதே பாரதிய ஜனதா கட்சியைத் தோற்கடிக்கத் தில்லியில் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் இணக்கமாகச் செயல்பட வேண்டும் என்று சரத் பவார் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால், அது சாத்தியமாகவில்லை. தில்லி, பஞ்சாப் உள்பட பல்வேறு மாநிலங்களில் இவ்விரு கட்சிகளும் எதிரும் புதிருமாகத்தான் இருக்கின்றன.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் ஜூன் 15  (நாளை) தொடங்குகிறது. மனுத் தாக்கலுக்குக்  கடைசி  நாள் ஜூன் 29. வாக்குப் பதிவு ஜூலை 18. வாக்கு எண்ணிக்கை ஜூலை  21.

இதுவரையிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியோ,  எதிர்க்கட்சிகள் அணியோ வேட்பாளரை அறிவிக்கவில்லை.  2017 தேர்தலில்  ராம் கோவிந்த்தை எதிர்த்துப் போட்டியிட்ட மீரா குமார் தோல்வியுற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com