அக்னிபத் பற்றி பரவும் தகவல்கள்: உண்மையில்லை என்கிறார்கள் அதிகாரிகள்

முப்படைகளில் நான்கு ஆண்டுகளுக்கு, ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை பணியமர்த்தும் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக பல மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
அக்னிபத் பற்றி பரவும் தகவல்கள்: உண்மையில்லை என்கிறார்கள் அதிகாரிகள் (கோப்புப்படம்)
அக்னிபத் பற்றி பரவும் தகவல்கள்: உண்மையில்லை என்கிறார்கள் அதிகாரிகள் (கோப்புப்படம்)


புது தில்லி: முப்படைகளில் நான்கு ஆண்டுகளுக்கு, ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை பணியமர்த்தும் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக பல மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

தங்களது ராணுவ வீரராகும் கனவு, இந்த அக்னிபத் திட்டத்தால் தவிடுபொடியாகும் என்று கூறி ஏராளமான பிகார் இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ரயிலுக்குத் தீ வைக்கப்பட்டதால் பல இடங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் பல கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ராணுவத்தில் பணியாற்றுவார்கள். அந்த ஒட்டுமொத்த கிராம இளைஞர்களுக்கும் ராணுவப் பணி ஒன்றே கனவாக இருக்கும். இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தால் தங்களது கனவு நனவாகாது என்கிற அதிருப்தியில் உள்ளனர். 

ஆனால், அக்னிபத் திட்டம் குறித்து பரவும் தகவல்கள் பலவும் தவறானவை என்றும், அவ்வாறு நடக்காது என்றும் கூறுகிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள்.

அக்னிபத் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவத்தில் சேரும் இளைஞர்களின் வாய்ப்புகள் குறையும் என்று கூறப்படும் தகவல் தவறானதாம். உண்மையில், முப்படைகளில் இணைந்து பணியாற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கவே செய்யும்.

முப்படைகளுக்கு தற்போது பணியமர்த்தப்படும் வீரர்களின் எண்ணிக்கையை விடவும் மூன்று மடங்கு அதிகமாகவே வருங்காலத்தில் அக்னிவீரர்கள் தேர்வு செய்யப்படவிருக்கிறார்கள். எனவே அதிகமான இளைஞர்களுக்கு முப்படைகளில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள் அவர்கள்.

மக்களிடயே பரவும் மற்றொரு தகவல் சொல்வது என்னவென்றால், அக்னி வீரர்களுக்கு எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பது. ஆனால், சுய தொழில் செய்யவும் தொழில் தொடங்கவும் விரும்பும் இளைஞர்களுக்கு சிறப்பு நிதித் தொகுப்பும், வங்கியில் கடன் திட்டமும் இருப்பதாகக் கூறுகிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள்.

இது தவிர, மேற்கொண்டு அவர்கள் கல்வி பயிலவும் வாய்ப்பு ஏற்படும். அக்னிவீரர்களுக்கு நான்காண்டு பணி முடிந்து வழங்கப்படும் சான்றிதழ் 12ஆம் வகுப்புக்கு இணையானதாக இருக்கும். அதைக் கொண்டு அவர்கள் பல கல்வி மையங்களில் கல்வி கற்கலாம்.

அப்படியே பணி வாய்ப்பை விரும்பினாலும், மாநில காவல்துறை மற்றும் ஆயுதப் படைகளில் இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவர்களுக்கு பல இதர பணி வாய்ப்புகளும் கிடைக்கும் என்கிறார் அதே மத்திய அரசு அதிகாரிகள்.

இந்த திட்டத்தால், முப்படைகளின் திறன்மிகு பணி பாதிக்கப்படும் என்று பலரும் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால், இந்த திட்டமானது பல நாடுகளில் ஏற்கனவே பரிட்சித்துப் பார்க்கப்பட்டு வெற்றியும் பெற்றுள்ளது. 

இது மட்டுமல்ல, மற்றொரு தகவல் 21 வயதாகும் இளைஞர்களுக்கு ராணுவத்தில் பணியாற்றும் அளவுக்கு போதிய பக்குவம் இருக்காது என்றும் கூறப்படுகிறது. ஆனால் பல உலக நாடுகளின் ராணுவம் தங்களது இளைஞர்களை நம்பியே உள்ளன. அதில்லாமல், எப்போதுமே அனுபவம் வாய்ந்த ராணுவ வீரர்களைக் காட்டிலும் அதிகமான இளைஞர்கள் இருக்கப்போவதில்லை. தற்போதைய நிலையில் 50 - 50 என்ற அளவில்தான் இருக்கும் என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

ராணுவ பயிற்சி பெற்ற அக்னி வீரர்கள் பிற்காலத்தில் பயங்கரவாதக் குழுக்களில் இணையும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அது நாட்டுக்காக பணியாற்ற விரும்பும் இளைஞர்களை அவமதிப்பதாக உள்ளது. இப்போதும் கூட ஆயிரக்கணக்கானோர் முப்படைகளில் பயிற்சி மற்றும் அனுபவத்துடன் ஓய்வுபெற்றிருக்கிறார்கள். அவர்கள் யாரும் தேச விரோத குழுக்களில் சேர்ந்துவிட்டதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லையே என்று பதிலாகக் கொடுக்கிறார்கள்.

இது தொடர்பாக போதிய ஆலோசனை இல்லாமல் திட்டத்தைக் கொண்டு வந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. இதற்கு பதில் என்னவென்றால்.. அப்படியில்லை. இந்த திட்டம்  குறித்து சுமார் 2 ஆண்டுகள் அனைத்துக் கோணங்களிலும் அலசி ஆராய்ந்தே திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்கிறார்கள் அதிகாரிகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com