முலாயம் சிங் யாதவ் கடந்து வந்த பாதை..!

இந்திய அரசியலில் உச்சக்கட்ட அரசியல் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராகவும், இந்தியாவில் சமூகநீதியின் தூணாக திகழ்ந்தவர்
முலாயம் சிங் யாதவ் கடந்து வந்த பாதை..!



இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்து வந்த மூத்த அரசியல் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவருமான முலாயம் சிங் யாதவ்(82) உடல்நலக் குறைவு காராணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலை 10 மணியளவில் மருத்துவமனையில் காலமானார். 

பிறப்பு: உத்தரப்பிரதேசம் மாநிலம் எட்டாவா மாவட்டம் சைபாய் கிராமத்தின் பெரிய விவசாயக் குடும்பத்தை சேர்ந்த  சுஹர் சிங்-முர்தி தேவி தம்பதியருக்கு 1939 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதி மகனாகப் பிறந்தார்.

உடன் பிறந்தவர்கள்: ஷிவ்பால் சிங் யாதவ், ராஜ்பால் சிங் யாதவ், ரத்தன் சிங் யாதவ், அபய் ராம் யாதவ் என நான்கு சகோதரர்கள் மற்றும் கம்லா தேவி என்ற ஒரு சகோதரி என 5 பேர் இவருடன் பிறந்தவர்கள். 

கல்வி: எட்டாவாவில் உள்ள கர்ம் ஷேத்ரா கல்லூரியில் அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஷிகோஹாபாத்தில் ஏ.கே. கல்லூரியில் இளங்கலை ஆசிரியர் பட்டமும் பெற்றவர். பின்னர் ஆக்ரா பல்கலைகழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார். 

குடும்பம்: முலாயம் சிங் யாதவுக்கு மால்டி தேவி, சாதனா குப்தா என்ற இரண்டு மனைவிகள். முதல் மனைவி மால்டி தேவிக்கு பிறந்தவர் தான் அகிலேஷ் யாதவ். இரண்டாவது மனைவி சாதனா குப்தா ஏற்கனவே சந்திரா பிரகாஷ் குப்தா என்பவருடன் திருமணமாகி விவாகரத்து பெற்றவர். சந்திரா பிரகாஷ் குப்தா - சாதனா குப்தாவுக்கு பிறந்தவர் பிரதீக் யாதவ். 

அரசியல்: மல்யுத்த போட்டிகளில் ஆர்வம் கொண்ட முலாயம் சிங், 1960-களில் மல்யுத்த வீரராகவும், ஆசிரியராகவும், சமூக ஆர்வலராக அரசியலில் அடியெடுத்து வைத்தார். மல்யுத்த போட்டியின் மூலம் அரசியல் மல்யுத்தத்தை தொடங்கியவர் தான் முலாயம் சிங். 

ஜஸ்வந்த்நகர் சட்டப்பேரவை உறுப்பினரான நாது சிங் தலைமையில் மெயின்புரியில் நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் மல்யுத்த வீரராக பங்கேற்ற முலாயம் சிங் திறமையைக் கண்ட நாது சிங், அரசியலில் தனது ஆதரவாளராக அரவணைத்துக் கொண்டார்.  சமூகத்தின் மீது கொண்ட அக்கறையால் அரசியல் பக்கம் தனது கவனத்தை திருப்பிய முலாயம் சிங்கை அரசியல் அவரை தன் வசப்படுத்தி கொண்டது. 

பின்னர், சோசலிச தலைவர்களான ராம் மனோகர் லோகியா, ராஜ் நாராயணன், சௌத்ரி சரண் சிங் போன்றவர்களின் அரசியல் களத்தில் வளர்ந்து வந்த முலாயம் சிங், 1967 ஆம் ஆண்டு சம்யுக்த சோசலிச கட்சி சார்பில் ஜஸ்வந்த் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று 28 வயதில் உத்தரப்பிரதேசத்தின் பேரவை உறுப்பினராக தேர்வாகி பேரவைக்குச் சென்றார். 1974 ஆம் ஆண்டு சரண்சிங்-கின் பாரதிய கிராந்தி தளம் சார்பில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பேரவைக்கு சென்றார். அதன்பிறகு கட்சிகள் பிளவுப்பட்டதால் முலாயம் சிங் பாரதிய லோக் தள், ஜனதா, பாரதிய கிராந்தி தள், ஜனதா தள் என பல்வேறு கட்சிகளில் பணி புரிந்தார். 

மிசா கைதி: 1975 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவரச நிலை பிரகடனம் செய்தபோது முலாயம் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்திரா காந்தியின் எமர்ஜென்சி எனப்படும் மிசா சிறைவாசத்தை 19 மாதங்கள் முலாயம் சிங் அனுபவித்தார். 
 
பத்து முறை சட்டப்பேரவை உறுப்பினர்: உத்தப்பிரதேச பேரவைக்கு பத்து முறை தேர்வான முலாயம் சிங், ஜஸ்வந்த் நகர் தொகுதியில் இருந்து மட்டும் 7 முறை பேரவைக்கு தேர்வாகியுள்ளார். 1977 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச முதல்வர் ராம் நரேஷ் யாதவ் தலைமையிலான அமைச்சரவையில் 3 ஆவது முறை பேரவை உறுப்பினராக முலாயம் சிங் அமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது இளம் அமைச்சர்களாக இருந்த முலாயம் சிங் யாதவ், கல்யாண் சிங் பின்னாளில் மாநிலத்தின் முதல்வராகவும்,  அரசியலில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக வலம் வந்ததும் குறிப்பிடத்தக்கது. 

தேடி வந்த தலைவர் பதவி: 1980 இல் லோக் தளம் கட்சியின் மாநில தலைவர் பதவி முலாயம் சிங் யாதவை தேடி வந்தது. இதன் அடுத்த கட்ட நகர்வாக 1982 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்ட மேலவையில் எதிர்க்கட்சித் தலைவரானார் முலாயம் சிங்.

கிராந்திகாரி மோர்ச்சா: லோக்தளம், பிளவுபட்ட போது, ​​கிராந்திகாரி மோர்ச்சா என்ற கட்சியைத் தொடங்கிய முலாயம் சிங் யாதவுக்கு 1989 இல் இவரது கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக பொறுப்பேற்றார் முலாயம் சிங். 

முதலில் வி.பி சிங்கின் ஜனதாவுடன் இணைந்த முலாயம் சிங், பிறகு சந்திரசேகர் என இரு பிரதமர்களுக்கும் ஆதரவு அளித்து தன் அரசை தக்கவைத்துக் கொண்டார். இதனிடையே காங்கிரஸ் ஆதரவை வாபஸ் பெற்றதால் முலாயம் சிங் ஆட்சி முடிவுக்கு வந்தது. 

புதிய கட்சி: 1992 ஆம் ஆண்டு சமாஜ்வாதி என்ற கட்சியை முலாயம் சிங் நிறுவினார். பின்னர், உத்தரப்பிரதேசத்தில் அசைக்க முடியாத கட்சியாக உருவானாது. சரண்சிங், தேவிலால் போன்ற தலைவர்கள், கம்யூனிச தலைவர்களுடன் நல்ல நட்புறவு கொண்டவர் முலாயம் சிங் யாதவை உத்திரப்பிரதேசத்தின் அசைக்கமுடியாத அரசியல் தலைவராக காலம் அடையாளம் காட்டியது.

மூன்று முறை முதல்வர்: புத்திசாலித்தனமான அரசியல்வாதியான முலாயம் சிங் யாதவ், பிற்படுத்தப்பட்ட சாதியினரை உத்தரப்பிரதேச அரசியலின் மையமாக வைத்து ஒரு புதிய தடத்தை அமைத்து, 1989 - 1991 வரையும், 1993-1995 மற்றும் 2003 - 2007 வரை என மாநிலத்தின் 3 முறை முதல்வராக பணியாற்றினார் முலாயம் சிங்.

மதச்சார்பற்ற அரசியலின் வலுவான வாக்காளரான முலாயம் சிங் யாதவ், 1990 இல் ராம் ஜென்மபூமி இயக்கத்தின் உச்சக்கட்டத்தில் கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட பிறகு தேர்தல் இழப்புகளைச் சந்தித்தார், ஆனால் அவர் அரசியலமைப்பின் உணர்வின் மீட்பராக தன்னைத்தானே முன்னிறுத்தி மீண்டும் மாநிலத்தை ஆட்சி செய்தார். 

1994 இல் உத்தரகாண்டிற்கு தனி மாநிலம் கோரிய இயக்கத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது முலாய் சிங் ஆட்சியின் குறைபாடுகளில் ஒன்றாக பேசப்பட்டது.  பின்னர், உத்தரப்பிரதேசத்திலிருந்து உத்தரகாண்ட் தனியாக பிரிக்கப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்: 1996 ஆம் ஆண்டு மெயின்புரி தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்வாகி முதல் முறையாக நாடாளுமன்றம் சென்ற முலாயம் சிங், பின்னர், மக்களவைக்கு 7 முறை தேர்வாகி சென்றுள்ளார். அதில், 1996, 2004, 2009, 2014, 2019-களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மெயின்புரி தொகுதியில் இருந்து 5 முறை தேர்வாகி சென்றுள்ளார். 1999 இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சம்பல், கன்னோஜ் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தேவகவுடா, ஐ.கே. குஜரால் என இரு பிரதமர்களின் ஆட்சியிலும் 1996 முதல் 1998 ஆம் ஆண்டு வரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்துள்ளார். தில்லி அரசியல் மையத்தில் தன்னையும் ஒரு சக்தியாக மாற்றிக்கொண்டவர் முலாயம் சிங். 

பறிபோன பிரதமர் வாய்ப்பு: 1996 இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி ஆட்சி அமைக்க இருந்தபோது, பிரதமர் பதவிக்கு முலாயம் சிங் யாதவ் பெயரையே மூத்த தலைவர்கள் முன்மொழிந்தனர். அப்போது பிராந்தியக் கட்சிகளால் கிங்மேக்கராக பேசப்பட்டார். ஆனால், அப்போதைய பிகார் மாநில முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் எதிர்ப்பு தெரிவித்ததால், பிரதமர் வாய்ப்பு பறிபோனது. அதாவது ஹிந்தியை தாய் மொழியாக கொள்ளாத மன்மோகன் சிங், நரேந்திர மோடி பிரதமராக தேர்வானர்கள். ஆனால், ஹிந்தியை ஆட்சி மொழியாக கொண்ட உத்தரபிரதேசத்தின் முதல்வராக இருந்த முலாயம் சிங்கின் பிரதமர் கனவு நிறைவேறாமல் கனவோடே தகர்ந்தது. தற்போது முலாம் சிங் யாதவ் சம்மந்தி லாலு பிரசாத் யாதவ்.  

நேதாஜி: பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் ராம் மந்திர் இயக்கத்தின் மூலம் இஸ்லாமியர்களுக்கு இடையே மிகவும் பரிச்சயமானர் முலாயம் சிங். அதேநேரத்தில் தனது திறமையின் மூலம் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்த முலாயம், தனது சைக்கிள் பேரணி மூலம் மாநிலத்தில் அவரது ஆதரவாளர்களால் நேதாஜி என அன்பாக அழைக்கப்பட்டார். 

காலத்தில் அரசியலில் மகனுக்கு வழிவிட்ட தந்தை: அரசியலில் உச்சத்தில் இருந்த முலாயம் சிங், 2000 இல் கன்னோஜ் மக்களவைத் தொகுதியில் தனது மகன் அகிலேஷ் சிங் யாதவை போட்டியிட வைத்து வெற்றி பெற வைத்து அரசியலுக்கு கொண்டு வந்தவர், பின்னர் 2012 இல் மாநிலத்தின் முதல்வராக இளம் வயதில்  பொறுப்பேற்க வைத்து அழகு பார்த்தார்.

பின்னர், தனக்கு ஆரம்பாலத்தில் இருந்து ஆதரவாக இருந்த சகோதரர் ஷிவ்பால் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவ் இருவராவலும் கட்சியில் அதிகார பூசல் உச்சக்கட்டத்தை எட்டி கட்சி சிதையும் நிலைக்கு சென்றபோது மகன் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாக இருந்து செயல்பட்டார் முலாயம் சிங். 

குடியரசுத் தலைவராக வாய்ப்பு: பின்னர், கட்சியில் இருந்து மகன் அகிலேஷ் யாதவால் ஓரங்கட்டப்பட்ட முலாயம் சிங், 2016 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலின் போது பிரணாப் முகர்ஜிக்கு அடுத்ததாக முலாயம் சிங் அந்த பதவிக்கு வருவார் என அரசியல் நோக்கர்களால் கணிக்கப்பட்ட நிலையில், அப்படி எதுவும் நடக்காமல் போனது பெரும் ஏமாற்றத்தை தந்தது. 

பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டில் பாஜகவுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய முலாயம் சிங், 2012 ஆம் ஆண்டு நிர்பாய வழக்கு மற்றும் சுதந்திர திபெத் விவகாரத்தில் கூறிய கருத்து சர்ச்சைக்கு வித்திட்டது. 

பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவரும், ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர்களில் உச்சகட்ட தலைவர்களில் ஒருவராகவும், இந்தியாவில் சமூகநீதியின் தூணாக திகழ்ந்தவரும், புத்திசாலி அரசியல்வாதியாகவும் பேசப்பட்ட முலாயம் சிங் யாதவ், உடல் நலக்குறைவால் இன்று திங்கள்கிழமை(அக்.10) காலமானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com