இதுதான் குஜராத் மாடலா? 38% மக்கள் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்கள்

குஜராத் மாநிலத்தில்  38 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்கள்.
குஜராத் மாடல்
குஜராத் மாடல்


அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 38 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் நிதி ஆயோக் வெளியிட்ட தேசிய பல பரிமாண ஏழ்மைக் குறியீடு (எம்பிஐ) மூலம் தெரிய வந்துள்ளது.

அதாவது, குஜராத் மக்கள் தொகையில் கிராமப்புறங்களில் கிட்டத்தட்ட பாதி பேருக்கு (44.45%) ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதும், நகரப் பகுதிகளில் 28.97 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் சத்துணவு மற்றும் ஊட்டச்சத்து நிறைவில், குஜராத் மாநிலம் இன்னும் வெகுதொலைவு பயணிக்க வேண்டியதிருக்கும் என்றே நிதி ஆயோக் வெளியிட்ட ஆய்வு முடிவுகள் காட்டுகிறது.

ஆனால், இதில் ஆச்சரியம் என்னவென்றால், நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய மாநிலங்கள் என்று கூறப்படும் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களை, குஜராத் மாநில ஊட்டச்சத்து நிலைப்பாட்டுடன் ஒப்பிடுகையில் அவை எவ்வளவோ முன்னணியில் உள்ளனர் என்பதே.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் வெளியிடப்பட்டிருக்கம் தரவுகளில், வளர்ச்சிக் குன்றிய குழந்தைகளைக் கொண்ட மாநிலங்களில் குஜராத் நான்காவது இடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள 39 சதவீதக் குழந்தைகள், அவர்களது வயதுக்கு ஏற்ற உடல் எடையில்லாமல் குறைந்த உடல் எடையுடன் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீணாகும் மற்றும் எடைகுறைவான குழந்தைகளைக் கொண்ட மாநிலங்களில் குஜராத் இரண்டாம் இடத்தில் இருப்பதன் மூலம், அந்த மாநிலம், சுகாதாரத் துறையில் தோல்வி அடைந்திருப்பதையே காட்டுவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ஆகமதாபாத்தில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரி பொருளாதார பேராசிரியர் ஆத்மன் ஷா கூறுகையில், ஊட்டச்சத்து குறைபாடு என்பது கவலைக்குரிய விஷயம். 2016ஆம் ஆண்டில் பார்த்தால் 33.6 சதவீத மேற்கு வங்க குடும்பமும், 41.37 சதவீத குஜராத் குடும்பமும் குறைந்தது ஒரு ஊட்டச்சத்து குறைபாடுடைய உறுப்பினரைக் கொண்டிருக்கும். ஆனால் இது 2021ம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் 27.3 சதவீதமாகவும், குஜராத்தில் 38.9 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

ஆனால், தற்போது குஜராத் புள்ளிவிவரம் கூறுவது என்னவென்றால், ஒவ்வொரு 100 பேருக்கும் 3 பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகிறார்கள் என்பதே. 

நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில், குஜராத் மாநிலத்தில் 23.30 சதவீதம் மக்கள் வீடுகள் இல்லாமல் இருப்பதாகவும், குஜராத்தைக் காட்டிலும் கேரளம், பஞ்சாப், தமிழ்நாடு ஆகியவை சிறப்பாகவே உள்ளன என்றும், இந்த மோசமான நிலை கிராமப் பகுதிகளை எடுத்துக் கொண்டால் இன்னும் மோசமடைந்து 35.52 சதவீதமாக உள்ளது என்றும், ஹரியாணா, பஞ்சாப், கேரளம், தமிழகம் போன்ற மாநிலங்களில் கூட இதைவிட நல்ல நிலைமை உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015 - 2016ஆம் ஆண்டில் ஏழ்மை நிலை மக்களின் சதவீதம் 18.47 சதவீதமாக இருந்த நிலையில், 2019 - 21ல் 11.66 ஆகக் குறைந்துள்ளது.

மக்களின் ஏழ்மை நிலையின் தீவிரத்தின் மூலம், குஜராத் மக்களின் வாழ்க்கைத் தரம் வறுமைக் கோட்டிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என்று பார்க்க முடிகிறது. மேலும், ஏழை மக்கள் இன்னமும் ஏழைகளாகவே இருப்பதையும் காட்டுகிறது. ஆனால் தற்போது அந்த ஏழ்மை நிலை சற்று மாறியிருக்கிறது. ஆனாலும், ஹரியானா, கர்நாடகம், மகாராஷ்டிரம், பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களின் நிலையைக் காட்டிலும் குஜராத்தில் மோசமாகவே உள்ளது.  மேற்குறிப்பிட்ட மிகப்பெரிய மாநிலங்களை ஒப்பிடுகையில், குஜராத்தில் ஏழைகள் இன்னமும் ஏழைகளாகவே உள்ளனர் என்பதையே காட்டுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com