டாஸ்மாக்: கூச்சப்பட வேண்டாமா, அரசு? 90 மி.லி.யும் விடிகாலைக் கடைத்திறப்பும்!

மேலும் அதிக நேரம் மதுக் கடைகளைத் திறப்பதால் ஆகப் போவது என்ன? 90 மி.லி. பாக்கெட் விற்பனையின் தாக்கம் என்ன? 
டாஸ்மாக்: கூச்சப்பட வேண்டாமா, அரசு?  90 மி.லி.யும் விடிகாலைக் கடைத்திறப்பும்!

இரு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார் மதுவிலக்கு ஆயத்துறைக்கும் அமைச்சரான சு. முத்துசாமி.

_ கட்டட வேலை போன்ற கடுமையான வேலை செய்வோரைக் கருத்தில்கொண்டு காலை 7 மணி முதல் 9 மணி வரை மதுக்கடைகளைத் திறப்பது பற்றி யோசிக்கப்பட்டு வருகிறது.

_  (குறைந்தபட்ச அளவாக) 90 மி.லி. அளவுக்கும் மது வகைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒருபக்கம் மதுக்கடைகளை மூடுவதாகச் சொல்லிக் கொண்டு, இப்போது அமைச்சர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு மது விற்பனையை மேலும் பெருக்க மட்டுமே செய்யும்.

உள்ளபடியே அரசு மதுக் கடைகளில் விற்பனை பெருகக் கூடிய வகையில் எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கைக்காகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் கூச்சப்படத்தானே வேண்டும்?

இதற்காகவெல்லாம் என்ன பெருமையும் பேட்டிகளும் வேண்டிக் கிடக்கின்றன?

மதுக்கடைகளில் தற்போது விற்கப்படும் மது வகைகளின் குறைந்தபட்ச விலை ரூ. 130, ரூ. 140. இன்னமும் - அதாவது அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, துறையும் விலக்கிக் கொள்ளப்பட்ட பின்னும் - தொடர்ந்து எவ்வித மாற்றமுமின்றிக் கடைகளில் கிட்டத்தட்ட கட்டாயமாக வசூலிக்கப்படும் மொய்ப் பணம் ரூ. 10 சேர்த்து பாட்டிலுக்கு ரூ. 140, 150!

வழக்கமாகக் கையில் ரூ. 140-க்குக் குறைவாக இருந்தால் குடிக்க முடியாது என்பதால் மதுக் கடை வாசலிலேயே கொஞ்சம் பேர் காத்திருப்பார்கள், ஒரு பார்ட்னர் வருவதற்காக. இன்னொருவர் இதேமாதிரி குறைந்த தொகையைத் தேற்றிக் கொண்டு வந்ததும் இருவருமாக உள்ளே சென்று ஒரு குவார்ட்டர் (180 மி.லி.) பாட்டில் வாங்கி, ஆளுக்கொரு பிளாஸ்டிக் டம்ளரில் நூலளவுகூட வித்தியாசம் வராதபடி பார்த்து ஊற்றிப் பகிர்ந்துகொண்டு குடிப்பார்கள். ஆக, ரூ. 140-க்குக் குறைவாக இருந்தால் குடிக்க முடியாது, இன்னொருவரின் உதவி அல்லது கூட்டணி தேவை. இப்படியெல்லாம் குடிக்க விரும்பாதவர்கள், கொஞ்சம் பேர்தான், குடிக்க மாட்டார்கள்.

(ஆனால், நேர்மாறாக, குவார்ட்டர் பாட்டில் மதுவை முழுவதுமாகப் பயன்படுத்திவிட முடியாது என்பதால் குடிக்க வருவோரில் 40 சதவிகிதம் பேர் அரை மணி நேரத்துக்கும் மேலாகக் கடைகளில் காத்து நிற்கிறார்கள் என்று அறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் அமைச்சர் முத்துசாமி. ம். எவ்வளவு கரிசனம் கொண்ட ஆய்வு!). 

இந்தக் குடிமகன்களின் இன்னலை மனப்பூர்வமாக உணர்ந்து, மதுவை மிகச் சரியாகப் பகிர்ந்துகொள்வதில் இருக்கும் சிரமத்தை, அதனால் ஏற்படக் கூடிய தகராறுகளை, மோதல்களை, அடிதடிகளை, மனவருத்தங்களை எல்லாம் கருதித்தான் இப்போது 90 மி.லி. டெட்ரா பாக்கெட்களை அறிமுகப்படுத்துகிறது போல இந்த அரசு. விற்பனை பிரமாதமாக இருக்கும்  என்பதில் சந்தேகமில்லை.

ஏனெனில், இந்த யோசனை அறிவிக்கப்பட்டவுடனேயே, அறிவிக்கப்பட்ட நாளான திங்கள்கிழமையே மதுக் கடை வாசல்களில் மிக நல்ல வரவேற்பு. அப்பாடா, ஒரு பெரிய பிரச்சினை தீர்ந்தது என்று பெருமூச்சு விட்டு வழக்கம்போல குவார்ட்டர்களைப் பகிர்ந்துகொண்டார்கள் குடிமகன்கள். ஒருவேளை ராஜா காலத்தைப் போல, அரசரோ, அமைச்சர்களோ, அதிகாரிகளோ யாரேனும் மாறுவேஷத்தில் வந்திருந்தால் அரசின் அறிவிப்புக்குக் கிடைத்துள்ள இந்த வரவேற்பை அறிந்து பெருமிதம் அடைந்திருக்க முடியும்.

மதுக் கடை வாசல்களில் உலவிய இன்னொரு முக்கியமான கேள்விக்கும் டாஸ்மாக்கின் அடுத்த ஆய்வுக் கூட்டத்திலாவது யோசித்து தக்க பதிலை அமைச்சர்களும் அதிகாரிகளும் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது - இந்த அரை குவார்ட்டருக்கும் அடிஷனலாக அந்த பத்து ரூபாய் தர வேண்டுமா? அல்லது ஐந்து ரூபாய் ஓகேயா?

இன்னோர் அறிவிப்பு, கடைத் திறப்பு நேரம் பற்றியது.

முதன்முதலில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டபோது, காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை கடைகள் திறக்கப்பட்டிருந்தன. பின்னர் இரவு 10 மணி  வரைக்கும் என்று குறைக்கப்பட்டது. பின்னர் காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை என்றாக்கப்பட்டது. 2011-ல் இந்த நேரம் காலை 10 முதல் இரவு 10 வரை என்றாக்கப்பட்டது.

காந்தியவாதி சசிபெருமாள் மரணத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் மதுவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடந்துகொண்டிருந்த நிலையில், 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று திமுக கூட்டணி அறிவித்தது. கொஞ்சம் நிதானமாக அணுகிய அதிமுகவோ, உடனடி சாத்தியமில்லை, ஆனால், படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று வாக்குறுதியளித்தது. வெற்றி பெற்றதும் முதல்வரான ஜெயலலிதா, 500 மதுக் கடைகளை மூடும் அரசாணையில் கையெழுத்திட்டதுடன், டாஸ்மாக் மதுக் கடைகள் இனி காலை 10 மணிக்குப் பதிலாக பகல் 12 மணிக்குதான் திறக்கப்படும் என்று அறிவித்தார். இப்போதும் அதுதான் தொடருகிறது.

கடைத் திறப்பு நேரம் பற்றித் திடீரென இப்போது கருத்துத் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் முத்துசாமி.

காலை 7 மணி முதல் 9 மணி வரை, வேலைக்குப் போகக் கூடியவர்கள், கட்டட வேலை போன்ற கடுமையான வேலைக்குப் போகக் கூடியவர்கள் ஒருசில சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். அதற்கு என்ன ஏற்பாடு என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இன்னமும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் சு. முத்துசாமி.

தங்களுடைய நோக்கம் லாபம் அல்ல. தவறான இடங்களுக்குப் போய்விடக் கூடாது, தவறான விற்பனையும் வந்துவிடக் கூடாது என்பதுதான் என்று மீண்டும் மீண்டும் அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில் எப்போது வேண்டுமானாலும் மதுக்கடை விற்பனை நேர அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

கடுமையான வேலைகளுக்குச் செல்வோருக்கு உதவும் வகையில் காலையிலேயே கடைகளைத் திறந்த பின், குடித்துவிட்டு வேலைகளுக்குச் செல்வோர் விழுந்து செத்தால் யார் பொறுப்பு? அரசா அல்லது டாஸ்மாக்கா?

பணி நேரத்தில் போதையில் சாவோருக்கு இழப்பீடுகள் கிடைக்க வாய்ப்பு உண்டா? [பணியாளர் இழப்பீட்டுச் சட்டப் பிரிவு 3 (1)-ன் கீழ் பணி நேரத்தில் மது / லாகிரிப்  பொருள் போதையில் இருந்து விபத்துக்குள்ளான தொழிலாளி இழப்பீடு பெறத் தகுதியற்றவர் என்பது அரசுக்கும் அமைச்சருக்கும் தெரிந்திருக்கும்தானே].  குடிபோதையில் அவர்கள் என்ன லட்சணத்தில் வேலை செய்வார்கள்? அவர்களை எவ்வளவு காலத்துக்கு உரிமையாளர்கள் வேலைக்கு வைத்துக் கொள்வார்கள்? அல்லது அரசுதான் போதையில் வேலை செய்வதை ஏற்றுக்கொள்ளுமா? தெரியவில்லை.

ஒரு நல்ல அரசின் கடமை மக்களிடையே குடிப் பழக்கத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக மட்டுமே இருக்க முடியும்.

மாறிவரும் இன்றைய சூழ்நிலையில், 'கட்டடப் பணி போன்ற கடுமையான வேலைகளைச் செய்வோரைக் கவனத்தில்கொண்டு', நள்ளிரவில் திடீரென போதை தெளிந்து விழித்துக்கொள்ளும் வேளையில் மதுக் கடைகள் அடைக்கப்பட்டிருப்பதால் மீண்டும் குடிக்க முடியாமல் ஏற்படும் சிரமத்தையும் மனவேதனையையும் அறிந்து, 'தவறான இடங்களுக்குப் போய்விடக் கூடாது, தவறான விற்பனையும் வந்துவிடக் கூடாது' என்பதால் 24 மணி நேரமும் மதுக் கடைகளைத் திறந்துவைப்பது பற்றியும்கூட மேலும் சில மாதங்களில் அறிவிக்கப்படலாம் என்றே அஞ்சப்படுகிறது.

ஆனால், இந்தக் குடிக்குப் பின்னால் இன்னொரு பக்கம், அல்ல, நிறைய பக்கங்கள் இருக்கின்றன. அரசும் மக்களும் அக்கறை கொள்ள விஷயங்கள் இருக்கின்றன.

_ தமிழ்நாடு முழுவதும் மதுக் கடைகள் திறந்த காலந்தொட்டுக் குடித்துச் செத்தவர்கள், குடியால் செத்தவர்கள் எத்தனை பேர்?

_ தமிழகம் முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டும் ஒவ்வோராண்டும் குடியால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுபவர்கள் எத்தனை பேர்?

_ எத்தனை பேர் நலம் பெற்றிருக்கிறார்கள்? எத்தனை பேர் செத்துப் போனார்கள்?

_ குடிப்பழக்கத்தால் தந்தையை, சகோதரனை, கணவனை, மகனை, பேரனை இழந்ததால் ஆதரவற்றுப்போன பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு?

_ தமிழ்நாட்டில் குடியால் நாசமாய்ப் போன குடும்பங்கள் பற்றி இதுவரையிலும் அரசால் எந்தவொரு கணக்கெடுப்பேனும் எடுக்கப்பட்டிருக்கிறதா? புள்ளிவிவரம் இருக்கிறதா?

_ குடி காரணமாக நடைபெறும் குற்றச் செயல்கள், கொலை, கொள்ளை, களவு, பாலியல் வன்கொடுமைகள் பற்றிய கணக்கெடுப்பு, புள்ளிவிவரங்கள் இருக்கிறதா?

யாருக்கும் தெரியாது! ஒரு கணக்கு வழக்கும் கிடையாது!!

ஆண்டுதோறும் டாஸ்மாக் மதுக்கடைகளின் மூலம் கிடைக்கும் வருமானம் பெருகிக்கொண்டே செல்வதற்காகப் பெருமையாகத் தெரிவிப்போர், இந்தப் பணம் எல்லாம் யாரிடமிருந்து வருகிறது? எங்கிருந்து வருகிறது? எப்படியெல்லாம் வருகிறது? அரசுக்குக் கிடைக்கிற இந்த வருமானத்தால் இழப்பவர்கள், பாதிக்கப்படுகிறவர்கள் எல்லாம் யார், யார்? என்று எண்ணிப் பார்த்திருக்கிறார்களா?

இதையும் படிக்க | அடுத்தது பிகார்?

மதுக்கடைகளைக் காலை 7 மணிக்கே திறந்து வைத்தால் 'கடும் சிரமப்படுகிறவர்கள் பலனடைவதைவிட' குடி தொடர்பான குற்றங்கள் அதிகரிப்பதற்கே வழிவகுக்கும்.

90 மி.லி. மது பாக்கெட்களை அறிமுகப்படுத்தும்போது, குறைந்த விலைக்கே கிடைப்பதால் மேலும் பலர், குறிப்பாக சிறார்களும் இளம் வயதினரும் மதுவை நோக்கி ஈர்க்கப்படும் ஆபத்து இருக்கிறது.

மது விற்பனையில் 'ஆழ்ந்த யோசனையுடன்' ஆய்வு நடத்திப் புதிய புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த நினைக்கும் அரசு, இவற்றைச் செயல்படுத்தும் முன் நேரிடக்கூடிய எதிர்மறையான விளைவுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

குறைத்துக்கொண்டே வந்திருக்கும் மதுக் கடைகள் திறப்பு நேரத்தை மேலும் குறைப்பது பற்றிதான் யோசிக்க வேண்டுமே தவிர, எக்காரணத்தைக் கொண்டும் அதிகரிக்க நினைப்பது நல்லதல்ல, மக்களுக்கு மட்டுமின்றி ஆளும் அரசுக்கும்கூட.

'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி'யின் மக்கள், இப்படி பாட்டில்களோடு தோன்றித் தெருக்களில் தள்ளாடிக் கொண்டிருப்பதும் வீதியோரங்களில் விழுந்துகிடப்பதும் ஒரு காலத்திலும் எந்தவோர் அரசுக்கும் பெருமைப்படக்கூடிய ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com