அடுத்தது பிகார்?

மகாராஷ்டிரத்தைத் தொடர்ந்து, பிகாரிலும் கட்சியை உடைத்து நிதீஷ் குமார் ஆட்சி கவிழ்க்கப்படலாம்...
இலக்கு!
இலக்கு!

மகாராஷ்டிரத்தைத் தொடர்ந்து, பிகாரிலும் அதே பாணி, அதாவது பாரதிய ஜனதா பாணி தாக்குதல் நடத்தி நிதீஷ் குமார் ஆட்சி கவிழ்க்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.

இதே பாணியில்தான் உத்தரகண்ட்டில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலகச் செய்து காங்கிரஸ் அரசை பாரதிய ஜனதா கவிழ்த்தது. அருணாசலப் பிரதேசத்திலும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கினர்.

மணிப்பூரில் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெருங்கட்சியாக அதிக இடங்களில் வென்றபோதிலும்கூட ஆட்சியமைக்க வாய்ப்பு மறுக்கப்பட்டது.

2017-ல் பிகாரிலும் இவ்வாறுதான் எதிர்க்கட்சி அரசைக் கவிழ்த்தது. 2019-ல் கர்நாடகத்திலும் 2020-ல் மத்தியப் பிரதேசத்திலும் இதே கதைதான்.

மகாராஷ்டிரத்தில் இந்த முயற்சி வெற்றி பெற்றாலும் ராஜஸ்தானில் தோற்றுப் போனது.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசைக் கவிழ்ப்பதற்காக அல்லது கைப்பற்றுவதற்காக ரூபாய் 6,300 கோடியை பாரதிய ஜனதா கட்சி செலவிட்டுள்ளதாக ஏற்கெனவே தில்லி முதல்வர் அரவிந்த கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னெப்போதுமில்லாத வகையில் நம்பிக்கையளிக்கும் வகையில் அண்மையில் பிகாரில் எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லாருமாக இணைந்து ஒரே கூட்டம் நடத்தினார்கள். இந்த முறை ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டவர் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்.

எனவே, தற்போது பிகாரில் நிதீஷ் குமார் அரசைக் கவிழ்ப்பதற்கான வேலைகளை பாரதிய ஜனதா தொடங்கிவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. இதைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டுகின்றன, தில்லியில் பிகாரின் முன்னாள் துணை முதல்வரும் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவருமான சுஷீல் குமார் மோடி தெரிவித்த கருத்துகள்.

நிதீஷ் குமார் தலைமையின் மீது கொண்டிருக்கும் அதிருப்தி காரணமாக ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்கள், எம்பிக்களில் கணிசமானோர் தங்கள் கட்சியில் இணைய விரும்புகின்றனர் என்று தெரிவித்துள்ளார் அவர்.

கட்சிக்குள் கடுமையான அதிருப்தி நிலவுகிறது. பா.ஜ.க. உள்பட பல்வேறு கட்சிகளுடன் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தொடர்பில் இருக்கின்றனர் என்றும் சுஷீல் குமார் மோடி குறிப்பிட்டுள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவை நிதீஷ் குமாரின் வாரிசாகவோ, அல்லது ஐக்கிய ஜனதாதள ஆதரிக்கும் எதிர்க்கட்சிகளின் முகமாக ராகுல் காந்தியையோ ஏற்கப் பெரும்பாலான ஐக்கிய ஜனதா தலைவர்கள் தயாராக இல்லை. இனிமேல் திரும்பி வந்தாலும் நிதீஷ் குமாரை நாங்கள் ஏற்க மாட்டோம். அவர் நம்பிக்கைக்குரிய நபர் அல்ல என  நிரூபித்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார் மோடி.

மகாராஷ்டிரத்தைப் போல தன்னுடைய கட்சியும் உடைந்துவிடுமோ என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் அச்சம் கொண்டுள்ளார். எனவேதான், கட்சி எம்எல்ஏக்களையும் எம்பிக்களையும் நிதீஷ் சந்தித்துக்கொண்டிருக்கிறார்

என்று லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ் பாஸ்வான்) தலைவரும் எம்பியுமான சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய ஜனதா தளத்தில் பெரும் பிளவு ஏற்படவிருக்கிறது. வரும் நாள்களில் கட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று சுஷீல் குமார் மோடி குறிப்பிட்டார்.

வரும் மக்களவைத் தேர்தலில் தங்களில் பெரும்பாலோருக்குப் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காது என்பது ஐக்கிய ஜனதாதள எம்பிக்களுக்குத் தெரியும். தேஜஸ்வியைத் தனது வாரிசாக நிதீஷ் குமார் அறிவித்துவிட்ட நிலையில், தங்கள் எதிர்காலம் இருண்டு கிடப்பதாக அவர்கள் கருதுகின்றனர். எனவேதான், இந்தக் குழப்பங்கள் எல்லாம் என்றும் தெரிவித்தார் மோடி.

ஆனால் இன்னொருபக்கம், பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறார் சுஷீல் குமார் மோடி என்று குறிப்பிட்டிருக்கிறார் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய தலைவரும் எம்பியுமான ராஜிவ் ரஞ்சன் சிங்.

மிகவும் நொந்துபோய்விட்டிருக்கும் மோடி, கட்சிக்குள் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக எதையாவது கூறிக்கொண்டிருக்கிறார் என்றும் அவர் கிண்டலடித்தார்.

இதைப் போல எதையாவது கூறித் தங்கள் கட்சித் தலைமையைத் திருப்திப் படுத்த நினைக்கிறார் மோடி என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ஆனாலும், மகாராஷ்டிரத்தைத் தொடர்ந்து, பிகாரிலும் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளில் பாரதிய ஜனதா கட்சி இறங்கிவிட்டிருக்கக் கூடும் என்ற ஐயம் வலுவாக நிலவுகிறது. அது சரி, நெருப்பில்லாமல் புகை வருமா, என்ன?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com