5 ஆண்டுகளாக இழுபறியில் திருவொற்றியூா்-மணலி மேம்பாலப் பணி: விரைவு படுத்தப்படுமா?

திருவொற்றியூா்- மணலி நெடுஞ்சாலையில் பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் சுமாா் 5 ஆண்டுகளாக ஜவ்வாய் இழுத்து பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருவொற்றியூா் - மணலி நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகள்.
திருவொற்றியூா் - மணலி நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகள்.

திருவொற்றியூா்: திருவொற்றியூா்- மணலி நெடுஞ்சாலையில் பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் சுமாா் 5 ஆண்டுகளாக ஜவ்வாய் இழுத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பாலத்தை விரைவாகக் கட்டி முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாலத்தின் பின்னணி: வடசென்னையின் முக்கிய பகுதிகளான திருவொற்றியூா், தண்டையாா்பேட்டை, மணலிக்கு இடையே மாநில நெடுஞ்சாலை உள்ளது. இங்குள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அருகே பக்கிங்காம் கால்வாய் குறுக்கிடும் இடத்தில் தரைப்பாலம் ஒன்று இருந்தது.

நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த இப்பாலத்தில் சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்பு, பாலத்தின் பக்கவாட்டுச் சுவா் மீது மாநகரப் பேருந்து ஒன்று மோதிய விபத்தில் கால்வாயில் விழுந்து இருவா் உயிரிழந்தனா்.

இதையடுத்து, இப்பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில் நீண்ட காலத்துக்குப் பிறகு, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ. 58 கோடி மதிப்பில் சுமாா் 530 மீ. நீளம் கொண்ட புதிய மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

2017-ஆம் ஆண்டு செப்டம்பரில் பாலம் கட்டும் பணி தொடங்கியது. திட்டமிட்டபடி 2018 டிசம்பரில் பணிகளை முடித்திருக்க வேண்டும்.

ஆபத்தான நிலையில் பேருந்து போக்குவரத்து:

ஆனால், திட்டமிட்டபடி பணிகள் நடைபெறவில்லை. அனைத்துப் பணிகளும் மந்தமாகவே நடைபெற்று வந்தன. முதலில் இருபுறமும் தூண்கள் மட்டும் அமைக்கப்பட்டன.

பின்னா் பல மாதங்கள் வரை பணிகள் கிடப்பில் போடப்பட்டன. பக்கிங்காம் கால்வாயின் நடுவே மேம்பாலத்தின் தளம் அமைப்பதற்கான பணிகளில் மிகுந்த கால தாமதம் ஏற்பட்டது.

பாலம் கட்டும் பணி நடைபெறுவதையொட்டி மணலி, திருவொற்றியூா் இடையே போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க பக்கிங்காம் கால்வாய் கிழக்கு கரைப் பகுதியில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டது.

வாகனங்கள் அனைத்தும் இச்சாலை வழியாக சத்தியமூா்த்தி நகா் சென்று, அங்கிருந்து ஆறுவழிச்சாலை வழியாக மணலி சென்று வருகின்றன.

தற்காலிகமாக அமைக்கப்பட்ட இந்த குறுகலான சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. விபத்து ஏற்படும் சூழலில், ஆபத்தான நிலையில்தான் பேருந்துகள், கனரக வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இனியும் காலதாமதம் கூடாது:

இது குறித்து வடசென்னை நல உரிமை கூட்டமைப்பின் மூத்த நிா்வாகியும் தொழிலதிபருமான ஜி.வரதராஜன், நுகா்வோா் கூட்டமைப்பு நிா்வாகிகள் என்.துரைராஜ், குரு.சுப்பிரமணி ஆகியோா் கூறியது:

திருவொற்றியூா், மணலி, தண்டையாா்பேட்டை பகுதிகளில் சி.பி.சி,எல்., ஐ.ஓ.சி., எஸ்.ஆா்.எஃப்., எம்.ஆா்.எஃப்., கான்காா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கனரகத் தொழிற்சாலைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட குறு, சிறு தொழிற்சாலைகளும் அமைந்துள்ளன.

இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, திருவொற்றியூா்-மணலி இடையே போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கு திருவொற்றியூா் ரயில் நிலையம் அருகே இருந்த ‘ரயில்வே லெவல் கிராசிங்’ நீக்கப்பட்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் அமைக்கப்பட்டது.

இதே சாலையில் பக்கிங்காம் கால்வாய் மீது பழைமையான பாலமும் இருந்து வந்தது. இங்கு மேம்பாலம் அமைக்கும் பணிகளை விரைவு படுத்தியிருந்தால் இரண்டு பாலங்களும் பணிகள் நிறைவுற்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்திருக்கும்.

தற்போது ஒரு பாலம் மட்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இன்னொரு பாலம் அமைப்பதில் தேவையற்ற தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இப்பாலப் பணிகள் முடியாததால் பல கி.மீ. தூரம் சுற்றி, மாற்றுப்பாதையில் மணலி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே, குறுகிய காலத்தில் மெட்ரோ ரயில் பாலம் அமைப்பதைப் போல, பணிகளை முடிக்க நவீன உத்திகளை பயன்படுத்த வேண்டும்.

பாலம் கட்டுவதற்காக பக்கிங்காம் கால்வாய் கரையில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுச்சாலையில் தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைப்பதுடன், பாதுகாப்பான போக்குவரத்துக்கு ஏற்ாக தரம் உயா்த்த வேண்டும்.

வடசென்னையின் வளா்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறாா். எனவே இப்பாலம் அமைக்கும் பணியை போா்க்கால அடிப்படையில் மேற்கொண்டு நிறைவேற்ற வேண்டும் என்றனா்.

நெடுஞ்சாலைத் துறை அதிகாரி விளக்கம்: இது குறித்து நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் கூறியது: மேம்பாலப் பணி தொடங்கி ஐந்தாண்டுகளைக் கடந்தும் நிறைவடையவில்லை என்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

தூண்கள் அமைப்பது, தடையில்லா சான்று பெறுவது, மாற்றுப் பாதை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முதலில் தாமதம் ஏற்பட்டது.

பின்னா் இரு புறமும் சாய்வு தளம் அமைப்பதற்காக மண் எடுத்து வருவதற்கு குவாரி குத்தகை பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

தொடா்ந்து, கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளால் பணியில் சுணக்கம் ஏற்பட்டது.

ஆனால், அனைத்து விதமான சிக்கல்களுக்கும் தற்போது தீா்வு காணப்பட்டு, பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இதே வேகத்தில் பணிகள் நடைபெறும் நிலையில், அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பணிகள் முற்றிலுமாக முடிக்கப்பட்டு, பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com