மலாலா தினம் - ஒரு அமைதிப் போராளியின் நாள்

மலாலா யூசுப்கானை ஒரு அமைதிப்போராளி என்றுதான் சொல்ல வேண்டும். தலிபான்களால்  பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு இன்றும் பெண் குழந்தைகளுக்காகவும் அவர்களின் கல்விக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். 
மலாலா
மலாலா

மலாலா யூசுப்கானை ஒரு அமைதிப்போராளி என்றுதான் சொல்ல வேண்டும். தலிபான்களால்  பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு இன்றும் பெண் குழந்தைகளுக்காகவும் அவர்களின் கல்விக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். 

தலிப்பான்கள் இவர் மீது துப்பாக்கிசூடு நடத்தினார்கள். பாதிப்பிலிருந்து மீண்ட பிறகு தந்தையோடு சேர்ந்து  பெண்கல்வியின் முக்கியத்துவத்தை பரப்பவும் அதற்காக ஆதரவு திரட்டவும் அறக்கட்டளை ஒன்றை நிறுவினார்.  
இதனால் அவர் ஐக்கிய நாடுகள் சபையால்  அமைதி தூதரக நியமிக்கப்பட்டார். மேலும் அவருக்கு 2014-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. பாகிஸ்தானிலிருந்து முதன்முதலாக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் இவர்தான்.

ஏன் ஜூலை 12 மலாலா தினம்?

2013ஆம் ஆண்டு ஜூலை 12ம் தேதி மலாலா தனது 16ஆவது பிறந்தநாள் அன்று ஐக்கிய நாடுகள் சபையை தொடர்புகொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்த நிகழ்வை ஐக்கிய நாடுகள் "மலாலா தினம்" என குறிப்பிட்டுள்ளது. தலிபான்களால் சுடப்பட்டு, பல கட்ட சிகிச்சைக்கு பிறகு மீண்ட மலாலா, முதல் முறையாக பேசியது இதுவே ஆகும். அதனால் தான் ஜூலை 12 அன்று மலாலா தினம் கொண்டாடப்படுகிறது. 

தலிபான்களின் அடக்குமுறை 

மலாலா 'குல் மகாய்' என்ற புனைப்பெயரில் தனது சிறுவயது முதல் தலிபான்களின் அடக்குமுறைகள் பற்றி தொடர்ந்து எழுதி வந்தார். இவரது எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட  செய்தி நிறுவனமொன்று இவரை அங்கீகரிக்க விரும்பி இவரது பேட்டியை வெளியிட்டது. இதனால் மலாலா தலிபான்களால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டார். பள்ளி சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த மாலாவை தலிபான் பயங்கரவாதி ஒருவர் துப்பாக்கியால் தலையில் சுட்டார். இந்த பாதிப்பிலிருந்து மீள்வதற்கு ஒன்றரை வருடம் ஆனது.

நான் மலாலா 

தாலிபான்களால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட பிறகு தன்னை சுதந்திரமாக வெளிப்படுத்திக்கொண்டார் மலாலா. பின்னர் அவர் 'நான் மலாலா' என்ற புத்தகத்தையும் எழுதி வெளியிட்டார். 2015 ஆம் ஆண்டு 'நான் மலாலா' என்ற நிதி அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் மூலமாக பாகிஸ்தானின் முதல் கல்வி உரிமை மசோதா அங்கீகரிக்கப்பட்டது. 

ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிலைமை

தலிபான்களின் ஆட்சியில் பெண்கல்வியில் பல மாற்றம் கொண்டுவரப்பட்டது. பொதுவாக பெண்கல்வி மறுக்கப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் குழந்தைகள் கல்வி கற்க அனுமதிக்கப்படுகிறார்கள். அதிலும் 16 வயது நிரம்பியவர்களின் கல்வி என்பது கேள்விக்குறிதான். சில குறிப்பிட்ட மாகாணங்களில் மட்டும் ஆடைக்கட்டுப்பாடு மற்றும் நேரக்கட்டுப்பாட்டுடன் ஒரு சில பெண்கள் கல்வி கற்கின்றனர். தாலிபான்களால் பெண்கள் அந்தந்த மாகாணங்களில் மட்டுமே கல்வி கற்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

தனி நபர் போராட்டம் 

தலிபான்கள் பெண்களின் உயர்கல்விக்கு தடை விதித்துள்ளனர். இதனால் பட்டம் பெறவேண்டும் என்ற ஆசையிலிருந்து தடுக்கப்பட்ட பெண் ஒருவர்  கடந்த ஆண்டு டிசம்பர் 25 அன்று தான் படித்த பல்கலைக்கழகம் முன்பு 'படி' என்று பொருள்படும் வாசகம் பொருந்திய பதாகையுடன் தனி நபர் போராட்டம் நடத்தினார். 15 நிமிடத்தில் அவர் அங்கிருந்த துப்பாக்கி ஏந்திய காவலரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். இதுபோல தலிபான்களின் நடைமுறைக்கு எதிராக ஆப்கானிஸ்தானில்  பெண்கள் போராடுவதே துணிந்த செயல்தான். 

மலாலா புனைபெயரில் தன் எதிர்ப்பை வெளிப்படுத்தத்  தொடங்கி இன்று  ஒரு பெண்ணின் தனி நபர் போராட்டம் வரை முன்னேற்றம் அடைந்திருந்தாலும் ஆப்கானிஸ்தான் பெண்களால்   கல்வியில் முன்னேற்றம் காண முடியவில்லை. இதற்கு மலாலா பல வழிகளில் போராடி வருகிறார். இப்போது மலாலா கல்வி மற்றும் பெண்களின் உரிமைகளுக்கான உலகளாவிய தூதுவராக இருக்கிறார். மலாலாவின் வாழ்க்கையில் கல்விக்காக அவர் பட்ட துயரங்கள், அடக்குமுறைகள் முதல் பெண்கல்விக்கான அமைதிப்போராளியாக தன்னை நிலைநாட்டிக்கொண்டது வரை கரும்பலகை யுத்தம் புத்தகம் என்ற புத்தாக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. 

தன் வாழ்க்கையின் ஒரு பகுதிதான் கல்வி என்றில்லாமல் தன்  வாழ்க்கையையே கல்விக்கான போராட்டமாக மாற்றிய அமைதிப்போராளியின் பிறந்ததினமான இன்றுதான் 'மலாலா தினம்'....
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com