ஒரே நாடு ஒரே தேர்தல்: ஜூனிலேயே பணி தொடங்கிய ராம்நாத் கோவிந்த்!

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதற்கான பூர்வாங்கப் பணிகளை தொடங்கிவிட்டதாக தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.
ராம்நாத் கோவிந்த்
ராம்நாத் கோவிந்த்

மும்பை: முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த ஜூன் மாதமே ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதற்கான பூர்வாங்கப் பணிகளை தொடங்கிவிட்டதாக தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.

ஜூன் 2-ம் தேதி, புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டு நான்கு நாள்களுக்குப் பிறகு, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலர் டாக்டர் பி.கே.மிஸ்ரா ஆகிய இருவரும் சந்தித்தனர். 

அந்தச் சந்திப்பு, கோவிந்தின் வழிகாட்டுதலின் கீழ், மிகவும் விவாதத்திற்கு உள்ளாகியருக்கும் ‘ஒரு நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை  கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் குறிப்பிட்டுச் சொல்லப்போனால், கர்நாடக பேரவைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்த பிறகு இந்த ஆலோசனை தொடங்கியிருக்கிறது.

இந்த தோல்வி, உண்மையில் கட்சியை உலுக்கிவிட்டது என்றே சொல்லாம், மேலும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து அதிக கவலையை ஏற்படுத்தியது என்றும் கருதலாம். எனவேதான், ஒரே நேரத்தில் தேர்தல் என்ற வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஏன் ராம்நாத் கோவிந்த்?

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பெரிய அளவில் பின்புலம் இல்லாததும், மிகவும் சிக்கலான சட்ட நுணுக்கங்களைக் கையாளும் திறன் கொண்டவர் என்பதுவுமே இதில் ராம்நாத் கோவிந்த் இணைக்கப்பட்டதன் பின்னணி என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கும் மேலாக, அவர் மோடியின் நல்ல நம்பிக்கையைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பை தளர்த்துவதற்காக, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான களத்தை தயார் செய்யுமாறு மோடி தனது நம்பிக்கைக்குரிய கட்சி நிர்வாகிகளிடமும் ரகசியமாகக் கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை ராம்நாத் கோவிந்த், முறைப்படி ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் உறுப்பினர்களின் பெயர்கள் அடுத்தடுத்த நாள்களில் அறிவிக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை, மத்திய சட்ட அமைச்சக அதிகாரிகள் குழுவின் அடிப்படைப் பணிகளுக்காக ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். ஆனால், எல்லோருக்கும் தெரிந்ததுபோல, இப்பணிகள் இப்போது தொடங்கப்படவில்லை, அது கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கி, அடிப்படைப் பணிகளை முன்னாள் குடியரசுத் தலைவர் செய்து வருவதாகவே தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதையும் படிக்க.. ஒரே நாடு, ஒரே தோ்தல்: ராம்நாத் கோவிந்த் குழுவில் 8 போ்: அமித் ஷா, அதீா் ரஞ்சன் செளதரி, குலாம் நபி ஆசாத் இடம் பெற்றனா்

இதனை உறுதி செய்யும் வகையில், அவரது சமூக வலைத்தளப் பக்கங்களை, மேலோட்டமாகப் பார்த்தாலே, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் குறைந்தபட்சம் 10 மாநில ஆளுநர்களைச் சந்தித்த அவர் எவ்வாறு ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான அடிப்படைப் பணிகளை தயார் செய்தார் என்பதை யார் ஒருவரும் அறிந்துகொள்ள முடியும்.

பொதுவாக, ஓய்வுபெற்ற குடியரசுத் தலைவர்களுக்கு மிகப் பரபரப்பான பயணத் திட்டங்கள் எதுவும் இருக்காது. அவர்கள் பொதுவாக ஒவ்வொருளை நாளையும் மிக அமைதியாகவே கழிப்பார்கள். சிலர், ஒரு நினைவுக் குறிப்பு அல்லது இரண்டு நினைவுக் குறிப்புகளை சமூக ஊடகங்களில் பதிவு செய்யலாம். ஆனால்,  இதற்கெல்லாம் நேர்மாறாக, ராம்நாத் கோவிந்த், தொடர்ந்து பல மாநிலங்களின் ராஜ்பவன்களுக்கு நேரடியாகச் சென்று ஆளுநர்கள் மற்றும் பல முக்கிய கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசியுள்ளார். 

அதாவது, ஜூன் 9 மற்றும் ஆகஸ்ட் 29 க்கு இடையில், அவர் குறைந்தது 10 மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்துள்ளார். அவர்களில் சிலரை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை சந்தித்துள்ளார். இது மட்டுமல்லாமல், மூத்த கட்சித் தலைவர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவரையும் அவர் சந்தித்துள்ளார்.

கடந்த வாரம்தான், ஒரே நாடு ஒரே தேர்தல் குழுவின்  நியமனம் மத்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான அனைத்துத் திட்டங்களையும் தொடங்கி உறுதிப்படுத்துவது வரை பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டிருக்கிறது என்பதையே இந்த சந்திப்புகள் காட்டுகின்றன.

செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் 5 நாள்கள் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது இந்தக் குழுவின் அறிக்கையும் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல்.. எப்படி?

அதாவது, வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்டப் பேரவைகளுக்கான பதவிக்காலம் முடிவடையவிருப்பதால், அந்த சட்டப்பேரவைகள் முன்கூட்டியே கலைக்கப்படலாம்.

அதே நேரத்தில் கர்நாடகம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற அண்மையில் தேர்தல் நடைபெற்ற மாநிலங்களின் சட்டப்பேரவைப் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு காலம் நீட்டிக்கப்படலாம் என்பது இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் பின்னால் இருக்கும் திட்டமாக இருக்கலாம். இதனை இப்போது தொடங்கினால், அடுத்த மக்களவைத் தேர்தலின்போது, அதாவது 2029ல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்று கணிக்கப்படுகிறது.

மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒன்றாக நடத்துவது, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை சீர்குலைக்கும் என்று பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் குறிப்பிடுகிறார்.

அதாவது, மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில்  ஒரே நேரத்தில் கூட்டணி அமைப்பது என்பது கடினம். ஏனென்றால் ஒவ்வொரு கட்சியும் முதலில் தங்களது உள்ளூர் பலத்தைத் தற்காத்துக் கொள்ளவே விரும்பும்.

புது தில்லி, பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களிலும் கூட, ஆம் ஆத்மி - காங்கிரஸ் கட்சிக்கு இடையே இதே பிரச்னை எழலாம். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கைகோர்க்கும் மாநிலக் கட்சிகள், பேரவைத் தேர்தலின்போது முன்னிலை வகிப்பதற்காக போட்டிபோடும், இதனால் இந்தியா கூட்டணியின் ஒற்றுமை சீர்குலையும் என்று பாஜக நம்புகிறது, இது பாஜக தலைமையிலான கூட்டணிக்கு அதிக இடங்களைப் பெற்றுத் தரும்” என்று திட்டவட்டமாகக் கருதுவதாகத் அந்த தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com