மாஸ்கோ சென்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்த ஒன்றரை மாத காலத்தில் உக்ரைனுக்குச் சென்று இன்று, ஆக. 23, அதிபர் விளாடிமிர் ஸெலன்ஸ்கியைச் சந்திக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
இந்தப் பயணம், பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் இந்தப் பயணம் கவனம் செலுத்தும் என்று இந்திய, உக்ரைன் அலுவலர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆனால், ரஷியாவுக்கு ஆதரவாக இந்தியா இருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தவிர்க்கவே மோடியின் இந்தப் பயணம் என்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
மோடி ஏன் உக்ரைன் செல்கிறார்?
கெடுபிடிப் போர்க் காலத்தில் இந்தியாவும் ரஷியாவும் நெருங்கிய நட்பு பாராட்டிவந்த நாடுகள்.
உக்ரைனுக்குள் நுழைந்து ரஷியா தாக்குதல் நடத்துவதை நேரடியாகக் கண்டிப்பதை இந்தியா தவிர்த்துவந்த நிலையில், ஒன்றரை மாதங்களுக்கு முன் ரஷியாவுக்குச் சென்று அதிபர் புதினை மோடி சந்தித்துப் பேசியதால் ரஷியாவுக்கு ஆதரவாக இந்தியா இருக்கிறதோ என்ற தோற்றம் உருவானது.
இந்த நிலையில், இந்தியா யாருக்கும் ஆதரவாக இல்லை, நடுநிலையாகவே இருக்கிறது என்பதைத் தெரிவிக்கும் வகையிலேயே மோடியின் உக்ரைன் பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தியா – உக்ரைன் இரு நாடுகளிடையே தூதரக உறவுகள் எட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் முதல்முறையாக இந்தியப் பிரதமர் ஒருவர் உக்ரைன் செல்கிறார். போலந்தின் இருநாள் பயணத்தை முடித்துக்கொண்டு தரைவழியேதான் செல்கிறார் பிரதமர் மோடி.
ரஷிய பயணத்தால் நேரிட்ட சங்கடத்தைச் சரிக்கட்டும் நோக்கிலேயே இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் மோடி.
வாஷிங்டனில் நேட்டோ நாடுகளின் தலைவர்கள் திரண்டிருந்த நிலையில், உக்ரைனிலுள்ள ஒரு மருத்துவமனையின் மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்ட நேரத்தில்தான் ரஷியா சென்றிருந்தார் மோடி. மோடியும் புதினும் அரவணைத்துக்கொள்ளும் படத்தைப் பார்த்து, இந்தப் பயணத்தைக் கடுமையாகக் குறை கூறிய உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி, மோடி – புதின் சந்திப்பைப் பெரும் ஏமாற்றம் என்றும் அமைதி முயற்சிகளுக்குப் பெரிய அடி என்றும் குறிப்பிட்டார் ஸெலன்ஸ்கி.
புதினுடன் அருகருகே அமர்ந்திருந்த மோடி, ஏவுகணைத் தாக்குதல் பற்றி நேரடியாகக் கண்டனம் எதுவும் தெரிவிக்காதபோதிலும் ஒன்றுமறியா மக்களைப் பாதிக்கக் கூடிய எந்தவொரு தாக்குதலையும் கண்டிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
ரஷியாவுக்கு ஆதரவாக இருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தவிர்த்து இரு தரப்புக்கும் சமமாகவே – நிலைமையை இணையான முறையிலேயே – கையாளுவதாகக் காட்டும் முயற்சியாகவே மோடியின் உக்ரைன் பயணம் மேற்கொள்ளப்படுவதாக முன்னாள் வெளியுறவுத் துறை அலுவலரான கே.சி. சிங் தெரிவிக்கிறார்.
என்றாலும் இந்த உக்ரைன் பயணத்துடன் மாஸ்கோ பயணத்தைத் தொடர்புப்படுத்துவதை இந்திய அலுவலர்கள் தவிர்க்கவே முயலுகின்றனர். இதுவொன்றும் சமாதான முயற்சி அல்ல, விரிவான உறவுகள் தொடர்பானது என்று அரசு செயலர் தன்மயா லால் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு நாடுகளிடமிருந்து அழுத்தம் இருந்தபோதிலும் ரஷியாவுக்குக் கண்டனம் தெரிவிப்பதையும் ஐக்கிய நாடுகள் அவையில் அதற்கு எதிராக வாக்களிப்பதையும் இந்தியா தவிர்த்தே வந்திருக்கிறது. எந்தப் பக்கத்துக்கும் சார்பான நிலையெடுப்பதைத் தவிர்த்து, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் என்றே இரு நாடுகளையும் வலியுறுத்திவந்தது.
இந்தியாவின் பக்கச்சார்பற்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலும் வெளியுறவுக் கொள்கையில் இருதரப்புக்கும் இணக்கமான – இணையான தன்மையை உறுதி செய்யும் வகையிலேயே பிரதமர் மோடியின் பயணம் திட்டமிடப்பட்டிருப்பதாக இந்திய – பசிபிக் ஆய்வாளரான டெரக் கிராஸ்மன் குறிப்பிடுகிறார்.
ரஷியாவுடனான இந்திய உறவுகள் என்ன?
கெடுபிடிப் போர்க் காலத்திலிருந்தே இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையே வலுவான உறவு இருக்கிறது. 2022 பிப்ரவரியில் உக்ரைனுக்கு ராணுவத்தை ரஷியா அனுப்பியதிலிருந்து வணிகத்திலும் இரு நாடுகளுக்குமான உறவு வலுப்பெற்று வளர்ந்திருக்கிறது.
அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் ரஷிய ஏற்றுமதிகளைப் பெறுவதில்லை எனத் தடை விதித்ததால் மேலைச் சந்தை முற்றிலுமாக அற்றுப் போய்விட்ட நிலையில், ரஷியாவிலிருந்து இந்தியாவும் சீனாவும்தான் பெருமளவு எண்ணெய் இறக்குமதிகளைச் செய்து ரஷியாவுக்கு ஆதரவாக இருக்கிறது.
மோடியின் ரஷிய பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மற்றும் ராணுவ ரீதியிலான உறவை வலுப்படுத்துவதற்கான ஒன்றாகவே பார்க்கப்பட்டது. இந்திய ராணுவ சாதன – கட்டமைப்புகளில் சுமார் 60 சதவிகிதம் ரஷியாவிலிருந்து அல்லது ரஷிய தொழில்நுட்பத்திலிருந்து பெறப்பட்டவை. மேலும் தற்போது இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியிலும் 40 சதவிகிதத்துக்கும் அதிகம் ரஷியாவிடமிருந்தே.
இரு நாடுகளுக்கும் இடையிலான வணிகமும் 2023-24 நிதியாண்டில் 65 பில்லியன் டாலர்களைத் தொடுமளவுக்குக் கிடுகிடுவென உயர்ந்திருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனுடனான இந்திய உறவுகள் என்ன?
இந்தியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான வணிகம் மிகவும் குறைவே, ரஷிய படையெடுப்புக்கு முன்னர் சுமார் 3 பில்லியன் டாலர்கள். எனினும், இவற்றை மேம்படுத்த மோடியும் ஸெலன்ஸ்கியும் பன்னாட்டு நிகழ்வுகளில் சந்தித்துப் பேசிக்கொண்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டுத் தொடக்கத்தில் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா வந்து சென்றார்.
ரஷியாவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, உக்ரைனுக்கு ஏராளமான மனிதாபிமான உதவிகளை இந்தியா செய்துவருகிறது.
இந்த நிலையில் புதினுடனான சந்திப்பு பற்றி, குறைந்தபட்சம் வெளியில் தெரியும்படியாக, நரேந்திர மோடியிடம் ஸெலன்ஸ்கி எதுவும் பேச மாட்டார் என நம்பப்படுகிறது.
வெளிப்படையான அறிவிப்புகளில் எதுவும் இடம்பெறாவிட்டாலும் இந்த உக்ரைன் பயணத்தில் மோடியின் மாஸ்கோ பயணமும் இந்திய – ரஷிய உறவும் வலுவான உள்ளொழுக்காக இருக்கத்தான் செய்யும் என ஆய்வாளர் சித்திகி பாஜ்பாயி குறிப்பிடுகிறார்.
இந்தப் பயணம் எவ்வாறு எடுத்துக்கொள்ளப்படும்?
கடந்த ஜூலை மாதத்தில் புதினை மோடி சந்தித்தது குறித்து அதிருப்தியில் இருந்த அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளால் மோடியின் இந்தப் பயணம் நல்ல விதமாகவே எடுத்துக்கொள்ளப்படும் என்று கிராஸ்மன் தெரிவிக்கிறார்.
ஸெலன்ஸ்கியைத் திருப்தியுறச் செய்யவும் உக்ரைனில் இந்திய நலன்களைப் பாதுகாக்கவும் மேற்கை அனுசரித்துச் செல்லவும் பிரதமர் மோடிக்கு இதுவொரு வாய்ப்பாக அமையும் என்றும் கூறுகிறார் அவர்.
மோடியின் இந்த உக்ரைன் பயணம் மேலை நாடுகளுக்கு உத்தரவாதம் அளிப்பதாக இருந்தாலும் இந்தியா – ரஷியா உறவு பற்றிய கருத்தில் பெரிய மாற்றம் எதையும் ஏற்படுத்தும் வாய்ப்பு இல்லை.
உலகளவில் பெரியதனக்காரர்போல காட்டிக்கொள்ளும் முயற்சியாக, சில வட்டாரங்களில் பேசப்படுவதைப் போல, இரு நாடுகளுக்கு இடையிலான இந்தச் சண்டையைத் தீர்த்துவைப்பதற்கான சமாதான முயற்சிகளை மேற்கொள்ளும் பணியை மேற்கொள்ள இந்தப் பயணத்தை மோடி பயன்படுத்திக்கொள்ள மாட்டார்; சமாதான திட்டம் எதையும் இந்தியா முன்வைக்காது என்றே கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்தப் பயணத்தை அமெரிக்கா உள்பட பிற நாடுகள் எவ்வாறு நோக்குகின்றனவோ, அதைப் போலவே ரஷியாவும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது. பயணத்தின் முடிவைப் பார்க்கலாம்.