விஜய் என்ட்ரி! நாடாள முயன்ற நடிகர்கள்!

விஜய் என்ட்ரி! நாடாள முயன்ற நடிகர்கள்!

தமிழ்நாட்டில் நாடாள முயன்ற நடிகர்களைப் பற்றி...

திரைத் துறையில் மிக அதிக சம்பளம் பெற்றுக்கொண்டிருக்கும் நடிகர் விஜய் புதிதாக அரசியல் கட்சியொன்றைத் தொடங்கியிருக்கிறார் – தமிழக வெற்றி கழகம்!

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளைத் திரை நட்சத்திரங்கள் தொடங்குவது புதிதல்ல. ஆனால், எல்லாராலும் எம்.ஜி.ஆரைப் போல வெற்றி பெற முடிந்ததில்லை. இப்போது நடிகர் விஜய் முயற்சி செய்கிறார்.

இதுவரை கட்சி தொடங்கிய நடிகர்கள் யார், யார்? என்ன ஆனார்கள்?

திராவிட முன்னேற்றக் கழகம் என்ற வலுவான அரசியல் இயக்கப் பின்புலத்துடன் வளர்ந்துவந்தவர் என்பதுடன் தனித் தடத்தில், தமிழ்நாட்டு மக்களிடையே   தனக்கெனத் தனி இமேஜையும் உருவாக்கி வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர். எம்ஜிஆருடைய மிகப் பெரிய பலமாக இருந்தது அவருடைய ரசிகர்களும் அவர்களை ஒருங்கிணைந்திருந்த மன்றமும். ஒரு சந்தர்ப்பத்தில் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்க நேர்ந்தபோது, எளிதில் வெற்றி பெற முடிந்தது. வாழ்நாள் முழுவதும் தமிழ்நாட்டின் முதல்வராகவும் எம்ஜிஆரால் இருக்க முடிந்தது!

ஆனால்...

ஆனால், அடுத்து எம்ஜிஆருக்கு இணைவைத்துப் பேசப்பட்ட, புகழ்பெற்ற நடிகரான சிவாஜி கணேசன், அரசியல் கட்சியை – தமிழக முன்னேற்ற முன்னணியைத் தொடங்கினார். படாத பாடு பட்டும் வெற்றி பெற முடியாமல் வெறுத்துப் போய் ஒதுங்கிவிட்டார்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அதே நினைப்பில் கட்சி தொடங்கிய நடிகர் பாக்கியராஜாலும் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

திமுகவில் சிறப்பாகப் பேசப்பட்ட இயக்குநர் – நடிகரான டி. ராஜேந்தர் தாயக மறுமலர்ச்சிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். இன்னமும் வேறு பெயரில் கட்சி நடந்துகொண்டுதான் இருக்கிறது.

நம்ப முடியாத செல்வாக்குடன் ரசிகர் மன்றத்தினர் சூழ அரசியலுக்குள் நுழைந்தவர் நடிகர் விஜயகாந்த். பெரும் வரவேற்பு. மக்கள் பலம். கிராமந்தோறும் கிளைகள். கணிசமான வாக்குகள். ஜெயலலிதா காலத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு எதிர்க்கட்சித் தலைவராகவே ஆனார். சட்டப்பேரவையில் உணர்ச்சிவசப்பட்ட ஒரு தருணத்தில் நேரிட்ட சறுக்கலைத் தொடர்ந்து, விட்ட இடத்தைப் பிடிக்க முடியாமல் போய், பெரும் போராட்டத்துக்குப் பின், அண்மையில் மறைந்தார் விஜயகாந்த். பெருந்திரளாக மக்கள் திரண்டு வழியனுப்பிவைத்தனர்.

நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியையும் நடிகர் கார்த்திக் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியையும் தொடங்கினர். சரத்குமார் கட்சி மட்டும் இருக்கிறது. கார்த்திக் கட்சி காணாமலேயே போய்விட்டது.

முக்குலத்தோர் புலிப்படை தொடங்கப்பட்டது. திடீரென அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவைச் சந்தித்துவிட்டுத் திரும்பியதும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டு வெற்றியும் பெற்றார் நடிகர் கருணாஸ். அரசியலில் தொடருகிறார்.

கடைசியாக நடிகர் கமல்ஹாசனும் ஒரு கட்சியை ஆரம்பித்தார் – மக்கள் நீதி மய்யம். கடந்த பேரவைத் தேர்தலில் கோவையில் போட்டியிட்டபோது, நிச்சயம் வெற்றி பெற்றுவிடுவார் என்றே கூறப்பட்டது. ஆனாலும் தோற்றுவிட்டார். ஆனால், கட்சி இன்னமும் உயிர்த்திருக்கிறது. மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து கமல்ஹாசன் போட்டியிடக் கூடும் என்று கூறுகிறார்கள். தேர்தல் நெருங்கும்போது தெரிய வரலாம்.

சில பத்தாண்டுகளாகவே அரசியல் கட்சி தொடங்குவார் என எல்லாரையும் எதிர்பார்க்க வைத்திருந்து, அதற்கான வேலைகளை எல்லாமும் செய்திருந்தபோதிலும் திடீரென ஒரு நாள் ‘அரசியலே வேண்டாமப்பா, ஆளை விடுங்கள்’ என்று ஒதுங்கிக் கொண்டு, மீண்டும் திரைக்குள் சென்றுவிட்டார் நடிகர் ரஜினிகாந்த்.

எம்.ஜி.ஆரைப் போலவே ஆந்திரத்தில் மக்கள் பேராதரவுடன் வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்தவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்.டி. ராமாராவ். ஆனால், அவருக்கும் அரசியலில் வீழ்ச்சி இருந்தது. தொடர்ந்து நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண், ரோஜா போன்றோர் அரசியலில் நுழைந்திருக்கின்றனர். 20-க்கும் அதிகமான எம்எல்ஏக்களைப் பெற்றிருந்த சிரஞ்சீவி, ஒருகட்டத்தில் காங்கிரஸுடன் கலந்து அடங்கிப் போய்விட்டார்.

மற்றவர்களுக்கும் நடிகர் விஜய்க்கும் மிகப் பெரிய, மிகவும் முக்கியமான ஒரு வித்தியாசம் இருக்கிறது. மற்றவர்கள் எல்லாரும், அனேகமாக எம்.ஜி.ஆர். உள்பட, திரைத் துறையில் டல்லடிக்கத் தொடங்கிய நிலையில்தான் அரசியலுக்குள் நுழைந்தார்கள். ஆனால், விஜய்யோ உச்சத்தில் இருக்கும் நிலையில் திரைப்படத் துறையிலிருந்து விலகப் போவதாகவும் அறிவித்து அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார்.

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்.

காத்திருக்கிறது காலம், கூடவே மக்களும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com