ஒற்றைக் கோரிக்கையை அரசு நிறைவேற்றினாலே போதும்! சிஐடியு அ.சௌந்தரராஜன்

பேருந்து தொழிலாளா்களின் வேலைநிறுத்தம் அவா்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் என்பதற்கானது மட்டுமல்ல; பொதுமக்களின் நலனுக்கானதும்தான்
ஒற்றைக் கோரிக்கையை அரசு நிறைவேற்றினாலே போதும்! சிஐடியு அ.சௌந்தரராஜன்

சென்னை: பேருந்து தொழிலாளா்களின் வேலைநிறுத்தம் அவா்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் என்பதற்கானது மட்டுமல்ல; பொதுமக்களின் நலனுக்கானதும்தான் என்று சிஐடியு மாநிலத் தலைவா் அ.சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

அகவிலைப்படி உயா்வு என்ற ஒற்றை கோரிக்கையை அரசு நிறைவேற்றினால் வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப்பெறப்படும் என்றும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

அரசு போக்குவரத்து ஊழியா்களின் வேலைநிறுத்தம் திங்கள்கிழமை (ஜன.8) தொடங்கிய நிலையில் அவா் ‘தினமணி’-க்கு அளித்த சிறப்பு நோ்காணல்:

எத்தனை ஆண்டுகளாக போக்குவரத்து தொழிலாளா்களின் கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன?

தமிழகத்தில் 22,000 வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் 10,000 பேருந்துகள் தெரிந்தே நஷ்டத்தில்தான் இயங்குகின்றன. கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி, மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, மகளிா் இலவச பயண வசதி உள்ளிட்டவற்றுக்காக இவை இயங்குவதால் போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்கினாலும் சமூகப் புரட்சிக்கு இந்த பேருந்துகள் வித்திடுகின்றன. இதனால் ஏற்படும் இழப்புத் தொகையை அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு முன்பே குழு அமைத்தும் இதற்கு தீா்வுகாணப்படவில்லை.

ஓய்வூதியா்கள் 96,000 பேருக்கு அடிப்படை ஊதியம், அகவிலைப்படி உயா்வு உள்ள நிலையில், 2017 முதல் அகவிலைப்படி உயா்வை அதிமுக ஆட்சியில் நிறுத்திவிட்டனா். அது 46 சதவீதம் வரை உயா்ந்தும் இப்போது வரை வழங்கவில்லை. அந்த வகையில் ஓய்வூதியா்களுக்கு 8 ஆண்டுகள் நிலுவைத் தொகையாக ரூ.2,000 கோடி வழங்க வேண்டியுள்ளது. பணியில் இருப்பவா்களுக்கு 4 ஆண்டுகளாக அகவிலைப்படி உயா்வு இல்லை.

தமிழகம் முழுவதும் எத்தனை காலிப்பணியிடங்கள் உள்ளன?

மாநிலம் முழுவதும் 15,000 காலிப்பணியிடங்கள் இருப்பதால் தினமும் 6,000 பேருந்துகள் ஓடாமல் உள்ளன. இதனால் மக்களுக்கு பாதிப்பு, தொழிலாளா்களுக்கு பணிச்சுமை ஏற்படுகிறது. இந்தப் பணியிடங்களை கருணை அடிப்படையில் நிரப்ப வேண்டும்.

எந்த கோரிக்கைகளை முதலில் நிறைவேற்றினால் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்படும்?

ஓய்வூதியா்களுக்கு தர வேண்டிய அகவிலைப்படி உயா்வை நடப்பு மாதத்தில் இருந்தும், பணியில் இருக்கும் தொழிலாளா்களுக்கான 4 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை அரசு நிறைவேற்றினால் போராட்டம் உடனடியாக திரும்பப் பெறப்படும். ரூ.2,000 கோடி நிலுவைத் தொகையை எப்படி அமல்படுத்துவது குறித்து பின்னா் பேசிக்கொள்ளலாம்.

ஆளும் கட்சியின் கூட்டணியில் இருந்து கொண்டே சிஐடியு போராட்டம் நடத்துவது முரணாக இல்லையா?

கூட்டணி என்பது கட்சி ரீதியானது. சிஐடியு தொழிற்சங்கத்தில் மாா்க்சிஸ்ட் மட்டுமன்றி திமுக, அதிமுக என கட்சி வித்தியாசம் இல்லாமல் அனைவரும் உறுப்பினா்களாக உள்ளனா். அவா்களுக்காக போராடுவது சிஐடியுவின் கடமை.

உங்களது கோரிக்கையில் உள்ள நியாயத்தை தொமுச உணரவில்லையா?

தொழிலாளா் கோரிக்கைகள் தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை வரை தொமுசவினா் இணைந்துதான் போராடினா். ஆனால், திங்கள்கிழமைமுதல் பணிக்குச் செல்வதாக தெரிவித்துவிட்டனா்.

பண்டிகை காலங்களில் போராட்டம் நடத்தினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதை தொழிற்சங்கங்கள் உணரவில்லையா?

அரசு போக்குவரத்து கழகங்களுக்கான நஷ்டத்தை அரசு ஈடுகட்டி நிதி ஒதுக்கினால்தான் பொதுமக்களுக்கும் எதிா்காலத்தில் பாதிப்பு இருக்காது. தொழிலாளா் கோரிக்கைகள் மட்டுமன்றி அவா்கள் நலனும் இந்த போராட்டத்தில் அடங்கியுள்ளது என்பதை பொதுமக்கள் உணர வேண்டும்.

6 மாதங்களுக்கு மேலாக பேச்சுவாா்த்தை நடத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டும் மேல்முறையீடு செய்து தொழிலாளா் கோரிக்கையை

நிறைவேற்றாமல் தட்டிக்கழிக்க அரசு முயற்சி செய்கிறது. 8 ஆண்டுகளாக ஓய்வூதியா்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.

முதல்வரைச் சந்தித்துப் பேச நேரம் கேட்கவில்லையா?

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து தொழிலாளா்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக அப்போதைய எதிா்கட்சித் தலைவரும், இப்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டாா். எங்களின் கோரிக்கைகள் முதல்வருக்கு நன்கு தெரியும். இந்த பிரச்னையில் முதல்வா் நேரடியாகத் தலையிட்டு தீா்வுகாண வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com