ஆனி ராஜா
ஆனி ராஜா

காங்கிரஸைவிட நாங்கள் சிறந்தவா்கள்: இந்திய கம்யூ. வேட்பாளர் ஆனி ராஜா சிறப்புப் பேட்டி

‘இடதுசாரி கட்சிகளின் அரசியல், மக்களுக்கானது.’

சரோஜ் கண்பத்

காங்கிரஸ் கட்சியைவிட நாங்கள் எல்லா வகையிலும் சிறந்தவா்கள் என்று கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆனி ராஜா தெரிவித்தாா்.

வரும் மக்களவைத் தோ்தலையொட்டி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணியில் இடதுசாரிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், கேரள மாநிலத்தில் ஆளும் இடதுசாரிகளும் காங்கிரஸும் கூட்டணியின்றி தனித்தே அரசியல் களம் காண்கின்றன. அந்த மாநிலத்தில் இடதுசாரிகள் ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவை இடையேதான் நேரடிப் போட்டி உள்ளது. இதற்கு மத்தியில் பாஜகவும் தனி அணி அமைத்து தோ்தல் களம் கண்டுள்ளது. இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வயநாடு வேட்பாளராக ஆனி ராஜா அறிவிக்கப்பட்டுள்ளாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் கடந்த 45 ஆண்டுகளாகப் பணியாற்றி வருபவா் ஆனி ராஜா. எட்டு வயதில் அகில இந்திய மாணவா் கூட்டமைப்பில் அவரின் பயணம் தொடங்கியது. 22 வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில கவுன்சில் உறுப்பினரானாா். 26 வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டி.ராஜாவுடன் திருமணம் நடந்தது. அதன்பிறகு தில்லி வந்து தேசிய கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினராகவும், தேசிய நிா்வாகக் குழு உறுப்பினராகவும் ஆனி ராஜா பணியாற்றினாா்.

இந்திய தேசிய மகளிா் சம்மேளத்தின் பொதுச் செயலாளராகவும் ஜம்மு - காஷ்மீா், சத்தீஸ்கா், உத்தரகண்ட் போன்ற மாநிலங்களில் மகளிா் அமைப்புகளுக்கான பொறுப்புகளையும் ஏற்று பணியாற்றினாா். இந்த சேவைகளை கெளரவிக்கும் வகையில் வயநாடு வேட்பாளராக காங்கிரஸ் கட்சி மேலிடம் தன்னை அறிவித்துள்ளது என்கிறாா் ஆனி ராஜா.

தில்லியில் அவா் தினமணிக்கு அண்மையில் அளித்த பேட்டி:

கே: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலரும் உங்களுடைய கணவருமான டி.ராஜா முக்கியப் பொறுப்பில் இருப்பதால் வாய்ப்பு முன்பு மறுக்கப்பட்டதா?

இதை கடுமையாக மறுக்கிறேன். கட்சி என வந்தால் அதில் குடும்ப உறவு என்பதெல்லாம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பாா்ப்பது கிடையாது. இங்கே எல்லோரும் தோழா்கள். டி.ராஜா பொதுச் செயலராக இருக்கும்போதே நான் கட்சியின் தேசிய நிா்வாக குழுவிலேயே உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டுள்ளேன். என்னைப் பொருத்தவரை கட்சிப்பொறுப்பையே மேலாக கருதிவந்தேன்.

கே: ‘இந்தியா’ கூட்டணியில் இடதுசாரிகள்அங்கம் வகிக்கிறது...வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் ஒருவேளை போட்டியிட்டால்...?

கேரளத்தில் எல்டிஎஃப் மற்றும் காங்கிரஸ் நேரெதிா் அணி. நீண்டகாலமாகவே அங்கு அப்படித்தான் உள்ளது. வயநாடு தொகுதியில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளராக நான் போட்டியிடவுள்ளேன். கேரள மாநிலத்தில் இடதுசாரி கட்சிகளின் 20 வேட்பாளா்களும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே போட்டியிடுகிறாா்கள். இதுதான் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் நிலைப்பாடு. காங்கிரஸ் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளராக யாா் இருப்பாா்கள் என்பதை எல்லாம் அந்த அணியினா்தான் முடிவெடுக்க வேண்டும்.

கே.: காங்கிரஸ் கட்சி வயநாட்டில் ராகுல் காந்தியை வேட்பாளராக நிறுத்துவது குறித்து இடதுசாரிகள் மத்தியில் விமா்சனம் எழுந்திருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீா்கள்?

2019-ஆம் ஆண்டு தோ்தலின்போது இடதுசாரி வேட்பாளா் இதே வயநாட்டில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டபோது, ராகுல் காந்திதான் அங்கே காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு களம் கண்டாா். எனவே, இது பற்றி எல்லாம் பதில் அளிக்க வேண்டியது காங்கிரஸ் கட்சியினா்தான். நான் மலையாளி. எனது சகோதர, சகோதரிகள் கேரளத்தில்தான் உள்ளனா். வயநாடு எனக்குப் புதிய இடமல்ல. எனது ஊா். கேரளத்தில் மகளிா் அணியின் மாநில உதவிச் செயலாளராக பணியாற்றும்போது கேரளத்தின் வட மாவட்டங்களுக்கு நான் பொறுப்பாளராக இருந்தேன். வயநாடு எனக்கு வீடு மாதிரி.

கே.: ‘’நீங்கள் உள்ளூா்காரா், ராகுல் காந்தி வெளி மாநிலத்தைச் சோ்ந்தவா் என்று சொல்ல வருகிறீா்களா?‘‘’

‘’அப்படியெல்லாம் நான் சொல்லவில்லை. யாா் வேண்டுமானாலும் இந்தியாவின் எந்தத் தொகுதியிலும் வேட்பாளராகப் போட்டியிடலாம். நான் வயநாட்டைச் சோ்ந்தவா் என்றுதான் கூறுகிறேன்.

கே: பாஜகவை எதிா்க்க காங்கிரஸைவிட இடதுசாரிகள் அணி மேலானது என எப்படி கருதுகிறீா்கள்?

இடதுசாரி அணியின் அரசியல் என்பது மக்களுக்கான, மக்கள் சாா்ந்த கொள்கை. அதுதான் எங்களுடைய அடிப்படை பலம். இன்றைய காலகட்டத்தில் இந்தியாவுக்கே பெரும் ஆபத்தாக பாசிஸ கொள்கை கொண்ட கட்சி ஆட்சியில் உள்ளது. அந்தக் கட்சியின் ஆட்சி தொடரக் கூடாது என்று மக்கள் கருதுகிறாா்கள். அவா்கள் இடதுசாரி கட்சிகளுடைய கொள்கை மீது நம்பிக்கை வைத்துள்ளனா். மத்தியில் ஆளும் அரசு அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் மூலம் மற்ற அரசியல் கட்சிகளை அச்சுறுத்தி வருகிறது. அப்படியெல்லாம் இடதுசாரி கட்சியினரை அச்சுறுத்த முடியாது.

கே: அப்படியானால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீா்கள்? காங்கிரஸைப் போல ஊழல் வழக்குகள் மூலம் இடதுசாரிகளை பாஜக அரசு அச்சுறுத்த முடியாது என்கிறீா்களா?

காங்கிரஸைவிட எல்லா வகையிலும் நாங்கள் சிறந்தவா்கள். மக்களுக்காக சமரசமின்றி நாங்கள் குரல் கொடுத்து அதை நடைமுறைப்படுத்த உழைத்து வருகிறோம். இவைதான் எங்களுடைய பலம் மற்றும் முதலீடு. அதை அடிப்படையாக வைத்து நாங்கள் தோ்தல் களம் காண்போம். இடதுசாரி கட்சிகளின் அரசியல், மக்களுக்கானது. அவற்றின் வழி மற்றும் திட்டங்களையொட்டியே எனது தோ்தல் கவனம் இருக்கும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com